Tuesday, December 30, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 27. ஆவுடையார் ஆத்மநாதசுவாமி கோயில் திருப்பெருந்துறை

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்

27. ஆவுடையார் ஆத்மநாதசுவாமி கோயில் திருப்பெருந்துறை

ஆவுடையார்கோயில் என்ற ஆத்மநாதசுவாமி கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.

ஏறத்தாழ ஆயிரத்திஎழுநூறு ஆண்டுகளுக்கு முன்னாலே இத்திருக்கோயில், இறைவனின் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் எழுப்பப்பட்ட கோயில்

புராணப் பெயர் சதுர்வேதி மங்கலம், சிவபுரம்.
ஈசனின் திருநாமம் ஆத்மநாதர்.

அம்பிகை யோகாம்பாள்.

தல விருட்சம் குருந்த மரம்.

மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே காணப்படுகிறார். அதன் மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது.

குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக ஆத்மாக்களை காத்தருளுபவர் என்பதால் சுவாமிக்கு 'ஆத்மநாதர்' என்று பெயர்.

அம்பாள் ஸ்ரீ யோகாம்பாளும் விக்கிரகத் திருமேனியாக இல்லை. அவளது திருவடிகளை மட்டுமே தரிசிக்க முடியும்.

திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்த திருத்தலம்.

நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும்.

அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம்.

உருவம் இல்லை – அருவம்தான்

தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன.

ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது.

மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது..
தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது.

அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது.

இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம்.

இந்த விமானத்திலுள்ள மரங்கள் எல்லாமே தேவதாரு மரத்தால் ஆனவையாகும்.

கொடிமரம் - பலிபீடம் - நந்தியும் இல்லை

இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை.

நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை.

மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

அதிசயம் :1 கொடுங்கை

ஆவுடையார் கோவில் கொடுங்கை என்பது, மிகவும் நுணுக்கமான மற்றும் மெல்லிய வேலைப்பாடுகளுடன் கூடிய வளைவான கூரை அமைப்பு ஆகும்;

இது தேக்கு மரச்சட்டம் மற்றும் குமிழ் ஆணிகள் போன்ற வடிவமைப்புகளை கல்லிலேயே செதுக்கி,

மர வேலைப்பாட்டை மிஞ்சும் அளவுக்குச் சிற்பக் கலையின் உச்சமாகத் திகழ்கிறது, குறிப்பாகப் பஞ்சாட்சர மண்டபத்தில் காணப்படும் இவை, கட்டிடக்கலைக்கு ஒரு தனித்துவமான அழகைக் கொடுக்கின்றன

கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில் (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.

ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும்.

இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.

அதிசயம் :2 ஒரே கல்லிலான கற்சங்கிலி

திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் ஒரே கல்லால் ஆன கற்சங்கிலி 10 -15 வளையங்கள் கொண்டு ஒரே கல்லினால் செதுக்கப்பட்டு உயரத்தில் பொருத்தி தொங்க விடப்பட்டுள்ளது.

சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

அதிசயம் :3 அணையா நெருப்பு

இங்கு 6 கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும் அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை

அதிசயம் :4 வற்றாத 5 அடி கிணறு

இந்தக் கோவிலுக்குள் கருவறைக்கு மிக அருகில் 2 கிணறுகள் உள்ளன. இதில் 5 அடி ஆழத்தில் இன்றும் தண்ணீர் ஊறுவது அதிசயத்திலும் அதிசயம்.

அதிசயம் : 5 கவிபாடும் கற்சிலைகள்

உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன.

அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது.

இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.

இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது.

குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும்.

குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும். பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளைநிறம் இருக்கும். நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும்.

இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச கல்யாணி குதிரையாகும்.

சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன.

அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.

அதிசயம் :6 1000 ஆண்டுகளுக்கு முந்திய ஓலைச்சுவடி

இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இன்னமும் ஏராளாமான அதிசயங்கள் இருக்கிறது… சொல்லிக்கொண்டே போகலாம். பதிவு நீண்டுவிடும் என்பதால் சுருக்கி கொடுத்திருக்கிறேன்.

மற்றவற்றை நேரில் சென்று பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொள்ளுங்கள்.

1700 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த

கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .

தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

ஓம் நமசிவாய…

சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்

 

Friday, December 26, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 26.கபாலீஸ்வரர் கோயில் மயிலாப்பூர் சென்னை

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்
26.கபாலீஸ்வரர் கோயில் மயிலாப்பூர் சென்னை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த இந்த கோயிலில், சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இந்த ஆலயம், அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்ட தலம்,
பிரம்மன் தன் ஆற்றலை திரும்பப் பெற்ற தலம்,
ராமபெருமான், சுக்ரன் வழிபட்டு பேறு பெற்ற ஆலயம்.
முருகன் வேல் பெற்ற தலம்,திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரம் பாடிய தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது.
இங்குள்ள மூலவர் சிவனின் பெயர் தமிழில் புண்ணைவனநாதர் என்று பெயரில் இருந்தது.
கிபி 15ஆம் நூற்றாண்டில் புண்ணைவனநாதர் என்று பெயர் மாற்றிய பிறகு கபாலீஸ்வரர் என்று பெயர் வழங்கப்பட்டது. என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது.
இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது.
சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற ஆணவம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது.
பிரம்மா ஊழியில் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார். சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்த சிவபெருமான், அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார்.
எனவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.
பார்வதிதேவி சிவபெருமானிடம், உபதேசம் கேட்கும் வேளையில் மயில் ஒன்று நடனமாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தைக் கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள்.
சிவசிந்தனையிலிருந்து விலகியதால் அம்பிகை தான் நோக்கிய மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள்.
பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள்.
சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.
வேதங்கள் பூஜித்ததால் வேதபுரி என்று பெயர்.
சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்றும் பெயர்.
இராமபிரான், வழிபட்டு, ஐப்பசி ஓணநாளில், பிரமோற்சவம் நடத்துவித்தார்.
சிவநேசச் செட்டியார் என்ற அன்பரின் மகளாகிய பூம்பாவை, அரவு தீண்டி இறந்துபட, அவள் உடலை எரித்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்தில் அவரது தந்தையார் வைத்திருந்தார்.
அதை, அங்கெழுந்தருளிய சம்பந்தர் முன்வைக்க, அவர் "மட்டிட்ட புன்னை" என்ற பதிகம் பாடிப் பெண்ணுருவாக்கியருளினார்.
பூம்பாவை குடத்தினின்றும் தோன்றும் திருவுருவமும் பிள்ளையார் பதிகம் பாடும் திருவுருவமும் உடனாகத் தனிக்கோயிலாக வெளிச் சுற்றினுள் மேற்குக் கோபுர வாயிலை அடுத்து வடபுறம் அமைத்து வழிபடப்பட்டு வருவது தரிசிக்க தக்கது.
பேயாழ்வார், திருவள்ளுவர் மற்றும் வாயிலார் நாயனார் ஆகியோர் அவதரித்த தலம் இது. மயிலை யில் வள்ளுவருக்கு தனிக்கோயில் ஒன்று உண்டு.
மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு :
பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. "கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே" என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.
கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர்(கிறுத்துவர்கள்) கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள்.
கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.
இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.
Santhome Cathedral பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன.
அவை அரசாங்கத்தினரால் 215 – 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், “Found on stone excavated below the Cathedral at Santhome” என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன.
இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது.
தற்போது கோயில் இருக் கும் இடத்தில் முன்பு அருள் பாலித்தது ஸ்ரீசிங்காரவேலர் மட்டுமே என்கிறார்கள்.
இதற்குச் சான்றாக கபாலீஸ்வரரின் கருவறை விமானத்தை விட சிங்காரவேலரின் கருவறை விமானம் சற்றே உயரமாக இருப்பதைக் கூறுகின்றனர்.
இதற்கு முன்னிருந்த திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது.("ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை", "மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்" - சம்பந்தர், "கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே" - திருப்புகழ்).
பழைய திருக்கோயில் ஐரோப்பியர்களால் இடிக்கப்பட்டு, பள்ளிகளும், சர்ச்ம், கோட்டைகளும் அமைத்துக் கொண்டார்கள். அவ்விடத்தில் தற்போது சாந்தோம் சர்ச் உள்ளது.
இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது.
அப்போது கல்வெட்டுக்களின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக இணைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பது வரை இருக்கின்றன. சுவாமி கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை.
அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், 2.மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய “திருமகள்போல” என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்


 

Wednesday, December 24, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 25.கைலாசநாதர் கோயில் தாரமங்கலம்

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்

1.                                                                                          25.கைலாசநாதர் கோயில் தாரமங்கலம்

 

இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவி சிவகாமியம்மை.

 

இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒரே சிலையில் காட்சியளிப்பது வித்தியாசமான திருக்கோலம் மற்றும் அபூர்வமான விஷயமாகும்.

 

அதிலும் மகாவிஷ்ணு, லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானின் ஆவுடையாராக மாறியிருக்கிறார்.

 

பிரம்மதேவனும் கூட, நான்முகனாக மாறுவதற்கு முன்பு இருந்த 5 முகங்களுடன் காட்சியளிக்கிறார். விஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடியையும், முடியையும் தேடினர்.

 

அது இயலாமல் போனதால் இருவரும் சிவனை பூஜிக்க, அவர் சிவலிங்க வடிவில் இருவருக்கும் காட்சியளித்தார்.

 

அடி முடி தேடிய வரலாற்றை எடுத்துரைக் கும் வகையிலேயே, அடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணு, சிவலிங்கத்தின் அடியில் ஆவுடையாராக மாறியிருக்கிறார்.

 

அதே போல் முடியைத் தேடிச் சென்ற பிரம்மன், சிவலிங்கத்தின் மேற்பகுதியை தன்னுடைய கையில் தழுவியபடி காட்சி யளிக்கிறார்.

 

திருமால் தாரை வார்த்து கொடுக்க, சிவனுக்கும் பார்வதிக்கும் இங்குதான் திருமணம் நடந்ததாகவும் அதனால்தான் இது தாரமங்கலம் என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

 

அதிசயம் 1: கட்டிடக்கலை நயமிக்க சிற்பங்கள்

இந்த தாரமங்கலம் சிவன் கோயில் ஒரு தேர் போன்ற வடிவிலும், அதனை யானை மற்றும் குதிரை படைகள் கட்டி இழுத்துக் கொண்டு செல்வது போலவும், அந்தத் தேரின் ஒரு பகுதியில் அச்சு முறிந்திருப்பது போலவும் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

அதிசயம் 2: சூரிய தரிசனமும் சந்திர தரிசனமும்:

ஒவ்வொரு வருடத்திலும் மாசி மாதத்தில் வரும் மூன்று நாட்களான 9 முதல் 13ஆம் தேதி வரையிலான உத்திரயாண, தட்சணயான  புண்ணிய காலங்களில் சந்திரன் மற்றும் சூரியனின் ஒளி கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாலை நேரத்தில் லிங்கத்தின் மீது விழும் சந்திரன் மற்றும் சூரிய ஒளி ராஜகோபுரங்களின் வழியே, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, மூன்று உள்வாயிலை கடந்து, கருவறையில் அமைந்துள்ள லிங்கத்தின் மீது படுவதைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது.

வருடம் தோறும் நிகழும் இந்த அற்புதமான நிகழ்வினை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடி சிவபெருமானை தரிசனம் செய்கிறார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

அதிசயம் 3: யாழியின் வாயில் சுழலும் கல்: 

யாளி சிலையின் வாயில் ஒரு கல் இருக்கும், அதை சுழற்ற முடியும். இது சிற்பிகளின் திறமைக்கு சான்று.

 

அதிசயம் 4: கல்லில் பேசும் கிளிகள் சுழலும் தாமரை:

மூலவருக்கு முன்புறம் உள்ள மண்டப மேற்க்கூறையில், ஏழு அடி நீளமும் அகலமும் கொண்ட ஒரே கல்லில், விரிந்த எட்டு தாமரை இதழ்கள் காணப்படுகிறது,

ஒவ்வொரு தாமரை இதழின் மீதும் தன் வாளால் ஒட்டிப் பிடித்தபடி ஒரு கிளிகள்  தொங்கிக்கொண்டு தாமரை பூவின் நடு தண்டின் மீது போட்டிருக்கும் ஒரு கல் வளையத்தை தன் அலகால் பிடித்துக்கொண்டிருக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.

அந்த கல் வளையத்துக்கு கீழே இன்னொரு கல் வளையம் போட்டுள்ளனர், அந்த  இரண்டாவது கல் வளையத்தை நீலமான கம்பு இருந்தால் நாம் சுற்றிவிட்டுப்பார்க்க முடியும்.

இந்த தாமரை இதழை சுற்றிலும் எட்டு திசைகளிருந்தும் வரும் துவார பாலகர்கள் தங்களின் வாகனங்கள் மீது அமர்ந்திருக்கும் காட்சியும், அவர்களுக்கு அருகில் பணிப்பென்கள் நிற்கும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் நடுவே எட்டு கற்சங்கிலிகள் தொங்கவிடப்பட்டுள்ளது.

கற்பனைக்கும் எட்டாத இந்த காட்சியை பார்த்து பிரமிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. சரியான பராமரிப்பு இல்லாமல் இந்த சிற்பங்கள் எல்லாம் சிதைந்து கொண்டிருக்கிறது.

அதிசயம் 5: குதிரை வீரன்

குரங்கு, அணில் போன்ற விலங்குகள் விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேற்கு பார்த்தபடி ஒரே கல்லிலான 13 அடி உயரத்தில் ஆறு கற்றூண்களில் குதிரையின் மீது அமர்ந்து வேட்டைக்குச் செல்லும் ஒரு வீரன் புலியை குத்தி கொல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

 

இதில், புலித்தலையில் ஏறியிருக்கும் வீரனின் கையில் பிடித்திருக்கும் வேல் புலித்தலையின் மறுபக்கம் வெளியே வரும் காட்சியை அழகாகச் செதுக்கியுள்ளனர். ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்பங்களில், குதிரை மீது அமர்ந்துள்ள வீரன் மற்றும் குதிரையின் தோற்றம் வலது புறம் ஒரு முக அமைப்பிலும், இடதுபுறம் ஒரு வேறு முக அமைப்பிலும் இருக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது.

 

அதிசயம் 6: ** ரதி-மன்மதன் சிலைகள்:**

இரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் இரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது.அழகான ரதி-மன்மதன் சிலைகள் மற்றும் வாலி-சுக்ரீவன் சிற்பங்கள் உள்ளன.

அதிசயம் 7: வாலி இராமன் சிலைகள்

கோயில் முன்மண்டபத் தூண்களில் ஒன்றில் இராமன் உருவமும், மற்றொரு தூணில் வாலி உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

வாலி சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்த்தால் இராமன் உருவம் தெரியாது. இராமன் சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்ந்தால் வாலி உருவம் தெரியும். இப்படிப்பட்ட கதைச் செய்தி கலைநூட்பத்துடன் வடிக்கப்பட்டுள்ளது

அதிசயம் 8: பாதாள லிங்கம்: 

கருவறைக்கு கீழே ஒரு சிறிய பாதாள அறையில், லிங்கம் உள்ளது, இது இரவில் மட்டுமே தெரியும்.

அதிசயம் 9: மூன்று தலை மூன்று கால்

இத்தலத்தில் உள்ள சுரகேசுவரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு.

அதிசயம் 10: எறும்புக்கும் பாதை

இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில் உலகிலேயே மிகச் சிறிய உயிரினமான எறும்புகள் நுழைய துளைகளை விட்டு செதுக்கிய சிற்பங்கள் அதிகமாக உள்ளது. 

அதிசயம் 11: நீர் மேலாண்மை

மழைக்காலங்களில் கோவில்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் கோவில்களின் மேற்புறத்திலும், கோவில்களின் கோபுரங்கள் மீதும் விழும் மழை நீர் தேங்காமல் துளைகளின் வழியாக நேரடியாக வழிந்து அருகிலுள்ள நீர் தேக்கங்களை சென்றடையும் வகையில் மிகவும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.

நீர் மேலாண்மையில் நம் முன்னோர்களுக்கு இருந்த மிக நுட்பமான அறிவினை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

 

அதிசயம் 12: எண்கோணவடிவில் தெப்பகுளம்

இக்கோவிலின் தெப்பக்குளமானது எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் கல் எரிந்தால் அந்தக் கல் எட்டு இடங்களிலும் மோதிவிட்டு மீண்டும் பழைய இடத்திற்கே வந்து விடுவதாக நம்பப்படுகிறது.

 

அதிசயம் 13: சுரங்கப்பாதை:

 இக்கோவிலில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய சொக்கநாதர் கோவிலுக்கு ரகசியமாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது.

அதிசயம் 14: ஐந்து தலை பிரம்மா

ஆற்றிலிருக்கும் மணலை சிவலிங்கமாக பிடித்து வைத்து பார்வதி பூஜை செய்துகொண்டிருக்கும் காட்சி, சாப விதிப்படி ஐந்து தலையுடன் இருக்கும் பிரம்மாவின் தலையை சிவபெருமான் ஒரு தலையை கிள்ளி எடுத்தபிறகு நான்கு முகங்களுடன் இருக்கும் காட்சியும் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

முதலில் ஐந்து தலையுடன் இருக்கும் பிரம்மா அடுத்த சிற்பத்தில் நான்முகனாக காட்சி கொடுக்கிறார்.

 

அதிசயம் 15: வேங்கை மர கதவு சிற்பங்கள்: 

பிரம்மாண்டமான மேற்கு நோக்கிய கதவுகள் வேங்கை மரத்தால் செய்யப்பட்டு அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நேரில் பார்ப்பதுபோல தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. பாருங்கள் பிரமித்துப்போவீர்கள். 

இன்னமும் ஏராளாமான அதிசயங்கள் இருக்கிறது… சொல்லிக்கொண்டே போகலாம். பதிவு நீண்டுவிடும் என்பதால் சுருக்கி கொடுத்திருக்கிறேன். மற்றவற்றை நேரில் சென்று பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொள்ளுங்கள்.

 

1000 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த

கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .

தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

ஓம் நமசிவாய                 

சுந்தர்ஜி

தமிழன் திமிரானவன்