Thursday, February 21, 2019

சிந்து சமவெளியில் - ஜல்லிக்கட்டு

சிந்து சமவெளியில் - ஜல்லிக்கட்டு



தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் "ஜல்லிக்கட்டு" சுமார் 4000 வருடங்களுக்கு முன்பிலிருந்தே விளையாடப்பட்டு வருகின்றது என்பதற்கான சான்று, (அதாவது கி.மு.2000 !!!).உலகின் தொன்மையான நாகரீகங்களில் ஒன்றான " சிந்து சமவெளி " நாகரீகம் இருந்த இடமான "மொஹஞ்சதாரோ" பகுதியில் இந்த முத்திரை கிடைக்கப்பெற்றுள்ளது,

இது குறித்து சிந்து சமவெளி மற்றும் பிராமி கல்வெட்டு ஆய்வாளர் திரு." ஐராவதம் மகாதேவன் " கூறும் போது "இந்த முத்திரையை சற்று கூர்ந்து கவனித்து பார்த்தால்,இன்றைக்கு ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்கள் காளையை பிடிக்கும் களம் போன்று தத்ரூபமாக உள்ளது !.இந்த படத்தில் இருப்பது ஒருவரே பல கோணங்களில் தூக்கி அடிப்பது போலவும் அல்லது பலர் காளையால் தூக்கி அடிக்கப்பட்டு நாலாபுறமும் சிதறுவதைப் போலவும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் தெளிவாக "காளை " தான் வெற்றிபெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.இந்த கல்லில் வடிக்கப்பட்ட முத்திரை தற்போது " தில்லி அருங்காட்சியத்தில்" பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது , இது கி.மு.2000 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த முத்திரையை இன்னும் சற்று கூர்ந்து பார்த்தால் வளைந்திருக்கும் அந்த காளை கொம்புகள், காளையின் முதுகிற்கு நடுவே வரை வந்திருப்பதன் மூலமாக அது எவ்வளவு ஆக்ரோஷத்துடனும், வேகத்துடனும் களத்தில் வீரர்களை பந்தாடுகிறது என்பதை உணரமுடிகின்றது, அதன் கழுத்தை கவனித்தால் இடது புறம் சற்று சாய்வாக உள்ளது, இதற்கு காரணம் தன்னை பக்கவாட்டில் பிடிக்க வரும் அந்த வீரனை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் அது கழுத்தை சரியான பழைய நிலைக்கு கொண்டு வருவதையே உணர்த்துகிறது.

இதன் வண்ணப்படம் No. M 312 " The Corpus of Indus Seals and Inscriptions, Volume 1" என்ற புத்தகத்தில் உள்ளது.இந்த முத்திரையில் எந்த குறிப்புகளும் இல்லை.இந்த காளை அடக்கம் குறித்து மகாபாரதத்திலும் " கிருஷ்ணர் " கம்சனின் இடத்தில் ஆக்ரோஷமான காளையை அடக்குவதற்கான குறிப்புகள் உள்ளன.இந்தியாவை தவிர " ஸ்பெயின்", " போர்சுகல்" போன்ற நாடுகளிலும் இந்த காளை விளையாட்டு இன்றும் உள்ளது.

No comments:

Post a Comment