Tuesday, March 10, 2015

பழனியம்மாள்

தூக்கி மரத்துப் போன தோள்களும், மாட்டுயைவண்டிஓட்டி காய்த்துப் போன கைகளும் பழனியம்மாளின் அடையாளங்கள். 55 வயதாகும் பழனியம்மாள், கடைகளுக்கு மாட்டு வண்டியில் மூட்டைகளை ஏற்றி, இறக்கும் வேலையைச் செய்து வருகிறார்.

“நாங்க முன்னாடி மேட்டூர்ல இருந்தோம். இப்ப 30 வருஷமா ஈரோடு கே.எஸ். நகர்ல வாடகை வீட்ல குடியிருக்கோம். ஈஸ்வரன் கோயில் வீதியில இருக்கிற கடைகளுக்கு மூட்டைகளைக் கொண்டு போய் ஏத்தி இறக்கறேன். 36 வருஷமா இந்த வேலையைத்தான் செய்துட்டு இருக்கேன். காலையில 10 மணிக்குப் போனா வூட்டுக்கு வர ராத்திரி 12 மணி ஆகிடும்” என்று சொல்லும் பழனியம்மாள், ஓய்வெடுக்க வேண்டிய இந்த வயதிலும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

“ஒரு மூட்டைக்கு 15 ரூபாய் கொடுப்பாங்க. ஒரு நாளைக்கு எத்தனை மூட்டை தூக்கறமோ அத்தனை காசு கிடைக்கும். மாட்டுக்குத் தவிடு, புண்ணாக்கு வாங்கிப்போட்டது போக ஒரு நாளைக்கு 250 ரூபா மிச்சமாகும். எனக்கு செல்வி, தேவி, மஞ்சு, ஈஸ்வரி, ஜீவிதான்னு அஞ்சு பொம்பளை புள்ளைங்க. ஒவ்வொருத்தரையும் நாலாப்பு, அஞ்சாப்பு வரைக்கும் படிக்க வைச்சேன். அப்பறம் பாவாடை கம்பெனிக்கு வேலைக்குப் போனாங்க. பெரிய மனுஷியானதும் உடனே கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டேன். எங்க வூட்டுக்காரருக்கு ஒரு விபத்துல கால் எலும்பு முறிஞ்சிடுச்சு. அதனால, எங்கூட ஒத்தாசையா இருக்காரு” என்று தன் வாழ்க்கைச் சரிதத்தை வரிசை மாறாமல் சொல்கிறார் பழனியம்மாள்.

வயதான பிறகு மூட்டை தூக்க முடியாது என்பதால் ஒரு பெட்டிக்கடை வைத்து வியாபாரத்தில் உட்கார்ந்துவிட வேண்டும் என்பது பழனியம்மாளின் லட்சியங்களில் ஒன்று. மாட்டு வண்டியின் சக்கரத்தைப் போலவே உழைப்பென்னும் அச்சாணியில் ஓடுகிறது பழனியம்மாளின் வாழ்க்கை.

நம் எண்ணங்களுக்காக

No comments:

Post a Comment