Friday, December 19, 2025

தினம் ஒரு ஆலயம் அதிசயம் 19. காளத்தீஸ்வர நாதர் திருக்கோயில் காளாஸ்திரி

தினம் ஒரு ஆலயம் அதிசயம்
19. காளத்தீஸ்வர நாதர் திருக்கோயில் காளாஸ்திரி
இது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. காளகத்தீசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
முந்தைய தமிழகத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பிறகு திருக்காளத்தி என்னும் தமிழ் பெயரை மருவி ஸ்ரீகாளஹஸ்தி என்று பெயர் மாற்றப்பட்டது.
தற்போதைய ஸ்ரீகாளஹஸ்தி நகரம் ஆந்திரா மாநிலத்தில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டது.
கி.பி.6ம் நூற்றாண்டில் அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்னர்) பல்லவ மன்னர் முதலில் இங்கு கோயில் கட்ட ஆரம்பித்தார்.
பின்னர் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவில் கட்டிய இராசராச சோழன் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் விரிவு படுத்தி கட்டிய கோவிலாகும்.
மூலவர், சுயம்புலிங்கம் - தீண்டாத் திருமேனி (யாரும் தொடாதது). சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது
சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது; இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன.
சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. கருவறை அகழி அமைப்புடையது.
இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளகத்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.
கண்ணப்பர் நாயனார் சிவபெருமானுக்கு கண் காணிக்கை செய்த தலமாகும்.;
கண்ணப்பர் என்ற பக்தர் சிவபெருமானுக்கு தன் கண்களைப் பிடுங்கி காணிக்கையாகச் சமர்ப்பித்த வரலாறு இந்த தலத்துடன் தொடர்புடையது.
பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இது இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளகத்தி கோயில் .
இக்கோவிலின் மூலவர் ஞானபிரசுனாம்பிகை தாயார் செங்குந்த கைக்கோளர் மரபு வெள்ளாத்தூரார் கோத்திரத்தில் தோன்றியவர்.
இதனால் இங்கு நடைபெறும் சிவன் பார்வதி திருக்கல்யாணத்தில் இம்மரபினர் சார்பில், பெண் வீட்டு சீதனம் கொண்டுவந்து சமர்ப்பிப்பது வழக்கம்
சம்பந்தரால் பாடப் பெற்ற இத்தலம், கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனக் கருதப்படுகிறது.
கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நிதியில் திருநீறு தரும் மரபில்லையாம்;
பச்சைக்கற்பூரத்தைப் பன்னீர்விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்து தரிசிப்போருக்கு தருகின்றனர்.
அம்பாள் - ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம்; திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு ' உள்ளது.
அதிசயம் 1: இரண்டு கால் மண்டபம்
2 கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாகவுள்ளது;
கவனித்தால்தான் தெரியும். பலபேர், 'காளத்தி சென்று வந்தேன்' என்று சொன்னால், 'இரண்டு கால் மண்டபம் ' பார்த்தாயா? என்று கேட்கும் வழக்கம் உள்ளது.
அதிசயம் 2: முப்பத்தைந்து அடி பாதாள விநாயகர்
அகத்தியர் பிரதிஷ்டை செய்து வணங்கிய பாதாள விநாயகர் சந்நிதி - விநாயகர் 35 அடி ஆழத்தில் உள்ளார்.
விநாயகர் அமர்ந்துள்ள இடம், பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது
.
அதிசயம் 3: ஒரே கல்லாலான 60 அடி உயர கொடிமரம்
இரு கொடி மரங்களில் ஒன்று கவசமிட்டது; மற்றொன்று ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுள்ள கொடி மரமாகும்.
அதிசயம் 4: காற்றில்லாமல் ஆடும் தீபம்
மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு; இஃது வாயுத்தலம் என்பதை நிதர்சனமாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.
அதிசயம்:5 சிவலிங்கத்தின் மீது படும் சூரிய ஒளி
சூரியனின் கதிர்கள் லிங்கத்தின் மீது படும் வகையில் கூரையில் அமைப்பு இருப்பது, மற்றும் கிரகணங்களின் போதும் கோவில் திறந்திருப்பது போன்ற அரிய அம்சங்கள் உள்ளன
1500 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்
எல்லா உணர்ச்சிகளும்:
2


 

No comments:

Post a Comment