Tuesday, December 9, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 5. ஐராவதேஸ்வரர் திருக்கோயில் தாராசுரம் கும்பகோணம்


1.  5.  ஐராவதேஸ்வரர் திருக்கோயில் தாராசுரம் கும்பகோணம்

 

தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில், 12 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

முதலில் இக்கோயிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டுப் பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது

இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது.

தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று என்று தல புராணம் தெரிவிக்கிறது.

இக்கோயிலுக்குள் காணப்படும் இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை இக்கூற்றுக்குச் சான்றாக உள்ளது.[

தாரகாசுரன் வழிபட்டு வரம் பெற்ற தலம் என்பதாலும் இது ஐராவதேஸ்வரம் என்று ஆனதாகவும் கூறப்படுகிறது. தேர் வடிவிலான இந்த கோயிலை யானைகள் இழுத்துச் செல்வதுபோல அமைந்துள்ளது. இதனால் இது கரக்கோயில் எனப்படுகிறது.

எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் "எமதீர்த்தம்" என அழைக்கப்படுகிற்து.

கருவறையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது.

சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது.

குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம்.

கந்த புராணம் முழுவதும் சித்திரிக்கப் பெற்றிருப்பதைப் பார்த்தால், சிலிர்த்துப் போவீர்கள். கச்சியப்ப சிவாச்சார்யரின் கந்தபுராணம் எழுதப்படுவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு கந்தபுராணம் சிற்பங்களாக வழங்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று!

கோயிலின் மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய காலணி அணிந்திருக்கிறார். (ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முதன் முதலில் காலணி பயன்படுத்தியது தமிழர் மட்டுமே)

அதிசயம் :1 ஒரே இடத்தில் 40 ஆயிரம் சிற்பங்கள்

40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்களைக் கொண்ட அபூர்வ கோயில் இது.

விரல் நுனி அளவில் தொடங்கி விரல், கை, முழம், முழங்கை பிறகு எட்டு வகையிலான எட்டு தாளம், நவ தாளம், தச தாளம் என எல்லாவகை அளவுகளிலும் சிற்பங்களைக் கொண்ட அதிசய கோயில் இது

அதிசயம் : 2 கல்சாளரங்கள்

பிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க கல்சாளர மண்டபங்களாகும்.

இம்மண்டபங்களில் சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கிரானைட் கல்சாளரங்கள் அமைந்துள்ளன.

அதிசயம் :3 இசை படிக்கட்டுகள்:

கோயிலுக்கு வெளியே நந்தி மண்டபத்துக்கு அருகே பலிபீடத்துக்கு ஏறும் படிகள் ஏழு ஸ்வரங்களை இசைக்கும் இன்னிசைப் படிகளாக அமைந்து உள்ளன.

இந்தக் கல் படிக்கட்டுகள் திடமான கிரானைட் கற்களால் செய்யப்பட்டவை. சரியான சுருதி மற்றும் வடிவவியலுடன் அவை செதுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் ஒவ்வொரு படியிலும் கால் வைக்கும்போது, ஏழு ஸ்வரங்கள் (, ரி, , , , , நி) ஒலிக்கும்....கையால் தட்டின்னாலும் கல்லால் உருட்டினாலும் ஒவ்வொரு கல்லிலும் இருந்தும் இசை வரும்

அதிசயம் :4 வள்ளாவிகள்

கோவிலின் மிக முக்கியமான அமைப்பு – வள்ளாவிகள்

கோவில் சுற்றுபிரதேசங்களில் பெரும்பாலும் கருவறையினைச் சுற்றியுள்ள தரைதளக் கற்களில்  வட்ட விளிம்புகள் காணப்படும்.

இது  கோவிலில் கருவறையைச் சுற்றிலும் ஒளியை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்ட வட்ட வடிவிலான வள்ளாவிகள்.

வட்ட விளிம்பில் உட்புறத்தில் சிறிதளவு நீர் விட்டு நடுவில் தீப விளக்கு வைத்தால் தீப ஒளியானது நீரில் பட்டு ஒரு தீபம் பல விளக்குகள் போலக் காட்சித் தரும்

இதைப்போன்று பல வள்ளாவிகள் வைக்கும் பட்சத்தில் அலங்கார விளக்குகளை கோவில் சுற்றுபிரேதேசங்களில் அமைத்தாற்ப் போல ஒளிரும்.

உதாரணமாக கோவில்களில் மூலவர் சிலைக்கு பின்னால் பல பட்டை கண்ணாடி எவ்வாறு ஒரு தீபத்தை பல தீபங்களாக பிரதிபலிக்கின்றதோ அதே போன்றே வள்ளாவிகளும் ஒளிரும்.

சூரிய சந்திர கிரகணங்களை கணிக்க உதவியது என்றும் கிரகணங்களில் போது வானை நோக்காமல் வள்ளாவியை நோக்குவர்.

அதிசயம் :5 ஒரே சிலையில் இரண்டுவித உணர்ச்சிகள்

ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தி என்ற ஆனை உரிச்ச தேவரின் சிற்பம் அற்புதமானது. (இது இப்போது இந்த கோயிலில் இருந்து எடுத்துச்சென்று தஞ்சை கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது)

ஸ்ரீகாலபைரவராக கஜாசுரன் என்ற அரக்க யானையின் உடலுள் புகுந்து, அதனைக் கிழித்தவாறு ஆடிக்கொண்டே வெளிவரும் அண்ணலைக் கண்டு உமாதேவி அஞ்சி, தன் கையில் அணைத்துள்ள குழந்தை முருகன் அந்தக் கோலத்தைப் பார்க்காதபடி மறைத்து நிற்கிறாள்.

அது கண்டு, கோபத்துடன் இருந்த ஆடுத்தேவர் புன்னகை செய்கிறார்.

அற்புதமான இந்தச் சிலையின் 45 டிகிரி கோணத்தில் ஒரு பக்கம் இருந்து பார்த்தால், முகத்தில் கோபம் தெரியும்.

அதே முகத்தில் தேவி இருக்கும் திசையில் 45 டிகிரி கோணத்திலிருந்து பார்த்தால் புன்னகை தெரியும். ஒரே முகத்தில் இரண்டு விதமான பாவங்களைச் சிற்பி காட்டியுள்ளார்.

அதிசயம் :6 3டி சிற்பம்

ஒரே கல்லில் யானை மற்றும் காளை சிற்பம் உள்ளது. இது ஒரு ஒளியியல் மாயை சிற்பமாகும்,

இதில் யானையின் உடலை மறைத்தால் காளையின் உருவமும், காளையின் உடலை மறைத்தால் யானையின் உருவமும் தெரியும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. 

 

இது ஒரே கல்லில் இரண்டு விலங்குகளின் உருவத்தை ஒரே தலையுடன் வடிக்கப்பட்டுள்ளது.

சிற்பத்தை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும்போது யானையின் உருவத்தையும், காளையின் உருவத்தையும் காண முடியும்.

 

2004-ல்  ஐராவதேசுவரர் கோயில் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

சரித்திரத்தின் பிரமாண்ட பிரவாகத்தை தன்னுள் வைத்திருக்கும் தாராசுரம் கோயிலின் பெருமைகள் காணக் காண பிரமிப்பு அடையச் செய்பவை.

வாருங்கள் சோழர் உலாவுக்கு! சரித்திரமும் சமயமும் கலந்த யாத்திரை உங்களை அழைக்கிறது.

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

ஓம் நமசிவாய…

சுந்தர்ஜி

தமிழன் திமிரானவன்

 

No comments:

Post a Comment