Tuesday, December 30, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 27. ஆவுடையார் ஆத்மநாதசுவாமி கோயில் திருப்பெருந்துறை

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்

27. ஆவுடையார் ஆத்மநாதசுவாமி கோயில் திருப்பெருந்துறை

ஆவுடையார்கோயில் என்ற ஆத்மநாதசுவாமி கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.

ஏறத்தாழ ஆயிரத்திஎழுநூறு ஆண்டுகளுக்கு முன்னாலே இத்திருக்கோயில், இறைவனின் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் எழுப்பப்பட்ட கோயில்

புராணப் பெயர் சதுர்வேதி மங்கலம், சிவபுரம்.
ஈசனின் திருநாமம் ஆத்மநாதர்.

அம்பிகை யோகாம்பாள்.

தல விருட்சம் குருந்த மரம்.

மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே காணப்படுகிறார். அதன் மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது.

குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக ஆத்மாக்களை காத்தருளுபவர் என்பதால் சுவாமிக்கு 'ஆத்மநாதர்' என்று பெயர்.

அம்பாள் ஸ்ரீ யோகாம்பாளும் விக்கிரகத் திருமேனியாக இல்லை. அவளது திருவடிகளை மட்டுமே தரிசிக்க முடியும்.

திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்த திருத்தலம்.

நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும்.

அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம்.

உருவம் இல்லை – அருவம்தான்

தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன.

ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது.

மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது..
தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது.

அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது.

இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம்.

இந்த விமானத்திலுள்ள மரங்கள் எல்லாமே தேவதாரு மரத்தால் ஆனவையாகும்.

கொடிமரம் - பலிபீடம் - நந்தியும் இல்லை

இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை.

நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை.

மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

அதிசயம் :1 கொடுங்கை

ஆவுடையார் கோவில் கொடுங்கை என்பது, மிகவும் நுணுக்கமான மற்றும் மெல்லிய வேலைப்பாடுகளுடன் கூடிய வளைவான கூரை அமைப்பு ஆகும்;

இது தேக்கு மரச்சட்டம் மற்றும் குமிழ் ஆணிகள் போன்ற வடிவமைப்புகளை கல்லிலேயே செதுக்கி,

மர வேலைப்பாட்டை மிஞ்சும் அளவுக்குச் சிற்பக் கலையின் உச்சமாகத் திகழ்கிறது, குறிப்பாகப் பஞ்சாட்சர மண்டபத்தில் காணப்படும் இவை, கட்டிடக்கலைக்கு ஒரு தனித்துவமான அழகைக் கொடுக்கின்றன

கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில் (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.

ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும்.

இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.

அதிசயம் :2 ஒரே கல்லிலான கற்சங்கிலி

திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் ஒரே கல்லால் ஆன கற்சங்கிலி 10 -15 வளையங்கள் கொண்டு ஒரே கல்லினால் செதுக்கப்பட்டு உயரத்தில் பொருத்தி தொங்க விடப்பட்டுள்ளது.

சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

அதிசயம் :3 அணையா நெருப்பு

இங்கு 6 கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும் அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை

அதிசயம் :4 வற்றாத 5 அடி கிணறு

இந்தக் கோவிலுக்குள் கருவறைக்கு மிக அருகில் 2 கிணறுகள் உள்ளன. இதில் 5 அடி ஆழத்தில் இன்றும் தண்ணீர் ஊறுவது அதிசயத்திலும் அதிசயம்.

அதிசயம் : 5 கவிபாடும் கற்சிலைகள்

உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன.

அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது.

இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.

இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது.

குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும்.

குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும். பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளைநிறம் இருக்கும். நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும்.

இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச கல்யாணி குதிரையாகும்.

சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன.

அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.

அதிசயம் :6 1000 ஆண்டுகளுக்கு முந்திய ஓலைச்சுவடி

இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இன்னமும் ஏராளாமான அதிசயங்கள் இருக்கிறது… சொல்லிக்கொண்டே போகலாம். பதிவு நீண்டுவிடும் என்பதால் சுருக்கி கொடுத்திருக்கிறேன்.

மற்றவற்றை நேரில் சென்று பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொள்ளுங்கள்.

1700 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த

கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .

தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

ஓம் நமசிவாய…

சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்

 

No comments:

Post a Comment