Thursday, January 22, 2015

இளைய சமூகமே !!

ளைய சமூகமே !!
இதயத்தைக் கடன்கொடு ஈரமாக்கித் தருகிறேன் !!
கண்ணிலென்ன ஈரம்
காற்றுக்கேது தூரம் ?
இரவுகள் கருப்பானதற்கு யார்தான் பொறுப்பு -அது இயற்க்கையின் சிறப்பு .
இருட்டுக்கு இனி டார்ச்லைட் கேட்காதே...
இருகண்களின் ஒளிபோதும் இகத்தை ஒளிமயமாக்கு ..
முயலாக இருந்தாலும் முயலாமல் இருந்தால் தோல்வி நிச்சயம் ;
ஆமைகள் காத்திருக்கின்றன !..
சிகரத்தின் பாதையில் சிக்கல்களின் வாதையில் சிறிதும் பதறாதே ;
வாதையில்லா பாதை வாழ்க்கை பாதை ;
முன்பே வாழ்ந்தவர் பாதை !! ..
மயிலிறகு பட்டு மாய்ந்தவர் யார் ?..
சிறு நிழல் தடுக்குமா சூரியச் சூட்டை?.
காம்புக்கு வலிக்காமல் பூப்பறிப்பது எப்படி பூவுக்குத் தெரியாமல் தேனெடுப்பது எப்படி ?..
காலுக்கு முள் காத்திருக்கிறது செருப்பு சுமையென்போர்க்கு. சலவைக்குக் சம்மதிக்கா சட்டையின் ' முகவரி ' அழுக்கு !!..
தேன் சுமப்பதில்லை ஈக்களின் இன்னல் தாங்கா தேன்கூடு ...
போரில் பூமழை பொழியுமா ;
தேரில் வெற்றிகள் வருகுமா ?..
சூரியன் இங்கு சுருகுமா ;
சுற்றும் கோள்கள் உறங்குமா ?..
நீரில் நிழலும் மூழ்குமா ;நீ நீரா நிழலா தெரியுமா ?..
சோலைவனம் நிரந்தரமல்ல பாலைவனத்தில் நடக்கவும் பாதங்கள் பழகட்டும் !!.
புருவங்களுக்கும் உருவங்களுண்டு ...
காகிதங்கள் கவிதைகளாய் கருங்கற்கள் சிற்பங்களாய்
மூங்கில்கள் புல்லாங்குழல்களாய் மாறியது எப்படி ?.
விசும் காற்றுக்கு முகவரி எதற்கு ;
பேசும் மழலைக்கு மொழிகள் எதற்கு ?..
இதழ்கள் விரிந்தால்தான் வார்த்தை ;
இமைகள் விரிந்தால்தான்
பார்வை ..
நிலை கண்டு வருந்தாதே இலைகொண்டு மலைசுமப்போம் வா ..
நினைத்தால் முடியும் இமைகளின் இடுக்கில் இமயங்கள் சாத்தியமே ;
விரல்களின் சொடுக்கில் விஞ்ஞானம் வசப்படுமே ..
புருவ அசைவுகளில் புயலை அடக்கிடு ;
அச்சத்தீவின் மிச்ச வீரம் நீ ;
கண்ணீர்த்துளியின் கடைசிப்புன்னகை நீ ;
கைரேகைத் தேய்ந்தாலும் கனவைத் தேய்க்காதே ;
கண்பார்வை மாய்ந்தாலும் இலட்சியம் மாய்க்காதே ..
எரிமலைத் தொட்டு தெரிந்து
கொள் ;
நெருப்பு சுடுமாம் சுனாமியில் நீச்சல் பழகு நெருப்புக் கிண்ணத்தில் நீர் பருகு ..
புருவங்கள் இரண்டையும் கடிகார முள்ளாக்கிடு ;
புலனாய்வு செய்து
புது மொழி
காண் -அதற்கு இளமையெனப் பெயரிடு ..
கடல் நீரைக் குடி நீராக்க கடுகில் கருவி செய் ;
மின்சாரம் கண்டுபிடி சம்சாரத்தின்
கோபத்தில் ..
பூச்செடிகள் நடு புளுட்டோ சென்று ;
விஞ்ஞானத்தைச் சிறைபிடி விரல் நகச் சிறையில் ..
நிலாச்சோறு வேண்டாம்
நிலாவில் சென்று சோறுண்...
நினைத்தால் நிச்சயம் முடியும் அணைத்தால் எரிமலை அணையும் எதையும் தாங்கும் இதயம் உன்னில் ஆகட்டும் உதயம் இமயம் உட்பட எதையும்
உன்னால் பெயர்த்திட முடியும் ..
ஆணையிடு ஆதவன் மேற்கே உதிக்கும் வீணையெடு விண்வெளியில் இசைத் தெறிக்கும் ..
தோற்றுப்போன புனிதர்க்கும் தோற்க்கப்போகும் மனிதர்க்கும் சேர்த்தே வென்றிடுவாய் சிங்கமாய் நின்றிடுவாய் இளைய சமூகமே !!

No comments:

Post a Comment