Tuesday, December 9, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 8. அண்ணாமையார் திருக்கோயில், திருவண்ணாமலை

 

8.   அண்ணாமையார் திருக்கோயில், திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலையில் அருணாசல மலைக்கு அடியில் அமைந்துள்ள ஒரு பழமையான கோயில் ஆகும்

இது பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாகும்பிரம்மா மற்றும் விஷ்ணு இடையேயான வாக்குவாதத்தின்போது சிவன் ஜோதி வடிவில் காட்சி கொடுத்தது, அதன் அடிப்படையில் மலை உருவானது என்றும் நம்பப்படுகிறது

திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்

சைவர்களின் நம்பிக்கைப்படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது.

பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் தனது மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை" எனக் கூறியுள்ளார்.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4-ம் நூற்றாண்டில் கருவறை, செங்கல்லால் கட்டப்பட்டது. 5-ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது.

6, 7, 8-
ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார்.

அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது.

817-
ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார்

இத்தலத்தின் மூலவர் அண்ணாமலையார் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய, விஜயநகர, தஞ்சை மன்னர்கள். மன்னர்கள் மட்டுமல்ல... மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

 
இக்கோயில் 6 பிரகாரங்களையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டதாகும்.

இக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள்,

1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம்,

அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.

நான்முகனின் தான் என்ற ஆனவத்தை அழித்த தலம் இது. ஆணவம் அழிந்தப்பின்னர் நான்முகன் வழிபடுவதற்காக சுயம்புவாக தோன்றிய சிவலிங்கமே தற்போதைய ஆதி அண்ணாமலையார் கோவிலில் உள்ளது. அது பிரம்மன் வணங்கிய சிவலிங்கம்.

திருவடியை தேடிச் சென்றத் திருமால் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு வணங்கிப் பணிந்தப்பின்னர் அவர் வணங்குவதற்காகத் தோன்றிய சுயம்பு லிங்கமே தற்போது அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூலவராகும்.

 

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது

இது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும் 

இங்குதான் மாணிக்கவாசகர் திருவெம்பாவைபாடினார்.‌ நினைத்தாலே முக்தி தரும் தலம் எனும் பெருமையைக் கொண்ட தலமாகவும் அறியப்படுகிறது.

விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் இந்த கோயிலில் உள்ளன.

இத்தலத்தின்மீது நால்வர் என்று அழைக்கப்படும்  அப்பர்சுந்தரர்சம்பந்தர்மாணிக்கவாசகர்  ஆகியோர் தேவாரம்  பதிகங்களைப் பாடியுள்ளார்கள்.

காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்.

 

ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான்.

 

திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான்.

 

அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

 

ஆணோடு பெண்ணும் சரிசமம் என்பதை அக்காலத்திலேயே உணர்த்த சிவபெருமானிடம் உமையம்மை அவருள் சரிபாதி கேட்டாள். இத்தலத்தில் தான் சிவபெருமான் தன்னுள் சரிபாதியை உமையம்மைக்கு அருளினார்.

 

இதை தேவாரத்தில்

"உண்ணாமுலை உமையாளொடு உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ" என்று சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

 

ஒவ்வொரு வருடமும் இதைக் கொண்டாடக் கார்த்திகை விளக்கீடு திருநாள் அன்றுத் திருவண்ணாமலை கோவிலில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் நேரத்தில் கோவிலில்

சிவபெருமான் மாதொருபாகனாக (அர்த்தநாரீஸ்வரர்) அலங்கரிக்கப்பட்டு வெளியே காட்சி தருவார் இதைப் பல லட்சம் பக்தர்கள் நேரிலும், செய்தி ஊடகங்கள் வாயிலாகத் திரையிலும் காண்பர்.

இத்தலம் வந்த மாணிக்கவாசகர் வெகுகாலம் இங்கேயே தங்கி திருவெம்பாவை இயற்றினார்.

ஆதி அண்ணாமலையார் கோவிலுக்கு அருகே அவர் திருவெம்பாவை இயற்றின இடம் இன்றும் உள்ளது.

அருணகிரிநாதர் முதன் முதலில் திருப்புகழ் பாடத்துவங்கிய இடம் இதுவாகும். இங்கு அருணகிரிநாதருக்கு விழா எடுக்கப்படுகிறது.

 

திருவண்ணாமலையை ஆட்சி செய்த  பிள்ளைகள் இல்லாத வள்ளால மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார், அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார்.

 

அது மட்டுமின்றி வள்ளால மகராஜா மரணம் அடைந்தபோது, அவருக்கு மகனாக இருந்து இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன.

இப்பொழுதும் ஆண்டு தோறும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் மகனாக இருந்து திதி கொடுத்து வருகிறார்.

இது போல வேறு எந்த சிவாலயத்திலும் இறைவன் சிவன் யாருக்கும் திதி தருவதில்லை.

 

தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

ஓம் நமசிவாய…

சுந்தர்ஜி

தமிழன் திமிரானவன்


 

No comments:

Post a Comment