Sunday, April 10, 2016

Gudiyattam - Vellore - Tamil Nadu 4000 years old Panjapadavar stone Arts

குடியாத்தம் அருகே, ஏரிப்பட்டரை பஞ்சபாண்டவர் பாறையில், 4,000 ஆண்டுகள் பழமையான கல்திட்டைகள்


வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவில் ஏரிப்பட்டரை, பூங்குளம், ரங்கசமுத்திரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சுற்றி, சமவெளிகள், இயற்கையான மலைத்தொடர்கள், மலைகளில் வற்றாத சுனைகள் அமைந்துள்ளன. இங்குள்ள மலைக்குன்றுகளை, நாழிக்கல், ஊக்கங்கல், பஞ்சபாண்டவர் பாறை என்று, அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இதுகுறித்து அறிந்த, விழுப்புரம் தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன், சென்னை சசிதரன், ரமேஷ் மற்றும் பெங்களூரு சங்கர், கார்த்திகேயன், கடந்த மாதம், 15ம் தேதி ஏரிப்பட்டரைக்கு சென்றனர். 600 மீட்டர் உயரத்திலிருக்கும் பஞ்சபாண்டவர் பாறையை அடைந்தனர். இங்குள்ள கல்திட்டைகளை ஆய்வு செய்த, தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன் கூறுகையில், "இப்பாறையில், இரண்டு சதுர கி.மீ., பரப்பளவில், 100க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் சிறியதும், பெரியதுமாகவும், சிதைந்தும், நல்ல நிலையிலும் உள்ளன. இந்த கல்திட்டைகள், "' வடிவில் மூன்று பக்கங்களிலும், கரடு கற்களால், 2 முதல், 2.5 அடி உயரத்திலும், மேற்பகுதி, 10 டன் எடை கொண்ட மூடு கல்லால் மூடப்பட்டுள்ளது. இவை, வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களால், அமைக்கப்பட்டன. கல்திட்டைகளை, வாழ்விடங்களாகவோ அல்லது ஈமச் சின்னங்களாகவோ, வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் பயன்படுத்தினர். இந்த கல் திட்டைகளில், கீறல் உருவங்களோ, பெருங்கற்காலத்தில் எழுதிய ஓவியங்களோ இல்லை. தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி அருகே, அங்கு சகிரியில் உள்ள கல்திட்டைகளும், ஏரிப்பட்டரை பஞ்சபாண்டவர் பாறையில் உள்ள கல்திட்டைகளும் ஒத்து இருக்கின்றன. நகர, கிராம விரிவாக்கம், விவசாய விளை நிலங்களாக மாற்றுவதால், இங்குள்ள கல்திட்டைகள் அழித்து வருகின்றன. 4,000 ஆண்டுகள் பழமையான, கல்திட்டைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


வேலூர் அருகே வரலாற்றுக்கு முந்தைய கற்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்காக தடயங்கள் விழுப்புரம், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டங்களில் பாறை ஓவியங்களாக ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தற்போது, வேலூர் அருகே பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் கற்கால ஓவியங்கள் மற்றும் கல்திட்டைகள் குறித்து தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து வரும் .மகேந்திரனால்இரண்டு வருட காலமாக வேலூரை சுற்றியுள்ள பல மலைகளில் மேற்கொண்ட தேடுதலின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு, குடியாத்தம் நகரிலிருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ள பங்கரிஷி கிராமம் அருகே, மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் இரண்டு இடங்களில் உள்ள பாறை ஓவியங்களும் மற்றும் 6 கல்திட்டைகளும் ஆகும். ஒரு ஓவியம் 10 உருவங்களை உள்ளடக்கியது. 2 இன்ட் 2 என்ற அளவில் பாறை மறைவில் உள்ளது.மற்றொரு ஓவியம் பாறை சாய்ந்த பகுதியில் 5 அங்குல உயரம் மற்றும் 10 அங்குல நீளம் என்ற அளவில் உள்ளது. இந்த ஓவியங்களில் மனிதர்கள் மற்றும் மிருக உருவங்கள், வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன.இந்த ஓவியங்களில் உள்ள மனிதர்கள் வேட்டையாடும் நடோடிகளாக இருக்கலாம் என்பது தெளிவாகிறது.

எல்லா ஓவியங்களும் வெள்ளை நிறமானவை. இந்த வெள்ளை நிறம் சுண்ணாம்பு கற்கள் அல்லது வெள்ளை களிமண்ணால் தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம். இந்த ஓவியங்கள் தூரிகையால்அல்ல விரல்களால் தீட்டப்பட்டவை.மேலும், இதுபோன்ற வெள்ளை நிறத்தாலான பாறை ஓவியங்கள் நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டும் தென்படுகின்றன என்பது நிபுணர்களின் கருத்து. மேலும், இந்த இரண்டு ஓவியங்களிலும், விலங்குகளை விட மனித உருவங்களே அதிகம் காணப்படுகின்றன.ஒரு ஓவியம் வரைவதற்கான புள்ளியிட்டு பிறகு அதை முடிக்காமல் விடப்பட்டுள்ளது. அருகில் ஒரு முயல் படமும் காணப்படுகிறது.வடிவியல் ரீதியாக வரையப்பட்ட சதுரம் மற்றும் முக்கோணமும் ஒரு ஓவியத்தில் காணலாம்.
இந்த ஓவியங்களில் பெண் உருவங்கள் கிடையாது. வேட்டையின் போது துரத்தலில் ஈடுபடும் மூன்று ஆண் உருவங்களும், தன்னைவிட இரு மடங்கு உயரமான நீள் ஈட்டியை சுமக்கும் ஒரு ஆண் உருவமும் சித்தரிக்கப்பட்டுள்ளன.ஒரு முயல் ஓவியம் புள்ளி படிவங்களுடன் உள்ளது. மேலும், ஒரு மனிதன் எருதில் பயணிப்பதும், நாய்கள், நரிகள் மற்றும் ஒரு மயில் ஓவியமும் உள்ளன.தமிழகத்தில் குகை ஓவியங்கள் குறித்த ஆய்வில் புகழ் பெற்ற தொல்லியல் நிபுணர் மற்றும் வழி முனைவர் டாக்டர் கே.வி.ராமன் கருத்தின்படி, இந்த ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

இந்த பாறை ஓவியங்கள் இருக்குமிடத்திற்கு அருகில் ஆதிகால மனிதர்களின் ஆறு கல்திட்டைகள் (அதாவது இறந்தவர்களை புதைத்து, நான்கு கல் பலகைகளை நிறுத்தி அவற்றின் மேல் கல்திட்டை எனும் கல்லால் மூடுவது) சிதைந்த நிலைகளில் உள்ளன.இந்த ஓவியங்களுக்கு பிந்தைய காலத்தை சேர்ந்த கல்திட்டைகள் இருப்பது, இந்த பகுதியில் மனிதர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்ததற்கான அடையாளமாக தெரிகிறது

No comments:

Post a Comment