Sunday, December 21, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 21. குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம்

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்
21. குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம்
இத்தலம் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சிவன் கோயிலாகும்.
இக்கோயில் பிறகோயில்களைப்போல சதுர அல்லது நீண்டசதுரமாக அமையாது சங்கு வடிவில் அமைந்து இருப்பது தனிச்சிறப்பாகும்.
இறைவன் - குற்றாலநாதர் – திரிகூடநாதர், இறைவி - குழல்வாய் மொழியம்மை
பெயர்க்காரணம்: “கு’ என்றால் பிறவிப்பிணி. “தாலம்’ என்றால் தீர்ப்பது என்று பொருள். இத்தலத்தை வழிபட்டால் இம்மையிலும், மறுமையிலும் உள்ள பிறவிப்பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
கரிகாலசோழன் கோசெங்க சோழன் கால கல்வெட்டுகள் ஸ்தல விருட்சத்தில் இருந்து இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது சங்ககாலத்துக்கு முன்னர் கட்டப்பட்ட பழமையான கோயில் ஆகும்.
திருகுற்றாலநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்றது.
இத்தலத்தில் திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.
அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது.
முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது.
இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட மகாசந்தனாதித்தைலம் கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.
இது பல மூலிகைகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுகின்றது.
இது தலைவலி, வயிற்றுவலி சயரோகம் முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது.
நான்கு வேதங்கள் 4 வாயிலாகவும், இறைவனின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஐந்தாவது வாயிலாகவும் அமைந்துள்ளது.
இங்குள்ள துவாரபாலகர்களின் அமைப்பு மிகவும் சிறப்பானது.
நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என பஞ்சபூத லிங்கங்களையும் இங்கு ஒன்றாக தரிசிக்கலாம்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று சிகரங்கள் குற்றால மலையில் உள்ளன.
இவ்வாறு மும்மூர்த்திச் சிகரங்கள் உள்ளதால் குற்றால மலையை ‘திரிகூட மலை’ என்று அழைக்கிறார்கள்.
ஊழிக் காலங்களில் மீண்டும் உலகைப் படைத்துக் காத்து ஈசன் நிலையாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம் இந்த குற்றாலம் ஆகும்.
அதிசயம்:1 லிங்க வடிவ அதிசய பலா:
தலவிருட்சம் பலா மரத்தைச் சுற்றி சிறிய சன்னதி எழுப்பப்பட்டிருக்கிறது. இம்மரத்தின் கீழ் “ஆதிகுறும்பலாநாதர்’ பீட வடிவில் காட்சி தருகிறார்.
இந்த மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை.
இந்த பலாவில் உள்ள சுளைகள், “லிங்க’த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம். இதை பழமையான நூலான குற்றாலக்குறவஞ்சி, “”சுளையெலாஞ் சிவலிங்கம்” என்று குறிப்பிடுகிறது.
அதிசயம் 2: சிற்ப வேலைப்பாடுகள்
நுழைவு வாயிலின் முன்னர் இரண்டு குறிஞ்சி கோபுரமும் நுழைவு வாயிலின் முன் மண்டபத்தின் கைப்பிடியாக இரண்டு கல் யானைகளும் 100 தூண்களைக் கொண்ட திரிகூட மண்டபமும் இரண்டாவதாக வரவேற்பு மண்டபமும் அமைந்துள்ளது.
இந்த மண்டபம் மரத்தூண்களால் அழகிய வேலைப்பாடுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அதிசயம்: 3 மரத்தாலான சிற்பங்கள் மூலிகை ஓவியங்கள்
சித்திர சபை கோவில் என்பது திருக்குற்றாலநாதர் கோவிலின் துணைக்கோவில் ஆகும், இது நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில் ஒன்று;
குற்றாலத்தில் உள்ள இந்த மரத்தாலான கோவில் அதன் சுவர்களில் மூலிகை வண்ணங்களால்
வரையப்பட்டிருக்கும் புராணக் காட்சிகள் மற்றும் ஓவியங்களுக்குப் புகழ்பெற்றது,
இது பிரம்மதேவன் எழுதியதாகக் கருதப்படுகிறது. இது குற்றாலநாதர் கோவிலில் இருந்து ஐந்தருவி போகும்
வழியில் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இது மரத்தாலான அமைப்புடன், பிரமிடு போன்ற கூரையுடன், தாமிரத் தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரையை உடையது.
சிவ-பார்வதி திருமணத்தின்போது பூமியின் சமநிலையை நிலைநாட்ட அகஸ்திய முனிவர் தெற்கே சென்றதால், இத்தலம் "சித்திர சபை" எனப் பெயர் பெற்றது.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்


 

No comments:

Post a Comment