வீடுகளும் குழந்தைகளும் : ( அர்த்தமற்ற விசயங்கள்) சிந்திக்க வேண்டிய தருணம் இது!
குழந்தைகள் விளக்கம் கேட்டால் சொல்லவும் தெரியாமல், தாங்களும் அறியாமல், குழம்பி, குழப்பி விடுகின்றனர். இதன் விளைவு? நம் சமுதாயத்தில், பிறந்த குழந்தைகளுக்கு அதே மூடநம்பிக்கைகளை ஊட்டி வளர்க்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் நல்ல தேர்ச்சி எடுக்க கையில் பல வண்ண கயிறுகளைக் கட்டிக் கொள்கின்றனர்; சில பரிகாரங்கள் செய்தால் தான் நினைத்த காரியம் நடக்கும் என்று நம்புகிறார்கள்; இருட்டில் வெளியே சென்றால் பூச்சாண்டி பிடித்துக் கொள்வான் என்று அஞ்சுகிறார்கள்.
மூடநம்பிக்கையின் பயத்தை தினிப்பது :
எட்டாம் எண்ணில் பிறந்த குழந்தையை சனி பிடித்து ஆட்டும், வாழ்க்கை முழுவதும் துன்பம் ஏற்படும் என்று சொன்னால், இதை கேட்கும் அந்த பிள்ளைக்கு வாழ்வில் எப்படி வரும் தைரியம்? இப்படி இல்லாத ஒன்றையும், சான்றில்லாத நம்பிக்கைகளையும் விதைப்பது ஏற்கமுடியுமா?
இதனால் குழந்தைகளுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் பயம், மனபாதிப்பு, அடிமைத்தனம், தைரியமின்மை போன்ற தாக்கங்களையே விதைக்க நேரிடுகிறது.
பகுத்தறிவு சிந்தனை வளரும் இந்த காலகட்டத்தில் மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்கு முறைகளையும் இன்னும் புகுத்திக் கொண்டிருக்கப் போகிறோமா?
நம் பிள்ளைகளை குருகிய சிந்தனை வட்டத்தில் வைத்து, நமது நம்பிக்கைகளையும், அனுபவங்களையும் தினிக்காமல், அவர்களின் கற்பனை, சிந்தனை திறன்களுக்கு எல்லை வகுக்காமல் இருக்க முடியுமா நம்மால்?
குழந்தைகளின் கேள்விகளுக்கு இயன்றவரையில் சான்றுள்ள, ஏற்புடைய விளக்கங்களை அளிக்க முயல்வோம்.
பூச்சாண்டி பிடித்துக்கொள்ளும் என்பதை விடுத்து, உண்மையான காரணங்களைக் கூறி விளக்குவோம். இந்த காலத்தில், பிள்ளைகளின் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் திக்குமுக்காடும் நிலையில் நம்மில் பலர் உள்ளோம். “வானவில்லில் ஏன் கருப்பு நிறம் இல்லை?”, “நம்ம வீட்டு நாய்குட்டியால் ஏன் பேச முடியவில்லை?”, “தாத்தாவின் தோல் ஏன் சுறுங்கி விட்டது?”
மாறும் தருணம் இதுவே :
இப்படி, ஒவ்வொரு நாளும் பல கோணங்களில் எழும் கேள்விகளை உதரித்தள்ளாமல், ஊதாசினப்படுத்தாமல், அவர்களுக்கு முடிந்தவரை தகுந்த விடைகளை அளிக்க முயற்சி செய்வோம்.
முடிந்தால், புத்தகங்களைப் புரட்டி, அவர்களோடு இணைந்து விடைகளைத் தேடுவோம். இன்றைய அம்மாக்களுக்கு கை கொடுக்கத்தான் இணையதளம் உள்ளதே!
எளிய முறையில் வலைப்பக்கங்களில் விடைகளைத் தேடி கொடுப்போம். படங்களோடு விளக்குவோம்.
இதைவிடுத்து, இன்னுமும் மூடத்தனமான விளக்கங்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்து நம் பிள்ளைகளின் வாயை மட்டும் அல்ல, அவர்களின் மூளை, சிந்தனை வளர்ச்சிக்கும் சேர்ந்தாற்போல் ஒரு விலங்கை மாட்டி விடுவது நாம் இழைக்கும் துரோகமாகவே உருவாகும்.
சிந்திப்போமா. . . ?
No comments:
Post a Comment