Saturday, December 20, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 20. ஜம்புகேஸ்வரர் திருவானைக்காவல் திருச்சி

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்
20. ஜம்புகேஸ்வரர் திருவானைக்காவல் திருச்சி
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், திருச்சியில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீர் தலமாகும்; 
சிவன் ஜம்புகேஸ்வரராகவும், பார்வதி அகிலாண்டேஸ்வரியாகவும் அருள்பாலிக்கிறார்கள்,
இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அம்பிகை அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். 
அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களிலிருந்த நீர் லிங்கமாக மாறியது. 
அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால், சிவலிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.
ஜம்பு முனிவர் என்பவர் ஜம்பு மரத்தின் அடியில் உள்ள இந்த சிவலிங்கத்தை வழிபட்டதால் இத்தலத்திற்கு ஜம்புகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் 5 ஆம் நூற்றாண்டு வரையிலான சங்க காலத்தின் இறுதிக்கட்டம் அல்லது அதற்குப் பிந்தைய பிற்காலச் சங்க காலத்தில் வாழ்ந்த கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோயில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் இது போன்ற 70 சிவன் கோயில்களைக் கட்டியவர் இவர். 
இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர், சிவபக்தியில் சிறந்தவர்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத் (நீர்) தலமாகும் வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர்.  
அதனால் இங்குள்ள மூலவர் சுயம்பு சிவலிங்கத்தின் அடியில் எப்போதும் நீர் ஊற்று ஓடிக்கொண்டே இருக்கும்.
இவரை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாகத்தான் தரிசிக்க முடியும்.
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்ற நாயன்மார்களால் பாடல் பெற்ற தலம்.
அகிலாண்டேசுவரி அம்மன் காலையில் லட்சுமியாக, உச்சிக் காலத்தில் பார்வதியாக, மாலையில் சரஸ்வதியாகத் திகழ்வதால், அம்பிகைக்கு மூன்று வண்ண உடை அலங்காரங்கள் மூன்று வேளைகளிலும் செய்யப்படுகிறது. 
சிவபெருமான், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். 
எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். 
சிவபெருமான் குருவாக இருந்து பார்வதிக்கு உபதேசித்த தலம் என்பதால் இங்கு திருக்கல்யாணம் நடப்பதில்லை. 
திருமணமும் நடைபெறுவதில்லை.
இத்தலத்திலுள்ள இறைவனை தரிசிப்பதற்காகவே ரங்கநாதர் ஶ்ரீரங்கத்தில் எழுந்தருளி இருப்பதாக கஜாரண்ய ஷேத்திர மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. 
வருடத்தில் ஒருநாள் ஶ்ரீரங்கத்தில் இருந்து ரங்கநாதர் புறப்பட்டு இத்தலம் வந்து தங்கியிருந்து, அன்றிரவு விசேஷ அலங்காரத்துடன் ஶ்ரீரங்கம் திரும்பும் உற்சவம் நடைபெறுகிறது.
அதிசயம் 1; மூலவர் சிவலிங்கத்தின் அடியில் வற்றாத ஊற்று நீர்
நீர் ஸ்தலமான ஜம்புகேஸ்வரர் ஆலய மூலவர் சுயம்பு லிங்கத்தின் அடியில் எப்போதும் நீர் ஊற்றெடுக்கிறது, இதை தீர்த்தமாக அருந்தலாம்.
அதிசயம் 2: ஆயிரம் கால் மண்டபம்
1000 தூண்கள் கொண்ட மண்டபம், பிரம்மாண்டமான கட்டிடக்கலைக்கு சான்று.
அதிசயம் 3: கட்டிட கலை நுணுக்கம்
நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மி்க வைப்பதாக உள்ளது. 
அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்திரூபமாக செதுக்கப்பட்டுள்ளாள்.
ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர் குறிப்பிடத்தக்கவர்
முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில், ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். 
முருகனும், காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில், ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்
இங்குள்ள சனிபகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். எனவே இவர் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். 
மேலும் சனியின் மனைவிகளான ஜேஷ்டாதேவி, நீலாதேவியும் குழந்தை வடிவில் அருள்பாலிக்கின்றனர்.
1800 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த 
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும். 
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய… 
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்


 

No comments:

Post a Comment