Thursday, July 9, 2020

தமிழ் இந்து மத நூல்களை திருடிய கிறிஸ்தவ மிஷனரிகள்

தமிழ் இந்து மத நூல்களை திருடிய கிறிஸ்தவ மிஷனரிகள்
#சுந்தா்ஜீ


தோலுரிப்பு தொடங்குகிறது...

"விரிவிலா வறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனு மெம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும் பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி யுய்யும் வகையது நினைக்கின் றேனே"

என்று பெருவேளூர் இறைவனைப் பாடுகிறார் திருநாவுக்கரசு சுவாமிகள். இப்பாடலின் பொருளை கீழே விளக்கி இருக்கிறோம்.

சிற்றறிவு கொண்டவர்கள் புதிய மதத்தை உண்டாகுவார்கள். பிறகு வயிற்றெரிச்சலால் அந்த மதத்தை பிரச்சாரம் செய்வார்கள். அந்த மதம் பொய்யான மதம் என்றாலும் இதனை சிவபெருமான் பொறுத்துக் கொள்கிறார். ஆனால் பெரியோர்கள் அன்போடு வழிபடும் பெருவேளூர்ப் பெருமானை வணங்கி பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுபடும் வழியை விருப்புற்று நினைக்கின்றேன் நான்.

அவரவர்களுடைய சிற்றறிவுக்குத் தகுந்த சமயத்தை உருவாக்கிக் கொள்ளவும் இறைவன் அனுமதிக்கிறான். சிற்றறிவு படிப்படியாக விரியும் போது அதற்கேற்பச் சமயங்களும் படிமுறையில் அமைகின்றன. முற்ற விரிவடைந்த அறிவுடையோர்க்கே உண்மையை உள்ளவாறு உணர்த்த இயலும். உண்மை உணர்த்தும் அச்சமயத்தை இறுதியாக அடையத்தக்கதாக வைத்தான் இறைவன்.

மற்ற சமயங்கள் யாவும் பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் இயல்புகளை விவாதித்துக் கொண்டிருக்கின்ற பூர்வ பக்கச் சமயங்கள் என்றும், அந்த முப்பொருள் இயல்புகள் இவையே என்று விவாதித்து முடித்து முடிந்த முடிவாகச் சொல்லும் சமயம் சித்தாந்தம் என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே சித்தாந்தம் என்பது காரண இடுகுறியாய்ச் சைவ சித்தாந்தத்திற்கே வழங்கப்படுகிறது.

இதனால் எல்லாச் சமயங்களும் இறைவனால் வகுக்கப்பட்டன என்றே சைவசித்தாந்தம் கொள்ளும். கொள்வதால் யாரிடமும் வம்புச் சண்டைக்குப் போவது இல்லை.

அதேசமயம் இதைச் சாதகமாக வைத்துக் கொண்டு சமயாதீதமாக விளங்கும் சைவசித்தாந்தத்தையும் சிவபரம்பொருளையும் இகழ்ந்து வம்புச் சண்டைக்கு வருவோரை விட்டு வைப்பதும் இல்லை. அது வைதீகப் புறச்சமயத்தார் ஆயினும், அவைதீகப் புறச்சமயத்தார் ஆயினும், சைவம் தன் கண்டனங்களையும் மறுப்புகளையும் தந்து கொண்டே இருந்தது.

இன்று வைதீகப் புறச்சமயத்தாரைக் காட்டிலும் பெரும்பாலும் அவைதீகப் புறச்சமயத்தாரே தொடர்ந்து சிவநிந்தனை செய்து வருகின்றனர்.

அவ்வகையில் கிறிஸ்தவ மிஷனரியான வீரமாமுனிவர் பதினேழாம் நூற்றாண்டில் சிவநிந்தனை செய்து தம் மதத்தைப் பிரச்சாரம் செய்து வந்தார். அவரைக் கண்டித்து வீரசைவ மரபில் வந்த "கற்பனைக் களஞ்சியம்" துறைமங்கலம் சிவப்பிரகாசர் "ஏசு மத நிராகரணம்" என்ற நூலை எழுதினார். அந்தச் சுவடிகள் எங்கெங்கு இருந்தனவோ எல்லாவற்றையும் வாங்கி அழித்தார்கள் வீரமாமுனிவரின் ஆட்கள். இன்று மூன்றே பாடல்கள் மட்டும் கிடைக்கின்றன. பிறகு தமிழகத்தில் பெரிதாக எந்த மோதல்களும் இல்லாமலேயே இருந்தது.

பதினாறாம் நூற்றாண்டில் இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சியில் அநேக அத்துமீறல்கள் நடந்து கொண்ட  இருந்தன. இதேநிலை அவர்களுக்குப் பின்னரும் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என்று தொடர்ந்தது.

கோயில்கள் இடிக்கப்பட்டன; வழக்கு, தண்டனை என்று அச்சுறுத்திச் சைவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டார்கள்; உத்தியோகம், பணம் ஆகியவற்றாலும் மதமாற்றம் செய்யப்பட்டார்கள்; சைவ நூல்களைக் கற்றுத் தம் சமயமே சிறந்தது என்ற உறுதியுடைய சைவர்கள் உள்ளே சைவராகவும் வெளியே கிறித்தவராகவும் இருந்து வந்தார்கள் (இவர்கள் பஞ்சாட்சரக் கிறித்தவர்கள் என்று சொல்லப்பட்டார்கள்); யாழ்ப்பாணத்து ஞானப்பிரகாசர் பசுக்கொலைக்கு அஞ்சித் தமிழகத்திற்கு வர நேர்ந்தது.

இவ்வளவு துன்பங்கள் நேர்ந்தாலும் சைவ சித்தாந்தம் அங்கே உயிர்ப்போடு இருந்தது. அதற்குக் காரணம் என்னவென்று "யாழ்ப்பாணச் சரித்திரம்" என்னும் நூலில், முத்துத் தம்பிப் பிள்ளை கூறுகிறார் பாருங்கள்.

"பறங்கிக்காரரும் ஒல்லாந்தரும் அரசு செய்த இருநூறு வருஷ காலமும் தமது சமயத்தில் பிரவேசிக்கும்படி பெருந்துன்பங்கள் செய்து குடிகளை வருத்தினர். அதற்காற்றாது அச்சமயத்தைக் (கிறிஸ்தவம்) கைக்கொண்டார் போலப் புறத்தே நடித்தும் அகத்தே சைவசமயிகளாயே இருந்தார்கள். பறங்கிக்காரரும் ஒல்லாந்தரும் தமது சமயத்தின் மேற்கொண்ட பேரபிமானம் பற்றி மற்றைச் சமய ஆலயங்களையும் சமய நூல்களையும் கல்வி நூல்களையும் எரியூட்டி அழித்தார்கள். அழித்தும் நம் முன்னோர்கள் சைவத்திலும் சமய நூல்களிலும் கல்வி நூல்களிலும் வைத்த அசையாப் பேரன்பினாலே அவற்றை இரகசியத்திற் பாதுகாத்து வந்தனர். அங்ஙனம் அவர்கள் பாதுகாத்து வையாதிருப்பரேல் யாழ்ப்பாணம் சைவமணமும் தமிழ்க்கல்வியும் சிறிதுமில்லாத நாடாயிருக்கும்."

இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்து மதத்தைக் காப்பாற்றுவேன் பேர்வழி என்று சமய நூல்களில் போதிய அறிவில்லாமல் வெறுமனே மாற்று மதத்தினரிடம் சண்டை போட்டுக் கொண்டு அவர்களைக் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டு இருப்பவரால் தம் மதத்தை எள்ளளவும் காப்பாற்ற முடியாது என்பது உறுதியாகிறது.

ஆனால் இக்காலத்தில் நம் சைவ நூல்களைப் பயிலுங்கள் என்று தலைப்பாடாக அடித்துக் கொண்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள்; அடுத்தவரை வசைபாட மட்டும் பயில்வார்கள்.

இனி யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை நினைவு கூர்வோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்கள் கிறித்தவர்களின் மதமாற்றத்தைக் கண்டிக்கும் விதமாக முத்துக்குமார கவிராசர் இயற்றிய ஞானக்கும்மி, யேசுமத பரிகாரம் ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.

பெர்சிவல் பாதிரியாருக்குப் பண்டிதராய் இருந்து தமிழ் கற்பித்த காலத்தில் பைபிள் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்திருந்ததால் அந்நூலில் உள்ள குற்றங்கள் யாவும் கிறித்தவர்களைக் காட்டிலும் ஆறுமுக நாவலருக்கு அத்துப்படி. ஆகவே தொடர்ந்து சிவநிந்தனைகளை எழுதி வந்த கிறித்தவருக்கு நாவலர் அவர்களும் நாகரிகமான முறையில் கண்டனங்களை எழுதியுள்ளார். சைவ தூஷண பரிகாரம், யாழ்ப்பாணச் சமய நிலை, சுப்பிர போதம் போன்ற நூல்கள் அவ்வாறு வெளிவந்தன.

பிறகு கிறித்தவர் தமிழ்நாட்டில் இருந்து ஒருவரை அழைத்து வந்து சைவ நிந்தனை செய்வித்தார்கள். நாவலர் அவர்கள் அந்தக் கிறித்தவரோடு வாதம் செய்யும் பொறுப்பை காசிவாசி செந்திநாதையர் அவர்களிடம் ஒப்படைத்தார்கள். கிறித்தவர்களின் சைவ நிந்தனைக் கட்டுரைகளைக் கண்டித்து எழுதித் தர்க்க ரீதியாகத் தகர்த்தார் செந்திநாதையர் அவர்கள். அதோடு நில்லாமல் பொது மேடையில் சமய வாதம் செய்யவும் ஆயத்தமானார்கள்.

இலங்கை நேசன் பத்திரிகையில் விளம்பரம் செய்து தம்முடன் வாதம் செய்ய வருமாறு கிறித்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். தாம் தோற்றால் எவ்விதக் கைம்மாறும் கருதாமல் கிறித்தவ சமய பிரச்சாரம் செய்வதாக அறிவித்தார்கள். செந்திநாதையரோடு வாதம் செய்ய எவரும் முன்வரவில்லை. ஆனால் தம் பத்திரிகை ஒன்றில் யாரோ ஒருவரைக் கொண்டு ஐயரைக் குறைகூறி "இழிமொழித் திமிர தீபிகை" என்று எழுதினார்கள். அதற்கு நாவலர் அவர்கள் இலங்கை நேசன் பத்திரிகையில், காசிவாசி செந்திநாதையர் அவர்களின் படிப்பாற்றலையும், தருக்க ரீதியில் வாதம் செய்யும் திறமையையும் குறிப்பிட்டு எழுதி அவர்களைக் கண்டித்தார்கள்.

(தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமை வாய்ந்த செந்திநாதையர் அவர்கள் காசியில் பத்தாண்டுகள் தங்கி வடமொழிச் சாத்திர நூல்களைக் கற்றுக் காசிவாசி என்று சிறப்படைந்தவர்கள்.)

கிறித்தவர் சிலர் "சிவனும் தேவனா?" என்றொரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார்கள். அதற்கு காசிவாசி செந்திநாதையர் "சிவனும் தேவனா என்னும் தீய நாவுக்கு ஆப்பு" என்றொரு நூல் செய்து வெளியிட்டார்கள். மேலும் ஒரு கண்டன நூலாக "வஜ்ரடங்கம்" (வைரக் கோடாரி) என்ற நூலை வெளியிட்டார்கள். அதோடு கிறித்தவ நூலாகிய விவிலியத்தில் குறைகளைச் சுட்டி "விவிலிய குற்சிதம்" (குற்சிதம் - அசுத்தம்) என்ற நூலை வெளியிட்டார்கள்.

யாழ்ப்பாணத்து வடகோவைச் சபாபதி நாவலர் அவர்கள், "யேசு மத சங்கற்ப நிராகரணம்" போன்ற நூல்கள் எழுதிக் கிறித்தவரைக் கண்டித்து வந்தார்கள்.

இன்னும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. இங்கே முக்கியமான சிலவற்றை மட்டும் குறிப்பிட்டோம். இவற்றில் சில நூல்கள் இன்று கிடைப்பதும் இல்லை. யாராவது அச்சிட்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

இதுகாறும் சொல்லப்பட்ட கிறித்தவர்களை ஒரு கணக்கில் சேர்க்கலாம். அவர்கள் நேரடியாக மோதினார்கள். மறைமுகமாகக் கிறித்தவத்தைத் திணிக்கும் கும்பல் ஒன்று இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இன்று வரை உள்ளது. அவர்களிடமே மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்த மறைமுகத் திணிப்பைத் தொடங்கி வைத்து வழிநடத்துபவர் தெய்வநாயகம் என்பவர் ஆவார்.

இனி அதுபற்றிக் காண்போம்...

அன்புடன்,
"சிவஞானதாசன்"
பரணிதரன்.

படங்கள் :
1. துறைமங்கலம் சிவப்பிரகாசர்

2. ஸ்ரீ காசிவாசி செந்திநாதையர்

3. ஆறுமுக நாவலர்

No comments:

Post a Comment