தயவிருந்தால் தருவானோ தாழ்ந்த இந்த நிலைப் பாடு!
ஆணினமும் பெண்ணினமும் அவனியிலே இரண்டு வைத்தான்,
அதற்குமென்ன தகுதி கண்டான் அந்நிலையை ஏன் மறுத்தான்?
ஊனமென்று வந்துவிட்டால் உயர்வுமென்ன தாழ்வுமென்ன?
உற்றவரே சொல்லுங்களேன் உண்மையிதை உணருங்களேன்!
என்ன பிழை செய்துவிட்டோம்,
எதற்கு நாங்கள் சபிக்கப் பட்டோம்?
எண்ணி எண்ணிப் பார்க்கையிலே எங்கள் உள்ளம் உடைந்துவிட்டோம்!
கண்ணினிமைப் போல நின்று காத்து வந்தபெற்றோரும்
கதறியதைக் கேளாமல் கை விடுத்தார் என் செய்வோம்?
அபஸ்வரமாய் ஒலிக்கும் இசை அழகெனவே மாறாதோ?
அபசகுனம் என்று சொல்லும் அவல நிலை அகலாதோ?
அல்லலுற்று அவதிப் படும் அந்தரமாம் நிலைதனிலே,
அடுத்து என்ன நிகழுமென்று அபயக் குரல் எழுகிறதே!
அனுதாபம் தேவையில்லை ஆதரவே போதுமையா,
பரிதாபப் பேச்சுக்களால் பலன் ஏதும் இல்லையையா!
பரிகாசம் செய்வோரும் பங்கமென்று பழிப்போரும்,
பிறவிப் பிழை இதுவெனவே புரிந்துணர மாட்டாரோ?
உலகினிலே எமது நிலை உயர்வதற்கே உதவிடுவீர்,
உறவுகளே உமது அன்பை உவந்தெமக்கு அளித்திடுவீர்!
ஊனமென்று ஏதுமில்லை எழுந்திடவே கை
கொடுப்பீர்,
No comments:
Post a Comment