Saturday, March 2, 2019

உண்மையிலே இது ஏழாம் உலகமா இல்லை ஏழாம் நரகமா என்று தெரியவில்லை நமக்கு தெரியாத பல மனிதர்களின் கதை இல்லை


உண்மையிலே இது ஏழாம் உலகமா இல்லை ஏழாம் நரகமா என்று தெரியவில்லை நமக்கு தெரியாத பல மனிதர்களின் கதை இல்லை இல்லை பல ஆத்மாகளின் கதை. இப்படிபட்ட ஓர் உலகம் ( நரகம் ) இருக்கின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பதே பெரிய கேள்வி. அகோரமான உடல் அமைப்பு கொண்டவர்களை பிச்சை எடுக்க வைத்து அதன் மூலம் பிழைப்பு நடத்தும் பண்டாரம் அந்த மனிதர்களை எப்படி பயன்படுத்தி தன் தேவைகளை பூர்த்தி செய்கிறான் என்பதே கதை. இப்படி ஓர் பிழைப்பை நடத்தும் ஒருவனின் மறுபக்கத்தையும் காட்ட முயற்சி செய்திருக்கிறார் ஆசிரியர். தன் இளைய மகள் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொள்கிறாள் ஒரு நாள் மகள் வாழ்ந்து வரும் வீட்டின் வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை அவள் வீட்டின் அருகில் இருக்கும் கடையில் அமர்ந்து மகளை பார்ப்பதற்காக காத்து கொண்டிருக்கும் தருணம், மகள் கேட்ட வளையலை வாங்குவதற்கு மறந்துவிட்ட பண்டாரம் வீட்டிற்கு வந்த பிறகு வளையல் எங்கே என்று கேட்ட மகளை சமாதானப்படுத்த முயல்கிறான் அவளின் ஏக்கத்தையும் கண்ணீரையும் பார்த்தவன் அந்த நள்ளிரவே ஓடி சென்று ஆசாரியை எழுப்பி தங்க வளையல் வேண்டும் என்று 13 ஆயிரம் கொடுத்து வாங்கி வரும் தருணம், மகளுக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளையின் தொழில் பற்றி தெரிந்த பிறகு மாப்பிள்ளையின் அம்மாவிடம் அதை பற்றி கேட்டு வசவு சொற்களால் அர்ச்சனை வாங்கிய பிறகு வெறுப்புடன் இங்கே என் மகள் எப்படி வாழ்வாள் இது எல்லாம் சரி பட்டு வராது என்று செல்லும் பொது இது போன்ற பல தருணங்களில் பண்டாரம் ஓர் இளகிய மனம் படைத்தவன் என்று ஆசிரியர் நிருபிக்க முயற்சித்து இருக்கிறார் இருந்தாலும் முத்தம்மையை ஓர் குழந்தை பிறக்கும் இயந்திரமாக பயன்படுத்திய பண்டாரம் பிறக்கும் குழந்தை ஊனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வலுக்கட்டாயமாக உடல் ஊனமுற்ற குறை உள்ள மனிதர்களையே கூட விடுவதும், ஓர் நேரத்தில் முத்தமையின் ஒரு கை ஒரு கால் மட்டுமே உள்ள அந்த குழந்தையை வெயிலில் போட்டு பிட்சை எடுக்க வைத்து வெயில் கிரக்கத்தில் மயங்கும் குழந்தைக்கு அரைமணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து விடு ஒன்னும் ஆகாது என்று சொல்கிற பண்டாரத்தை இளகிய மனம் படைத்தவராக ஏதோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனும் ஒரு அரக்கனே என்று என் மனம் பதறுகிறது. இக்கதையின் உயிரோட்டமே நெல்லை நாகர்கோவில் வட்டார வழக்கு சொற்கள் தான். அருமையாக சொற்களை கையாண்டிருக்கும் ஆசிரியருக்கு நிகர் அவர் மட்டுமே.நாம் வாழும் இந்த உலகில் இதை போலவும் மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையும் அச்சமும் கலந்து வருகிறது. ஆசிரியர்க்கு நன்றி.