Tuesday, December 9, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம். 11. நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி


11. நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி
இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்
இராம கோனார் கால் இடறி கொண்டு சென்ற பால் கொட்டியதால் கால் இடறிய அந்த கல்லை மண் வெடியால் அகற்ற முயலும்போது வெளிப்பட்டதே கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம்.
அதில் தற்பொழுதும் இராமகோனார் மண் வெட்டியால் பதித்த தடம் தெரியும்.
இது வேணுவனநாதர் கோயில் என்கிற பெயருடன் வழங்கி வந்தது
நெல்லையப்பர் கோவில் இரு மூலவரைக் கொண்ட துவிம்மூர்த்தி என்ற வகை கோவிலாகும்.
இரு மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயன கோலத்திலும் அருகருகே தனித்தனி சன்னதியில் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர்.
ஊர் பெயர் காரணம்:
உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்கலானார்கள்...
சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்.
திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ் மிக்க தலமாக விளங்குகிறது.
அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்திலும், சொக்கநாத பிள்ளையால்
காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது.
இத்திருத்தலம் 32 தீர்த்தங்கள் கொண்டது என்கிற பெருமையுடையது.
கோவிலில் காணப்படும் மிகப் பழமையான கல்வெட்டு “சோழன் தலை கொண்ட பாண்டியனின்” கல்வெட்டு (நான் தேடிய வரை).அவன் வாழ்ந்த காலம் கி.பி. 944-966 .இம்மன்னனது கல்வெட்டு தமிழ் வட்டெழுத்துகளில் பதிவு செய்யப் பட்டுள்ளது
கல்வெட்டுகளில் பெரும்பாலும் திருநெல்வேலி உடையார் அல்லது திருநெல்வேலி உடைய நாயனார் என இறைவன் குறிப்பிடப் பட்டுள்ளார்.
சோழ நாட்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர் இராஜராஜ பாண்டி மண்டலத்து இராஜராஜ வளநாட்டு கீழ் வெம்பு நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற்கால பாண்டிய கல்வெட்டுகள் குலசேகர பாண்டிய சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடுகிறது.
இக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்தது.
அதிசயம் 1: தாளச்சக்கரம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் மேற்கு பிராகாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆறுமுகநயினார் சன்னிதி முன் மண்டபத்தில் தாளங்களை விளக்கும் தாளச்சக்கரம் ஒன்று பதிப்பிக்கப்பட்டுள்ளது.
சூளாதி சப்த தாளம் முப்பத்தைந்து தாள வகை இந்த சக்கரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சக்கரம் தாமரை வடிவமாக அமைந்துள்ளது.
கல்லில் தாமரை இதழ்களில் தாளத்தில் ஆறு அங்க அடையாளங்களும் லகுவின் ஜாதி பேதங்களால் உண்டான முப்பத்தைந்து தாளங்களும்
செதுக்கப்பட்டுள்ளன.
இந்த சக்கரத்தில் காணப்படும் லகுவின் ஜாதி பேதங்களின் அடையாளங்கள் தற்கால வடிவத்திற்கு மாறுபட்டு இருக்கின்றன.
அதிசயம் 2: இசைத்தூண்கள்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் ஆலயத்தின் மணிமண்டபத்தில் ஒரே பெருங்கல்லில் நாற்பத்தி எட்டு சிறு தூண்களைக் கொண்ட கூட்டமாக அமைந்துள்ள இசைத்தூண்கள் சிறப்புடையன.
அவ்வாறு கீழ் பக்கம் நான்கும் மேற்பக்கம் நான்கும் வட, தென்பக்கங்களில் இரண்டுமாக பத்து தூண் கூட்டங்கள் உள்ளன.
அவற்றில் மொத்தம் நூற்றி அறுபத்தி ஒன்று தூண்கள் உள்ளன. அவை அனைத்தும் ஒலி தரக்கூடியன என்றாலும், முதல் தொகுதி தூண்களே இனிய நாதமுள்ளவை.
பலவித ஓசை விகற்பங்களை உடைய இந்தத் தூண்கள் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவை.
இந்த இசைத் தூண்களானது ஒரு நீளமான பாறையை
வெட்டி எடுத்து அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர். இந்த ஒவ்வொரு சிறிய தூண்களைத் தட்டினால் சப்த சுரங்களான தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது.
சில பெரிய தூண்களை சுற்றி இடம்பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது.
இதில் பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும் அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின் இசையை தருகின்றது.
இந்த இசைத் தூண்களை ‘மிடறு’ என்று அழைத்தார்கள்.
மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான சரியான சுரம் கிடைக்கும்.
இது போன்ற இசை தூண்கள் உலகில் வேறு எங்கும் கிடையாது.
எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான அலைக்கற்றையை உருவாக்கும் விதத்தில் எப்படி உருவாக்கினார்கள் என்பது இன்று வரை வியப்பை மட்டுமே தருகிறது.
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி கழகத்தின் இயற்பியல் பிரிவு விஞ்ஞானிகள் இந்த தூண்களின் வடிவமைப்பு, இதிலிருந்து வெளிப்படும் இசை போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
தன்மைக்கு ஏற்ப மாறுபட்டு இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் சப்தம் உருவாவதாக மட்டுமே ஆய்வின் முடிவில் தெரிவித்தனர்.
ஆனால் இந்த தூண்களை எப்படி வடிவமைத்திருப்பார்கள் என்பது தற்போதும் விடை தெரியாத புதிராக மட்டுமே உள்ளன.
இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வழிபடுத்தும் ஒரு முறை ஆகும்.
ஆனால் கற்களால் செதுக்கப்பட்ட இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே செல்வதற்கு துவாரம் ஏதும் கிடையாது.
அப்படி இருக்கையில் எப்படி ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான இசையை எழுப்ப முடியும் என்பது விஞ்ஞானிகளை இன்று வரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதிசயம் 3: மயன் குறியீடு
கோயில்களில் மயன் குறியீடு உள்ள ஒரே கோயில் நெல்லையப்பர் கோயில் மட்டுமே…
அதிசயம் 4: மூன்று முகம் மூன்று கை, மூன்று கால் கொண்ட ஜுரதேவர்
மூன்று முகம், மூன்று கால்கள், மூன்று கரங்கள் கொண்ட ஜுரதேவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இவருக்கு வென்னீர் அபிஷேகம் செய்து நெற்றியில் மிளகு பற்று போட்டால் எத்தகைய கடுமையான காய்ச்சலும் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை ஆகும்
அதிசயம் 5 ஆயிரங்கால் மண்டபம்
இந்த மண்டபம் ஐநூற்றிஇருபது அடி நீளமும், அறுபத்தி மூன்று அடி அகலமும், ஆயிரம் தூண்களையும் உடையதாகும்.
இந்த மண்டபத்தில் தான் காந்திமதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபமாக உள்ளது.
கீழ்ப்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்..
கடல் நீரோட்டம் மூலம் நீந்தாமல் சுலபமாக இடம் பெயரும் ஆமை சிற்பம் இருக்கும் ஒரு சில கோயில்களில் இது முதன்மையானது..
கடல் ஆமை மூலமாகவே எந்தவிக்த தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் பாய்மர படகில் நெடுந்தூரம் பயணித்தான் தமிழன்.
பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன்.
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்


 

No comments:

Post a Comment