Wednesday, January 28, 2015

விபரீதங்களை வேடிக்கை பார்க்கவா அரசாங்கம்?


விபரீதங்களை வேடிக்கை பார்க்கவா அரசாங்கம்?
*******************************************
இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சிறிய ரகக் கார்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது சமீபத்திய ‘குளோபல் என்.சி.ஏ.பி. ஆய்வு.
கார்களை வேகமாக ஓட்டிவந்து மோதிப் பார்க்கும் சோதனைக்கு உட்படுத்தியபோது, ‘சுசூகி-மாருதி ஆல்டோ 800’, ‘டாட்டா நானோ’, ‘ஃபோர்டு ஃபிஃகோ’, ‘ஹூண்டாய் ஐ-டென்’, ‘ஃபோக்ஸ்வேகன் போலோ’ ஆகிய ஐந்து சிறிய ரக கார்களும் ஒரு விபத்து நேரிட்டால், அப்பளம்போல நொறுங்கிப்போகும் வாய்ப்புடையவை என்பதும் அவற்றில் பயணிப்போருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் தெரியவந்திருக்கிறது.
இந்தச் சோதனையின்போது வெளிவந்திருக்கும் இன்னும் சில உண்மைகள் நம்மை மேலும் அதிரவைக்கின்றன.
இந்தக் கார்களில் காற்றுப் பைகள் கிடையாது. நிறுத்த முடியாத அளவுக்குக் கார் வேகமாகச் செல்லும்போது, இந்த காற்றுப் பைகளைப் பயன்படுத்தினால் காரின் வேகம் கணிசமாக மட்டுப்படும்.
ஆனால், இங்கு அவை பொருத்தப்படவில்லை. அதேசமயம், இதே கார்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கப்படும்போது அவை காற்றுப்பைகளுடனே விற்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டுகிறது அந்த ஆய்வறிக்கை.
இந்த ஆய்வறிக்கை வெளியான உடனேயே இந்தக் கார் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், “கார் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் தடுப்பதுதான் எம் முதல் நோக்கம்; அதற்கேற்ற தீவிர நடவடிக்கைகளை எடுப்போம்” என்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். 2012-ல் மட்டும் 1,40,000 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். இவற்றில் கார் பயணிகளின் இறப்பு சுமார் 17%.
பெருநிறுவனங்களுக்கு எப்போதுமே லாபமே முக்கியக் குறிக்கோள் என்பதும் இந்தியச் சந்தைக்கு அவை கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான் என்பதும் ஆச்சரியமானதல்ல.
ஆனால்…..
இப்படிப்பட்ட ஆபத்துகளை எல்லாம் அரசாங்கம் எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.

No comments:

Post a Comment