முருகப்பெருமானின் பல்வேறு பெயர்களும், அதன் காரணமும் இங்கு காண்போம்..
சித்தன் : எல்லாம்வல்ல சித்தராக, அடியவருக்கு சித்தியை வழங்கும் வள்ளலாக, விளங்குவதால் இப்பெயர் ஏற்பட்டது.
சேய், சேயோன் : இளமையும், செம்மை நிறமும் கொண்டவராக முருகப்பெருமான் விளங்கியதால் இப்பெயர்.
வேள் : வேள் என்றால் விருப்பம், எல்லோராலும் விரும்பப்படுவதாலேயே முருகனுக்கு இந்த பெயர். மன்மதனுக்கும் வேள் என்ற பெயருண்டு. செம்மை நிறம் கொண்ட முருகக்கடவுள் செவ்வேள், கருமை நிறங்கொண்ட மன்மதன் கருவேள் என புராணம் அழைக்கிறது. வேள் என்ற சொல்லுக்கு உதவுதல் என்ற பொருளும் உண்டு. அடியவருக்கெல்லாம் ஆபத்தில் உதவும் கந்தன் வேள் என அழைக்கப்படுவதும் பொருத்தமானதே.
வேலன் : வெற்றியை தரும் சக்தி வேலை கையில் தாங்கி நிற்ப்பதால் வேலன். இலக்கியங்கள் "ஆலமர் செல்வன் சேய், சேவற்கொடியோன், கொற்றவை சிறுவன், மாற்றோர் கூற்று, அறுவர்பயந்த ஆறமர் செல்வன்" என பலவாறு அழைக்கிறது.
அரன்மகன் : அரனாகிய சிவபெருமானின் மகன் என்பதால் இத்திருநாமம்.
அறுமீன் காதலன் : கார்த்திகை பெண்கள் அறுவரின் அணைப்பால் வளர்ந்த குழந்தை முருகன் என்பதால் இவ்வாறும் அழைக்கப்படுகிறார்.
அறுமுகன், ஆறுமுகன் : ஆறுமுகங்களை உடையவன். ஈசனின் "ஐந்து முகத்தோடு அதோ முகமும் தந்து, திருமுகங்கள் ஆறாகி, செந்தழற்க்கண் ஆறும், ஒருமுகமாய்த் தீப்பொறி ஆறு உய்ப்ப" என வரும் கந்தர் கலிவெண்பா ஆறுமுகனை போற்றி பாடுகிறது.
குரு : சிவபெருமானுக்கு பிரணவ மந்திரம் உரைத்ததாலும், அகத்தியர் நாரதர், நந்தி, தசரதர், வாமதேவ முனி, பராசர முனிவர் மகன்கள் ஆறு பேருக்கும், முருகப்பெருமானே பிரம்மவித்யா மரபுகளை விளக்கிய ஞான ஆசிரியனாய் விளங்கியதால், சிவகுரு, லோககுரு, ஜகத்குரு என போற்றப்படுகிறார்.
சேவற்கொடியோன்: சேவலை கொடியில் கொண்டதால்.
கங்கை மைந்தன் : இமவான் மகளாக குடிலை எனும் பெயர் கொண்ட கங்கை, சக்தி தேவிக்கு மூத்தவராக தோன்றியதால், கங்கையும் முருகனுக்கு தாயாகிறார். எனவே இப்பெயர்
கடம்பன் : கடம்ப மாலை சூடியவன், இது முருகபெருமானின் தூய்மையை குறிக்கும்.
கந்தன் : ஸ்கந்தம் என்றால் தோள் , வலிமையான தோள்களை கொண்டவன் எனப்படும். கந்தன் என்றால் ஒன்று கூட்டப்பட்டவர் என்றும் பொருள்படும். அறுவராக வளர்ந்த குமரன், சக்திதேவியால் ஒன்று சேர்க்கப்பட்டதால் கந்தன் எனப்பட்டான் என்றும் குறிக்கப்படுகிறது.
நம் எண்ணங்களுக்காக
No comments:
Post a Comment