Wednesday, November 25, 2015

கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதற்கு அறிவியல் காரணம் என்ன தெரியுமா?


நமது முன்னோர்கள்: காலம் தொட்டு கொண்டாடி வந்த ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் ஓர் அறிவியல் அடிப்படை இருக்கத்தான் செய்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதற்கும் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?
முன்னொரு காலத்தில் இறைவனை ஜோதியாக வணங்கி, போற்றி யுள்ளனர் தமிழர்கள். இந்த வழிபாட்டை, சங்ககால இலக்கியங்கள், ‘கார்த்திகை விளக்கீடுஎன்று குறிப்பிட்டுள்ளன. விளக்கு வழிபாடு செய்த நிகழ்வுகள், அகநானூறு மற்றும் நற்றிணை போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளன. மேலும் கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு. அதே சமயம் கார்த்திகை தீபத்தன்று மட்டுமல்ல எல்லா நாட்களிலுமே விளக்கேற்றுவது தமிழர் மரபு. தினமும் காலை, மாலை விளக்கேற்ற உகந்த நேரங்களாகும். சூரியோதயத்திற்கு முன், பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை, 4:30 – 6:00 மணி) விளக்கேற்றினால், பெரும் புண்ணியம் உண்டாகும்; முன்வினைப் பாவம் விலகும்.
மாலையில் தீபமேற்றினால், திருமணம் மற்றும் கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். பொதுவாக மாலை, 6:00 மணிக்கு தான் நாம் விளக்கேற்றுகிறோம். இதற்கு பதில், மாலை, 4:30 – 6:00 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேளையில் விளக்கேற்றினால் சிவபெருமானும், நரசிம்மரும் நமக்கு அருளுவர். காரணம் அவர்களை வணங்க ஏற்ற நேரம் இவை!கார்த்திகை மாதம்,கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவது பற்றி சம்பந்தர் பாடியுள்ளார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்என்று அவர் பாடுவதில் இருந்து, இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.
அது மட்டுமின்றி தீபஜோதி என்பது அக்னி தத்துவம்; அக்னியின் சொரூபமாக, ஈசனின் நெற்றிக் கண் அமைந்துள் ளது. அதில் எழுவது சாதாரண தீ அல்ல; அது, அநியாயக்காரர்களைக் கொல்லும்; மற்றவர்களுக்கு ஞான ஜோதி யாய் தெரியும்.ஆசையைத் தூண்டும் மன்மதனை, சிவபெருமான் எரித்தது ஞானத்தீயால் தான்! ஆசைகள் அதிகரிக்க அதிகரிக்க, பிறவிகளும் அதிகரிக்கும். அந்த ஆசைத்தீ அடங்க, சிவனின் நெற்றிக்கண்ணை நாம் தரிசிக்க வேண்டும். இதன்மூலம் பிறப்பற்ற நிலையை அடைந்து, நித்ய ஆனந்தத்தை அடையலாம்.
இன்று நம்நாட்டில் பரவிவரும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மைகாப்பதற்கு, நம்முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஒரு அருமருந்து தான் கார்த்திகை தீபம். தமிழகத்தில் மழை காலம் முடிந்தவுடன் கொசு போன்ற பிற நுண்ணுயிர்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். அவை பெரிய அளவில் பரவி மக்களுக்கு நோய்களை ஏற்படுத்துவது இந்த கார்த்திகை மாதத்தில்தான். எனவே அவைகளிடம் இருந்து நம்மை காத்து கொள்வதற்கு இந்த தீப திருநாள் வழி செய்கிறது.
அதாவது கார்த்திகை தீபத்தில் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து ஒருவித நெடி வரும். இந்த நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது. இதனால்தான் முன்னோர்கள் கார்த்திகை மாதத்தில் தீபங்களை ஏற்றி வைத்தனர்.
வாட்ஸ் அப்பில் வாழ்க்கை நடத்தும் தற்போதைய சூழ்நிலையில் பிற வேலைகளை காரணம் காட்டி, சாக்குபோக்கு சொல்லி இந்த விழாவை தவிர்க்காமல், சாஸ்திரத்துக்கு 2 தீபம் ஏற்றுவோம் என்று நினைக்காமல் வீடு நிறைய விளக்கு ஏற்றுவோம்..நம் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்வோமே.

அனைவருக்கும் கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்      
-தமிழன்

No comments:

Post a Comment