1. 25.கைலாசநாதர் கோயில் தாரமங்கலம்
இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவி சிவகாமியம்மை.
இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒரே சிலையில் காட்சியளிப்பது வித்தியாசமான திருக்கோலம் மற்றும் அபூர்வமான விஷயமாகும்.
அதிலும் மகாவிஷ்ணு, லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானின் ஆவுடையாராக மாறியிருக்கிறார்.
பிரம்மதேவனும் கூட, நான்முகனாக மாறுவதற்கு முன்பு இருந்த 5 முகங்களுடன் காட்சியளிக்கிறார். விஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடியையும், முடியையும் தேடினர்.
அது இயலாமல் போனதால் இருவரும் சிவனை பூஜிக்க, அவர் சிவலிங்க வடிவில் இருவருக்கும் காட்சியளித்தார்.
அடி முடி தேடிய வரலாற்றை எடுத்துரைக் கும் வகையிலேயே, அடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணு, சிவலிங்கத்தின் அடியில் ஆவுடையாராக மாறியிருக்கிறார்.
அதே போல் முடியைத் தேடிச் சென்ற பிரம்மன், சிவலிங்கத்தின் மேற்பகுதியை தன்னுடைய கையில் தழுவியபடி காட்சி யளிக்கிறார்.
திருமால் தாரை வார்த்து கொடுக்க, சிவனுக்கும் பார்வதிக்கும் இங்குதான் திருமணம் நடந்ததாகவும் அதனால்தான் இது தாரமங்கலம் என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
அதிசயம் 1: கட்டிடக்கலை
நயமிக்க
சிற்பங்கள்
இந்த தாரமங்கலம் சிவன் கோயில் ஒரு தேர் போன்ற வடிவிலும், அதனை யானை மற்றும் குதிரை படைகள் கட்டி இழுத்துக் கொண்டு செல்வது போலவும், அந்தத் தேரின் ஒரு பகுதியில் அச்சு முறிந்திருப்பது போலவும் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதிசயம் 2: சூரிய தரிசனமும் சந்திர தரிசனமும்:
ஒவ்வொரு வருடத்திலும் மாசி மாதத்தில் வரும் மூன்று நாட்களான 9
முதல் 13ஆம் தேதி வரையிலான உத்திரயாண, தட்சணயான புண்ணிய காலங்களில் சந்திரன் மற்றும் சூரியனின் ஒளி கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் லிங்கத்தின் மீது விழும் சந்திரன் மற்றும் சூரிய ஒளி ராஜகோபுரங்களின் வழியே, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, மூன்று உள்வாயிலை கடந்து, கருவறையில் அமைந்துள்ள லிங்கத்தின் மீது படுவதைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது.
வருடம் தோறும் நிகழும் இந்த அற்புதமான நிகழ்வினை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடி சிவபெருமானை தரிசனம் செய்கிறார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.
அதிசயம் 3: யாழியின் வாயில் சுழலும் கல்:
யாளி சிலையின் வாயில் ஒரு கல் இருக்கும், அதை சுழற்ற முடியும். இது சிற்பிகளின் திறமைக்கு சான்று.
அதிசயம் 4: கல்லில் பேசும் கிளிகள் சுழலும் தாமரை:
மூலவருக்கு முன்புறம் உள்ள மண்டப மேற்க்கூறையில், ஏழு அடி நீளமும் அகலமும் கொண்ட ஒரே கல்லில், விரிந்த எட்டு தாமரை இதழ்கள் காணப்படுகிறது,
ஒவ்வொரு தாமரை இதழின் மீதும் தன் வாளால் ஒட்டிப் பிடித்தபடி ஒரு கிளிகள் தொங்கிக்கொண்டு தாமரை பூவின் நடு தண்டின் மீது போட்டிருக்கும் ஒரு கல் வளையத்தை தன் அலகால் பிடித்துக்கொண்டிருக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.
அந்த கல் வளையத்துக்கு கீழே இன்னொரு கல் வளையம் போட்டுள்ளனர், அந்த இரண்டாவது கல் வளையத்தை நீலமான கம்பு இருந்தால் நாம் சுற்றிவிட்டுப்பார்க்க முடியும்.
இந்த தாமரை இதழை சுற்றிலும் எட்டு திசைகளிருந்தும் வரும் துவார பாலகர்கள் தங்களின் வாகனங்கள் மீது அமர்ந்திருக்கும் காட்சியும், அவர்களுக்கு அருகில் பணிப்பென்கள் நிற்கும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் நடுவே எட்டு கற்சங்கிலிகள் தொங்கவிடப்பட்டுள்ளது.
கற்பனைக்கும் எட்டாத இந்த காட்சியை பார்த்து பிரமிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. சரியான பராமரிப்பு இல்லாமல் இந்த சிற்பங்கள் எல்லாம் சிதைந்து கொண்டிருக்கிறது.
அதிசயம் 5: குதிரை வீரன்
குரங்கு, அணில் போன்ற விலங்குகள் விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேற்கு பார்த்தபடி ஒரே கல்லிலான 13 அடி உயரத்தில் ஆறு கற்றூண்களில் குதிரையின் மீது அமர்ந்து வேட்டைக்குச் செல்லும் ஒரு வீரன் புலியை குத்தி கொல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
இதில், புலித்தலையில்
ஏறியிருக்கும் வீரனின் கையில் பிடித்திருக்கும் வேல் புலித்தலையின் மறுபக்கம் வெளியே வரும் காட்சியை அழகாகச் செதுக்கியுள்ளனர். ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்பங்களில், குதிரை மீது அமர்ந்துள்ள வீரன் மற்றும் குதிரையின் தோற்றம் வலது புறம் ஒரு முக அமைப்பிலும், இடதுபுறம் ஒரு வேறு முக அமைப்பிலும் இருக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது.
அதிசயம் 6: ** ரதி-மன்மதன் சிலைகள்:**
இரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் இரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது.அழகான ரதி-மன்மதன் சிலைகள் மற்றும் வாலி-சுக்ரீவன் சிற்பங்கள் உள்ளன.
அதிசயம் 7: வாலி இராமன் சிலைகள்
கோயில் முன்மண்டபத் தூண்களில் ஒன்றில் இராமன் உருவமும், மற்றொரு தூணில் வாலி உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.
வாலி சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்த்தால் இராமன் உருவம் தெரியாது. இராமன் சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்ந்தால் வாலி உருவம் தெரியும். இப்படிப்பட்ட கதைச் செய்தி கலைநூட்பத்துடன் வடிக்கப்பட்டுள்ளது
அதிசயம் 8: பாதாள லிங்கம்:
கருவறைக்கு கீழே ஒரு சிறிய பாதாள அறையில், லிங்கம் உள்ளது, இது இரவில் மட்டுமே தெரியும்.
அதிசயம் 9: மூன்று தலை மூன்று கால்
இத்தலத்தில் உள்ள சுரகேசுவரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு.
அதிசயம் 10: எறும்புக்கும்
பாதை
இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில் உலகிலேயே மிகச் சிறிய உயிரினமான எறும்புகள் நுழைய துளைகளை விட்டு செதுக்கிய சிற்பங்கள் அதிகமாக உள்ளது.
அதிசயம் 11: நீர் மேலாண்மை
மழைக்காலங்களில் கோவில்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் கோவில்களின் மேற்புறத்திலும், கோவில்களின் கோபுரங்கள் மீதும் விழும் மழை நீர் தேங்காமல் துளைகளின் வழியாக நேரடியாக வழிந்து அருகிலுள்ள நீர் தேக்கங்களை சென்றடையும் வகையில் மிகவும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.
நீர் மேலாண்மையில் நம் முன்னோர்களுக்கு இருந்த மிக நுட்பமான அறிவினை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
அதிசயம் 12: எண்கோணவடிவில் தெப்பகுளம்
இக்கோவிலின் தெப்பக்குளமானது எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் கல் எரிந்தால் அந்தக் கல் எட்டு இடங்களிலும் மோதிவிட்டு மீண்டும் பழைய இடத்திற்கே வந்து விடுவதாக நம்பப்படுகிறது.
அதிசயம் 13: சுரங்கப்பாதை:
இக்கோவிலில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய சொக்கநாதர் கோவிலுக்கு ரகசியமாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது.
அதிசயம் 14: ஐந்து தலை பிரம்மா
ஆற்றிலிருக்கும் மணலை சிவலிங்கமாக பிடித்து வைத்து பார்வதி பூஜை செய்துகொண்டிருக்கும் காட்சி, சாப விதிப்படி ஐந்து தலையுடன் இருக்கும் பிரம்மாவின் தலையை சிவபெருமான் ஒரு தலையை கிள்ளி எடுத்தபிறகு நான்கு முகங்களுடன் இருக்கும் காட்சியும் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
முதலில் ஐந்து தலையுடன் இருக்கும் பிரம்மா அடுத்த சிற்பத்தில் நான்முகனாக காட்சி கொடுக்கிறார்.
அதிசயம் 15: வேங்கை மர கதவு சிற்பங்கள்:
பிரம்மாண்டமான மேற்கு நோக்கிய கதவுகள் வேங்கை மரத்தால் செய்யப்பட்டு அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நேரில் பார்ப்பதுபோல தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. பாருங்கள் பிரமித்துப்போவீர்கள்.
இன்னமும் ஏராளாமான
அதிசயங்கள் இருக்கிறது… சொல்லிக்கொண்டே போகலாம். பதிவு நீண்டுவிடும் என்பதால் சுருக்கி
கொடுத்திருக்கிறேன். மற்றவற்றை நேரில் சென்று பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொள்ளுங்கள்.
1000 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும்
அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை
சிந்தித்திருப்போம்.
ஓம்
நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்


No comments:
Post a Comment