Sunday, April 3, 2016

Mothur - Tamil Nadu - Antiquity of Village went back to the Neolithic age about 10000 years old


மோதூர் அகழாய்வு
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர், 2005-ம் ஆண்டு இங்கு விரிவான அகழாய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த அகழாய்வில் காணப்பட்ட மண்ணடுக்குகளில், புதிய கற்காலத்தைச் சார்ந்த கற்கருவிகளும், மட்கலன்களும் ஏராளமாக கிடைத்துள்ளன


   அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய கற்கால அகழாய்வுகளை ஒப்பிட்டு நோக்கும்போது, மோதூரில் எண்ணிக்கை மிகுதியாக 500-க்கும் மேற்பட்ட புதிய கற்காலக் கற்கருவிகளும், பண்பாட்டு எச்சங்களும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் புதிய கற்கால மக்கள் அதிக அளவில் தங்கி மேம்பட்ட நாகரிக வளர்ச்சி பெற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பதற்குச் சான்றாக பையம்பள்ளி, மயிலாடும்பாறை மற்றும் மோதூர் அகழாய்வுகளைக் குறிப்பிடலாம்.
   தமிழகத்திலும் புதிய கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இருந்தும் அக்காலப் பண்பாட்டை முழுமையாக அறியும் பொருட்டு, புதிய கற்கால வாழ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மிகக் குறைவே.
   மோதூரில் கிடைத்த அளவு புதிய கற்காலத் தொல்பொருட்கள் தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்கவில்லை. இவ்வகழ்வாய்வில், பெருங் கற்கால மண்படிவுக்கு அடுத்த கீழடுக்கில், புதிய கற்காலப் பண்பாட்டுப் படிவு சாம்பல் நிறமாகவும், புதிய கற்காலக் கைக்கோடாரிகள் இன்னும் பிற கற்கருவிகளுடன் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மோதூரில் 15 அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றில், அகழாய்வுக் குழிகள் 7, 10 மற்றும் 14 ஆகியவை வரலாற்றுக் காலத்துடன் தொடர்புடையவை என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*10 எஞ்சியுள்ள பிற அகழாய்வுக் குழிகள், புதிய மற்றும் பெருங் கற்காலத் தடயங்களை வெளிப்படுத்துபவையாகும்.
சுடுமண் ஆட்டு உருவம்
   மோதூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், மண்ணடுக்கில் சேகரிக்கப்பட்ட புதிய கற்காலத் தொல்லியல் தரவுகளில் முதன்மையானது, சுடுமண் ஆட்டு உருவம் ஆகும். இது நன்கு செழிப்பாக வளர்ந்த செம்மறி ஆட்டின் தோற்றம் கொண்டதாகும். இது, இங்கு வாழ்ந்த புதிய கற்கால சமுதாயம், கால்நடை மேய்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததை உறுதி செய்கிறது.
   மோதூர் அகழாய்வுக்குழிகளில் எண் 9 குறிப்பிடத்தக்க ஒன்று. இக்குழியில்தான் அதிக அளவில் ஒழுங்கற்ற கற்துண்டுகள் ஒரே வரிசையில் அடுக்கிவைத்ததுபோல் காணப்பட்டன. இது, புதிய கற்கால மக்களின் வாழ்விடப் பகுதியாகும். இக்கல்லடுக்கு, அவர்களால் அமைக்கப்பட்ட கற்சுவரின் ஒரு பகுதியே எனலாம். இது, களிமண்ணைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இது, இரண்டு குன்றுகளுக்கு இடையே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.*11 இது, புதிய கற்கால மனிதன் தனது இருப்பிடத்தை மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குப் பகுதியில் அமைத்துக்கொண்டிருந்ததற்குச் சான்றாக விளங்குகிறது. மேலும், அகழ்வுக் குழி 6-ல், தரைமட்டத்தைவிட பள்ளமான குழிகள் அமைத்துத் தங்கியுள்ளான் என்பதும் வெளிப்படுகிறது. இக்குழியில், தரைமட்டத்தைவிட பள்ளமான இரண்டு குழிகள் உள்ளன. இக்குழிகளின் விட்டம் சுமார் 1.50 மீட்டர். இக்குழிகளில் இருந்து பல்வேறு வகையான கற்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை முழுமையாக ஆய்வுக்கு உரியவை.
   அகழாய்வுக் குழி 11-ல், வழவழப்பான கைக்கோடரிகளுடன் செம்பு வளையல்களும், ஒரு சுடுமண் பாவையும் அதாவது தாய் தெய்வத்தின் உடைந்த உருவமும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.*12 இதன் தலைப்பகுதி கிளி மூக்கு போன்று கூர்மையாகவும், உடல் பகுதி அகன்றும் காணப்படுகின்றது.*13 இது கீழ்வாளை ஓவியத்துடன் ஒத்துள்ளது.*14 தென் மாநிலங்களில் நடைபெற்ற புதிய கற்கால வாழ்விட அகழாய்வுகளில் காணப்பட்ட அதாவது டி.நரசிப்பூர், பிக்கிலிகால் போன்ற அகழாய்வுகளில் காணப்பட்ட சுடுமண் தாய் தெய்வங்களை ஒத்து உள்ளன. எனவே, இங்கு கிடைத்த தாய் தெய்வ உருவமும் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை என்றே கணிக்கப்படுகிறது. மேலும், இதனுடன் காணப்பட்ட தொல்லியல் சான்றுகளும் இதையே உறுதிபடுத்துகின்றன.

   மேலும், வடஇந்தியாவில் இனாம்கான் (Inamgaon) என்ற இடத்தில் கிடைத்த புதிய கற்காலத்துக்கு உரிய தாய் தெய்வ சுடுமண் உருவங்களுடனும், உலக அளவில் ஆப்கானிஸ்தானில் கர்--மார் (Gar-I-mar) என்ற இடத்தில் கிடைத்த புதிய கற்கால தாய் தெய்வ உருவங்களுக்கும், அடிப்படையில் அதாவது கிளிமூக்கு போன்ற மிகச்சிறிய தலையுடன் கூடிய ஒற்றுமை உள்ளது. இக்குணம், மோதூர் தாய் தெய்வ சுடுமண் உருவம் புதிய கற்காலத்தைச் சார்ந்த்து என்றே உறுதிபடுத்துகின்றன.

   மோதூரில், புதிய கற்கால மக்கள் இயற்கையான மலைக்குன்றுகளின் அடிவாரத்திலும், இரண்டு குன்றுகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் வாழ்ந்துள்ளனர்.
   இவர்கள் மலையடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள நிலங்களில் ஆழமான குழிகளை வெட்டி பள்ளத்தை ஏற்படுத்தி, அதன் மேல் பகுதியில் சிறிய அளவிலான குடிசைகளை அமைத்துத் தங்கியுள்ளனர்.
   இவ்வகையான வாழ்விடத்தை உறுதி செய்யும் வகையில், அகழாய்வுகளில் மரக்குச்சிகள் நடுவதற்காகத் தோண்டப்பட்ட குழிகள், மரந்தண்டின் எச்சங்களுடன் கிடைத்துள்ளன.*25 அடுத்து, மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளில் சிறிய சிறிய கற்துண்டுகளை அடுக்கி சுவர் எழுப்புவர். அத்தகைய சுவற்றையும் தரைப்பகுதியையும் மாட்டுச் சாணத்தையும் களிமண்ணும் கலந்து பூசி மெழுகுவர். தருமபுரி மாவட்டம் மோதூரில், இன்றளவிலும் இப்பண்பாட்டைப் பின்பற்றியே வீடுகளை அமைத்து வருகின்றனர்.
   இதுபோன்று அமைக்கும் குடிசைகளின் தரைப்பகுதியை மெருகேற்ற, வட்டமான அடிப்பகுதியை சமஅளவு கொண்ட கற்களைக்கொண்டு தட்டி சமன்செய்து, பளபளப்பாக வரும் வரை ஒருவகைத் தேய்க்கும் கற்கருவியைக் கொண்டு தேய்ப்பர். தேய்க்கும் இவ்வகைக் கற்களை இதற்காகவே தயார் செய்துள்ளனர். சான்றாக, மோதூர் அகழாய்வில் அடிப்பகுதியில் சமமான, பளபளப்பு கொண்ட முட்டை வடிவ வட்டுகள் (Discoid Rubbers) மற்றும் கற்கருவிகளை கூர் தீட்டும் கற்கருவிகள் (Polishing Stone Tools) கிடைத்துள்ளதைக் குறிப்பிடலாம்.*26
   மோதூர் அகழாய்வில் இரண்டுவிதமான குடிசைப் பகுதிகள் கிடைத்துள்ளன. அவற்றுள், ஒன்று பதுங்கு குழி வகை, மற்றொன்று துண்டுக் கற்களை வைத்து எழுப்பப்பட்ட குடிசைப் பகுதியாகும். இரண்டு வட்டமான பதுங்கு குழிகளும், சிறிய சிறிய கற்துண்டுகளைக் கொண்டு களிமண்ணால் எழுப்பிய சுவர் பகுதியும் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை இங்கு புதிய கற்கால மக்கள் தங்கி வாழ்ந்துள்ளதை உறுதி செய்கின்றன.*27 இங்கு அதிக அளவில் சுண்ணாம்பு காரைத் துண்டுகளும் சேகரிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம்.
   மோதூர் அகழாய்வுக் குழி ஒன்றில் இருந்து (எண் MDR-11) செம்பு வளையங்கள் இரண்டும், ஒரு சுடுமண் பொம்மையும் சேகரிக்கப்பட்டன. இது ஒரு பெண் உருவ பொம்மை ஆகும். 4 செ.மீ. நீளமும், 5.5 செ.மீ. அகலமும் கொண்டது. உடைந்த நிலையில், 1.05 மீட்டர் ஆழத்தில் இச்சுடுமண் பொம்மை, இரண்டு மார்பகப் பகுதிகளும் சிதைக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது. தலைப்பகுதியைக் காட்ட கூம்பு வடிவ அமைப்பு காட்டப்பட்டுள்ளது. இச்சுடுமண் பாவை, புதிய கற்கால மக்கள் வழிபட்ட பெண் தெய்வ உருவமாகக் கருதப்படுகிறது.
   இதன் காலத்தை இவற்றுடன் கிடைத்த செம்பு வளையல், உடைந்த கைக்கோடாரி (Celt) போன்ற பிற தொல்பொருட்களின் அடிப்படையில், பொ..மு. 3000 எனக் கருதலாம். மோட்டூர்,*28 உதயநத்தம்*29 ஆகிய இடங்களில் காணப்படும் பெருங்கற்காலப் பண்பாட்டைச் சார்ந்த மனித வடிவிலான குத்துக்கல் (Anthromorphic Menir) இதன் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் எனக் கருதலாம். கீழ்வாழை ஓவியங்களிலும் தலைப்பகுதி இவ்வாறே காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை ஒரு தொடர்ச்சியான வரலாற்றைக் காட்டுபவையாக உள்ளன.
   புதிய கற்கால மக்களின் பண்பாட்டை தெளிவாக அறிய உதவும் தொல்பொருட்கள், மட்கலன்களும் கற்கருவிகளுமே ஆகும். இக்காலகட்டத்தில் இவர்கள் பல்வேறு வகையான கற்கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர்.
   தமிழகத்தில் புதிய கற்கால மக்களின் வாழ்விடங்களில் அதிக அளவு அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இருந்தபோதும், அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களின் அடிப்படையில், அவர்களது மாறுபட்ட பண்பாட்டுக் கூறுகளைக் காணமுடிகிறது. இக்கருத்துக்கு வலுவூட்டும்முகமாக, தென்னிந்தியாவில் நடைபெற்ற புதிய கற்கால அகழாய்வுகளையும் ஒப்பீடு செய்யும் வகையில் தொடர்ந்து பார்க்கலாம்.
-Proud to be an Tamilan

No comments:

Post a Comment