Tuesday, December 9, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 6. மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் - மதுரை

 

6.   மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் - மதுரை

மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் வரலாறு, பாண்டிய மன்னன் மலையத்துவஜன் மற்றும் காஞ்சனமாலை ஆகியோரின் மகளான மீனாட்சி, சிவபெருமானை மணப்பதற்காக கயிலையிலிருந்து மதுரைக்கு வந்து, திருமணம் செய்து கொண்டதை அடிப்படையாகக் கொண்டது. 

உண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது இந்திர தேவன் என சொல்லப்படுகிறது.

இந்த ஆலயம், மீனாட்சியையும், சிவபெருமானையும் மூல மூர்த்திகளாகக் கொண்டு, சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் சிறப்புடன் செயல்படுகிறது.

கல்வெட்டுகளின்படி, இந்தக் கோயிலின் பெயர் மாடக்குளக்கீழ் மதுரோதய வளநாட்டு மதுரையில் திரு ஆலவாய் உடைய நாயனார் திருக்கோயில்" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்மனை "திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்" என்றே குறிப்பிட்டுள்ளனர்.

1898ம் ஆண்டின் கல்வெட்டில் தான் மீனாட்சி - சுந்தரேசுவரர் என்ற பெயர் காணப்படுகிறது.[

"கி.பி. 1190 - 1216ல் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனான ஜடாவர்மன் குலசேகர பாண்டியனின் காலத்தில்தான் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து கோவிலைக் கட்டினார்.  இந்தக் கோயில் கல்லால் கட்டப்பட்டது.

ஆனால், அந்தக் கோயில் ஏதோ காரணத்தால் அழிந்துவிட இப்போது இருக்கும் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும்,  முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கட்டினார்.

அவனுக்குப் பின்வந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கோயில் புதுப்பிக்கப்பட்டது இது கல்வெட்டுகளில் இருந்து தெரியவருகிறது

சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும்.

இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.

ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.

பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.

 

இக்கோயில் தமிழ்நாட்டில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது.

இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும். காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம், உச்சி காலத்தில் மடிசார் புடவை, மாலை நேரத்தில் தங்க கவசம், வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள். இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்ற அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.

அதோடு திருவாசகத் தலங்களுள் ஒன்று எனும் பெருமையையும் உடையது.

 பாண்டியர்கள் முடிசூட்டிக் கொள்ளும் தலங்களுள் இது முதன்மைத் தலமாகும்.

சைவர்கள் பூசும் திருநீற்றின் சிறப்பைக் கூறும் திருநீற்றுப் பதிகத்தை இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் பாடினார்.

இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தினைச் சிவன் முக்திபுரம் என்றும் இராசமாதங்கி சியாமள பீடம் என்றும் அழைக்கின்றனர் 

இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும் 

இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது.

விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது.

சைவ - வைணவ திருவிழா:

சைவ - வைணவ ஒற்றமையின் அடையாளமாக ஏப்ரல் மாதத்தில் சித்திரை திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

மதுரை சித்திரை திருவிழாவின் முதல் 15 நாட்கள் வைகை கரையில் தென் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலிலும், அடுத்த 15 நாட்கள் வடகரையில் உள்ள அழகர்மலை கள்ளழகருக்கும் திருவிழா நடைபெறும்.

வருடம் முழுவதும் திருவிழா:

மீனாட்சியம்மனுக்கு ஒருவருடத்தில் கிட்டத்தட்ட 274 நாள்கள் திருவிழா நடைபெறும்.

முடிகாணிக்கை கிடையாது:

மற்ற கோவில்களை போல இங்கு இறைவனுக்கு முடி காணிக்கை செய்வது வழக்கத்தில் இல்லை. காரணம் இந்த கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டாலே நாம் செய்த பாவங்கள் நீங்கி அம்மை, அப்பனின் அருளை பெறுவது திண்ணம்.

அதிசயம் 1. தாழம்பூ குங்குமம்

இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழங்கப்படும் தாழம்பூ குங்குமப் பிரசாதத்தின் சிறப்பு என்னவென்றால், அது வேறு எங்கும் கிடைக்காது என்றும், தீராத நோய்களைக் குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு என்றும் நம்பப்படுகிறது. மேலும், இது காந்தசக்தி மிக்கது என்று இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர் இது தன் வாழ்நாளில் கண்ட அதிசயம் என்று தான் எழுதிய “தி இன்னர் லைப்” என்ற புத்தகத்தில்  கூறியுள்ளார்.

அதிசயம் 2: ஆயிரங்கால் மண்டபம்,

இக்கோயிலில், சுவாமி சன்னதியின் இடப்புறத்தில் அமைந்துள்ளது

மிகச் சிறப்பு பெற்ற இம்மண்டபம்சாலிவாகன ஆண்டு, 1494ஆம் ஆண்டில் மதுரையை அரசாண்டவீரப்ப நாயக்கர் காலத்தில், அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது.

மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த ஒரே கல்லால் ஆன 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

இத்தூண்களை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும், ஒரே வரிசையில் அமைந்திருக்கும் காட்சி வியப்பானது. 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி சன்னதி அமைந்துள்ளது.

ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றும், அழகாக செதுக்கப்பட்டு, 73 × 76 சதுரமீட்டர் (நீள, அகலம்) உள்ள கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.

 

அதிசயம் 3: இசை எழுப்பும் கல்த்தூண்கள்::

ஆயிரம்கால் மண்டபத்தில், இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன.

மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதியில், கல்லில் இசை வெளியிடும் ஐந்து இசைத் தூண்கள், ஆயிரங்கால் மண்டபத்தில் இரண்டு இசைத் தூண்கள் ஆக மொத்தம் ஏழு இசைத் தூண்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளன.

அதிசயம் 4: 33000-சிற்பங்கள்

வேறு எங்குமே இல்லாத அதிசயமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 14 கோபுரங்களில் மட்டும் 33,000 க்கும் அதிகமான சிற்பங்கள் உள்ளன.

அதிசயம் 5: பொற்றாமரைகுளம்:

மீனாட்சி அம்மன் கோவிலின் ஒரு பகுதியாக பொற்றாமரை குளம் உள்ளதுஇந்திரன், இந்த குளத்தில் பூத்த தங்க மலர்களைக் கொண்டு தான் சிவனை பூஜித்து தன்னுடைய பாவங்கள் நீங்க பெற்றதாகவும் புராண கதைகள் சொல்லப்படுகின்றன. இதை நினைவுபடுத்தும் விதமாகவே தற்போது தங்க முலாம் பூசப்பட்ட தாமரை மலர் இந்த குளத்தில் மிதக்க விடப்பட்டுள்ளது. இந்த பொற்றாமரை குளத்தில் மீங்கள் வளராது.

அதிசயம் 6: சுழலும் லிங்கம்

மீனாட்சி அம்மன் சன்னதிக்கும், சுந்தரேஸ்வரர் சன்னதிக்கும் இடையே உள்ள மண்டபத்தின் கூரையில் சுழலும் லிங்கம் உள்ளது.

எந்த வித அறிவியல் நுட்பங்களும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட இந்த சுழலும் லிங்கத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பதை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நீங்கள் எந்த திசையில், எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் இந்த லிங்கத்தின் அடிபாகம் உங்களை நோக்கியே இருக்கும்

அதிசயம் 7: நீர் மேலாண்மை - மழைநீர்வடிகால்:

மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் நீர் தேங்குவதில்லை. கோயில் மேற்புறத்தில் இருந்து வரும் நீர் தூண்கள் போல இருக்கும் கல் குழாய் மூலம் பொற்றாமரைகுளத்துக்கு போய் சேரும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோல வைகையில் இருந்து பொற்றாமரைகுளத்துக்கு நீர் வரும்படி பூமிக்கு கீழே அமைத்துள்ளனர்.

அதுபோல வைகை நதியில் இருந்து தெப்பகுளத்துக்கும் பூமியின் கீழே வாய்கால் வெட்டி குளத்தில் நீர் நிரம்பும்படி செய்துள்ளனர்.

ஆனால்சமீபகாலம்வரை பலகாலம் அது மக்களுக்கு தெரியாததாலும் வைகையில் இருந்து நீர் பிரியும் இடமான ஓப்புலா படித்துறை பாலத்தின் அடியில் தூர்ந்து போனதாலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக தெப்பகுளம் நீர் இன்றி வறண்டு காணப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வைகை ஆற்றில் காங்கிரீட் கரைகட்டி  சீர்படுத்தும்போது எம் சூர்யா சமூகநல அறக்கட்டளை செயலாளர் அருணகிரி வைகையில் இருந்து தெப்பகுளத்துக்கு நீர் பிரியும் ஓப்புலா படித்துறை இடத்தில் உள்ள வாய்க்கால் தூர்ந்து போய் இருப்பதை சுட்டிகாட்டி பொறியாளரிடம் கோரிக்கை வைத்ததினால் அவர் வந்து தூர்ந்து போன வாய்க்கால் அடைப்பை சீர் செய்த உடனே அங்கிருந்து வைகை நீர் விரைந்து வந்து தெப்பகுளத்தில் விழுவதை பார்த்தவுடன் அசந்து போனார்.

அது முதல் இன்றுவரை தெப்பகுளம் வைகை நீரால் நிறைந்து அழகாக காட்சியளிக்கிறது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்களின் நீர் மேலாண்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அதிசயம் 8 : மதுரை நகர வடிவமைப்பு:

ஒரு நகரம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சரியான உதாரணம் மதுரை மீனாட்சி கோயில் பகுதிதான்.

தமிழ் மாதங்களின் பெயர்களால் ஒவ்வொரு வீதியும் நேராக அமைக்கப்பட்டு சரியாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட நகர அமைப்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் அமைக்கபட்ட அதிசயம். கழுகு பார்வையில் இருந்து அதை பாருங்கள் அப்போதுதான் அதன் சிறப்பம்சம் உங்களுக்கு புரியும்.

அதிசயம் 9: 25 முகம் கொண்ட சிலை:

மீனாட்சி சன்னிதி எதிரில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகளுடன் இருப்பதால் சித்திர கோபுரம் எனப்படுகிறது. இந்த கோபுரத்தில் அமைந்துள்ள இருபத்தைந்து முகம் கொண்ட சதாசிவம் சிற்பம் அற்புதமானது. சிற்பகலையின் உச்சம் எனலாம்.

இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம் பதிவு நீண்டுவிடும்.

அதனால் நீங்களே நேரில் வந்து பார்த்து பிரமித்துக்கொள்ளுங்கள்.

தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

ஓம் நமசிவாய…

சுந்தர்ஜி

தமிழன் திமிரானவன்


 

No comments:

Post a Comment