Wednesday, December 24, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 24. விடங்கீஸ்வரர் திருக்கோயில் குண்டடம் திருப்பூர்





தினம் ஒரு ஆலயம் - அதிசயம்

24. விடங்கீஸ்வரர் திருக்கோயில் குண்டடம் திருப்பூர்

குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோயில்

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் உள்ள குண்டடம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.

காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது.

அதுமட்டுமல்ல, அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் 'கொன்ற இடம்' என்றே வழங்கப்பட்டது.

அதுவே நாளடைவில் 'குண்டடம்' என்று மருவிவிட்டது.
பஞ்ச பாண்டவர்கள், இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது, திரெளபதி மேல் அரக்கன் ஒருவன், ஆசை கொண்டதாகவும், அதனால் கோபப்பட்ட பீமன், அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான்
என்பதால் 'குண்டடம்' என்ற பெயர் எழுந்ததாகவும் இன்னொரு புராணம் சொல்கிறது.

போர் நடந்த பூமி இது என்பதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்களே போதும்.ரத்தக்காடு, சாம்பல் காடு, களரிக்காடு இந்த கிராமத்தில் உள்ள காடுகளின் மற்றும் இருப்பிடங்கள் பெயர்கள் ஆகும்.

அதிசயம் மிக அதிசயம்:

குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. ஒவ்வொரு மாதத்திலும் எந்தெந்த விதமாக இருக்கும் என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள்.

கருமுட்டையில் விந்தணு நுழைவதைப் போல ஒரு சிற்பமும் உள்ளது.

அந்த காலத்தில் கருமுட்டை வடிவத்தை விந்தணுவின் வடிவத்தை எப்படி தெரிந்து வைத்திருப்பார்கள்

கர்ப்பமுற்ற தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் வடிவத்தை மட்டும் எப்படி தெரிந்து சிலையாக வடித்திருக்கிறார்கள்.

பழந்தமிழர்களிடம் அற்புதமான மருத்துவ விஞ்ஞானம் இருந்தது என்பதற்கு சாட்சியே சித்த மருத்துவம்.

இந்த சிலைகளில் ஒரு முக்கியமான செய்தியும் ஒளிந்திருக்கிறது. ஓம் என்ற எழுத்திற்கு உள்ளேயும் அறுகோண நட்சத்திரத்திற்கு உள்ளேயும் தான் குழந்தையின் வடிவம் அந்த சிலைகளில் உள்ளது.

ஓம் என்ற ஒலியும், அறுகோண நட்சத்திரமும் முருகக் கடவுளோடு தொடர்பு உடையவை..

1000 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த

கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .

தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

ஓம் நமசிவாய…

சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்

 


 

Tuesday, December 23, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 23. சோழீஸ்வரர் திருக்கோயில் கங்கைகொண்ட சோழபுரம்

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்

23. சோழீஸ்வரர் திருக்கோயில் கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில், தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது.

இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி.1020இல் கட்டப்பட்டது.

கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினான்.

இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்

2004-இல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டன.

அதுமுதல் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இந்த திருத்தலம் பராமரிக்கபடுகிறது.

அதிசயம் 1:பிரமாண்ட சிவலிங்கம்

தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கம் ஒரே கல்லால் ஆன மூலவர் பிரமாண்டமாக இங்கு தான் உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது.

ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர்.

அதிசயம் 2: நந்தி மூலம் சூரிய ஒளி பிரதிபளிப்பு

இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது.

இந்த நந்தியும் மிகவும் பெரியது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள கருவறை சிவலிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத கட்டிடக்கலை சாட்சியான காட்சியாகும்.

அதிசயம் 3: அந்த காலத்தில் இயற்கை ஏசி

மூலவர் சிவலிங்கத்தின் அடியில் சந்திரகாந்தக்கல் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் வெப்பத்தையும் தருகிறது.

கருவறை எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் அங்கு சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்று பார்த்தால், அதன் உட்புறச் சுவர்கள் எல்லாவற்றிலுமிருந்து தண்ணீர், வியர்வைபோல முத்து முத்தாய், வடிவதைக் காணலாம்.

கர்ப்பக்கிரகம் 10 டன் A/c போட்டது போன்று குளுமையாக இருக்கும். கடும் கோடையில்கூட அந்தக் குளிர்ச்சி மாறாது.

இன்றுவரை குளிர்ச்சியாகவே இருக்கிறது.

கல்வெட்டுகளில் ‘சந்திரகாந்தக்கல்’ என்று குறிப்பிடப்படும் ஒருவகைக் கற்களால் கட்டியதால்தான் இந்தக் குளிர்ச்சி நிலை என்று கூறப்பட்டுள்ளது.

தொழிற்நுட்பத்தில் பழந்தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றுகிறது.

அதிசயம் 4: நவகிரகங்கள்

ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம் இக்கோயிலில் அமைந்துள்ளது

டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்படாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்பது கிரங்கள் இருக்கிறது என்று தமிழர் உணர்ந்து அதை சிலையாய் வடித்து தன் வானியல் அறிவை உலகிற்கு முதலில் உணர்த்தியவர்கள் தமிழர்கள்.

அதற்கு இந்த கோயில் நவகிரகமே சாட்சி.

அதிசயம் 5: வீணை இல்லாத பூணூல் அணிந்த சரஸ்வதி

இத்தலத்தில் கையில் வீணை இல்லாமல் சரஸ்வதி தேவி எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

சிலையில் ஞான சரஸ்வதியாக தாமரை பீடத்தின் மேல் அமர்ந்து காட்சி தருகிறாள்.

அர்த்த (பாதி) பத்மாசனத்தில் காட்சி தரும் இவளின் வலது கையின் ஆள்காட்டி விரல் மேல் நோக்கியபடி உள்ளது.

இதற்கு சூசி முத்திரை என பெயர். கடவுளைப் பற்றி அறிவதே மேலானது என்ற ஞான உபதேசத்தை நமக்கு போதிக்கிறாள்.

சாந்த முகத்துடன் மார்பில் பூணூல், கைகளில் ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் என கலை நயத்துடன் காட்சி அளிக்கும் இவளது தோற்றம், பார்ப்பவரை பரவசமடைய செய்யும்.

அதிசயம் 6: முப்பரிமாண நடராஜர்

தென்கிழக்கு மூலையில் முப்பரிமாண நடராஜர் சிலை சிற்ப சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் சோழர் கால கட்டட கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

அதிசயம் 7 கலச நிழல் விழாது:

160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் பூமியில் விழாதவாறு கட்டிடகலை கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது

அதிசய்ம் 8: சிங்கமுக கிணறு

கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிமாண்ட சிங்க வாயிலில் இருந்து உள்ளே படிக்கட்டில் கீழே சென்றால் குகைபோல ஒரு கிணறு இருக்கிறது.

மேலிந்து பார்த்தால் எதுவும் தெரியாது. ஆனால் உள்ளே அரச பெண்கள் ராணிகள் குளிக்கும் வகையில் பிரமாண்ட கிணறு இது.

போர் காலங்களில் இங்கிருந்து தப்பிக்கவும் சுரங்கபாதை உண்டு என்று சொல்கிறார்கள்.

அதிசயம் 9: சோழகங்கம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீர் வசதி ஆறுகளே இல்லாத இடத்தில் ஒரு மிகப்பெரிய ஏரியை அதாவது ஆறு கி.மீ. நீளம் 3 கி.மீ. அகலத்தில் பிரமாண்ட ஏரியை மனித சக்தியால் புதிதாக உருவாக்கி

அதற்கு நீர் ஆதாரமாக 60 கி.மீ. தள்ளி இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டி இதில் இணைத்தது மிகப்பெரிய சாதனை.

இந்த ஏரியில் ராஜேந்திர சோழன் கங்கை மன்னனை வெற்றிகொண்டு அங்கிருந்து தோற்ற மன்னர்கள் தலையில் கங்கை நீரை தலையில் கொண்டு வந்து தாம் கட்டிய இந்த ஏரியில் நிரப்பி இதை சோழகங்கம் என்று பெயர் சூட்டினார்.

இது இன்றும் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று.

யோசித்துப்பாருங்கள் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு ஏரி கட்ட எவ்வளவு சிரமம் என்றும் அதிசயம் என்றும் புரியும்.

1000 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த

கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .

தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

ஓம் நமசிவாய…

சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்

 

Monday, December 22, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 22. வட ஆரண்யேஸ்வரர் கோயில் திருவாலங்காடு திருவள்ளூர்

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்
22. வட ஆரண்யேஸ்வரர் கோயில் திருவாலங்காடு திருவள்ளூர்
இச்சிவாலயத்தின் மூலவர் வட ஆரண்யேஸ்வரர், தாயார் வண்டார்குழலி.
சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
நடராஜ பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபை ஆகும்.
வடஆரண்யம் என்றால் ஆலமரக்காடு என்று பொருள்படும். பண்டையக் காலத்தில் இத்தலம்
ஆலமரங்கள் நிறைந்திருந்த காடாக காட்சியளித்ததால் இப்பெயர் பெற்றது.
கி.பி. 5ம் நூற்றாண்டு அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன் எழுத்தப்பட்ட சோழர் கால கல்வெட்டு இங்கு கிடைக்கப்பட்டதால் அதற்கு முன்னர் இருந்து இந்த கோயில் இருந்திருக்கவேண்டும் என்று உணர முடிகிறது.. கோயிலை முதன் முதலில் கட்டியவர் பற்றிய குறிப்புகள் இல்லை.
இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது.
சிவபெருமான் காரைக்கால் அம்மையாருக்கு காட்சி தந்த தலமும் இதுவே.
அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம்.
நடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டம் என்பது சிவபெருமான் தனது ஒரு காலை வானை நோக்கி செங்குத்தாக உயர்த்தி ஆடி காளியின் கர்வத்தை அடக்கிய, மிகவும் கடினமான தாண்டவ நடனம்;
இந்த நடனத்தின்போது, கீழே விழுந்த காதணியை சிவபெருமான் தன் காலால் எடுத்து மீண்டும் அணிந்துகொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.
சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும்; திருமுறைபேழையும் உள்ளன.
திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
அதிசயம் 1: சிலையில் ஆச்சரிய பாவனை
இங்குள்ள அம்பாளை, “சமிசீனாம்பிகை’ என்பர். “சமிசீனம்’ என்றால், “ஆச்சரிய பாவனை!’ இவளது விக்ரகம், நடராஜரின் நடனத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் நிற்பது போல செதுக்கப்பட்டுள்ள தால், இப்படி ஒரு பெயரை சூட்டினர்.
அற்புதமான சோழர் காலச் சிற்பங்கள், தூண்களில் உள்ள சிலைகள், யாழி சிற்பங்கள் ஆகியவை சிறப்பு.
அதிசயம் :2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செப்பேடுகள்:
தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன.
ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள், சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன.
இவை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.
அதிசயம் 3:
இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் உள்ள மாந்தீஸ்வரர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சனி பகவானின் இரண்டு மைந்தர்களில் ஒருவர் மாந்தி. ஒருமுறை, மாந்தி தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க திருவாலங்காடு திருத்தலம் வந்து ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றார்.
மாந்தி வழிபட்ட சிவலிங்கம் மாந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்


 

Sunday, December 21, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 21. குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம்

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்
21. குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம்
இத்தலம் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சிவன் கோயிலாகும்.
இக்கோயில் பிறகோயில்களைப்போல சதுர அல்லது நீண்டசதுரமாக அமையாது சங்கு வடிவில் அமைந்து இருப்பது தனிச்சிறப்பாகும்.
இறைவன் - குற்றாலநாதர் – திரிகூடநாதர், இறைவி - குழல்வாய் மொழியம்மை
பெயர்க்காரணம்: “கு’ என்றால் பிறவிப்பிணி. “தாலம்’ என்றால் தீர்ப்பது என்று பொருள். இத்தலத்தை வழிபட்டால் இம்மையிலும், மறுமையிலும் உள்ள பிறவிப்பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
கரிகாலசோழன் கோசெங்க சோழன் கால கல்வெட்டுகள் ஸ்தல விருட்சத்தில் இருந்து இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது சங்ககாலத்துக்கு முன்னர் கட்டப்பட்ட பழமையான கோயில் ஆகும்.
திருகுற்றாலநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்றது.
இத்தலத்தில் திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.
அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது.
முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது.
இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட மகாசந்தனாதித்தைலம் கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.
இது பல மூலிகைகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுகின்றது.
இது தலைவலி, வயிற்றுவலி சயரோகம் முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது.
நான்கு வேதங்கள் 4 வாயிலாகவும், இறைவனின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஐந்தாவது வாயிலாகவும் அமைந்துள்ளது.
இங்குள்ள துவாரபாலகர்களின் அமைப்பு மிகவும் சிறப்பானது.
நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என பஞ்சபூத லிங்கங்களையும் இங்கு ஒன்றாக தரிசிக்கலாம்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று சிகரங்கள் குற்றால மலையில் உள்ளன.
இவ்வாறு மும்மூர்த்திச் சிகரங்கள் உள்ளதால் குற்றால மலையை ‘திரிகூட மலை’ என்று அழைக்கிறார்கள்.
ஊழிக் காலங்களில் மீண்டும் உலகைப் படைத்துக் காத்து ஈசன் நிலையாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம் இந்த குற்றாலம் ஆகும்.
அதிசயம்:1 லிங்க வடிவ அதிசய பலா:
தலவிருட்சம் பலா மரத்தைச் சுற்றி சிறிய சன்னதி எழுப்பப்பட்டிருக்கிறது. இம்மரத்தின் கீழ் “ஆதிகுறும்பலாநாதர்’ பீட வடிவில் காட்சி தருகிறார்.
இந்த மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை.
இந்த பலாவில் உள்ள சுளைகள், “லிங்க’த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம். இதை பழமையான நூலான குற்றாலக்குறவஞ்சி, “”சுளையெலாஞ் சிவலிங்கம்” என்று குறிப்பிடுகிறது.
அதிசயம் 2: சிற்ப வேலைப்பாடுகள்
நுழைவு வாயிலின் முன்னர் இரண்டு குறிஞ்சி கோபுரமும் நுழைவு வாயிலின் முன் மண்டபத்தின் கைப்பிடியாக இரண்டு கல் யானைகளும் 100 தூண்களைக் கொண்ட திரிகூட மண்டபமும் இரண்டாவதாக வரவேற்பு மண்டபமும் அமைந்துள்ளது.
இந்த மண்டபம் மரத்தூண்களால் அழகிய வேலைப்பாடுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அதிசயம்: 3 மரத்தாலான சிற்பங்கள் மூலிகை ஓவியங்கள்
சித்திர சபை கோவில் என்பது திருக்குற்றாலநாதர் கோவிலின் துணைக்கோவில் ஆகும், இது நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில் ஒன்று;
குற்றாலத்தில் உள்ள இந்த மரத்தாலான கோவில் அதன் சுவர்களில் மூலிகை வண்ணங்களால்
வரையப்பட்டிருக்கும் புராணக் காட்சிகள் மற்றும் ஓவியங்களுக்குப் புகழ்பெற்றது,
இது பிரம்மதேவன் எழுதியதாகக் கருதப்படுகிறது. இது குற்றாலநாதர் கோவிலில் இருந்து ஐந்தருவி போகும்
வழியில் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இது மரத்தாலான அமைப்புடன், பிரமிடு போன்ற கூரையுடன், தாமிரத் தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரையை உடையது.
சிவ-பார்வதி திருமணத்தின்போது பூமியின் சமநிலையை நிலைநாட்ட அகஸ்திய முனிவர் தெற்கே சென்றதால், இத்தலம் "சித்திர சபை" எனப் பெயர் பெற்றது.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்


 

Saturday, December 20, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 20. ஜம்புகேஸ்வரர் திருவானைக்காவல் திருச்சி

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்
20. ஜம்புகேஸ்வரர் திருவானைக்காவல் திருச்சி
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், திருச்சியில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீர் தலமாகும்; 
சிவன் ஜம்புகேஸ்வரராகவும், பார்வதி அகிலாண்டேஸ்வரியாகவும் அருள்பாலிக்கிறார்கள்,
இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அம்பிகை அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். 
அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களிலிருந்த நீர் லிங்கமாக மாறியது. 
அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால், சிவலிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.
ஜம்பு முனிவர் என்பவர் ஜம்பு மரத்தின் அடியில் உள்ள இந்த சிவலிங்கத்தை வழிபட்டதால் இத்தலத்திற்கு ஜம்புகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் 5 ஆம் நூற்றாண்டு வரையிலான சங்க காலத்தின் இறுதிக்கட்டம் அல்லது அதற்குப் பிந்தைய பிற்காலச் சங்க காலத்தில் வாழ்ந்த கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோயில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் இது போன்ற 70 சிவன் கோயில்களைக் கட்டியவர் இவர். 
இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர், சிவபக்தியில் சிறந்தவர்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத் (நீர்) தலமாகும் வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர்.  
அதனால் இங்குள்ள மூலவர் சுயம்பு சிவலிங்கத்தின் அடியில் எப்போதும் நீர் ஊற்று ஓடிக்கொண்டே இருக்கும்.
இவரை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாகத்தான் தரிசிக்க முடியும்.
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்ற நாயன்மார்களால் பாடல் பெற்ற தலம்.
அகிலாண்டேசுவரி அம்மன் காலையில் லட்சுமியாக, உச்சிக் காலத்தில் பார்வதியாக, மாலையில் சரஸ்வதியாகத் திகழ்வதால், அம்பிகைக்கு மூன்று வண்ண உடை அலங்காரங்கள் மூன்று வேளைகளிலும் செய்யப்படுகிறது. 
சிவபெருமான், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். 
எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். 
சிவபெருமான் குருவாக இருந்து பார்வதிக்கு உபதேசித்த தலம் என்பதால் இங்கு திருக்கல்யாணம் நடப்பதில்லை. 
திருமணமும் நடைபெறுவதில்லை.
இத்தலத்திலுள்ள இறைவனை தரிசிப்பதற்காகவே ரங்கநாதர் ஶ்ரீரங்கத்தில் எழுந்தருளி இருப்பதாக கஜாரண்ய ஷேத்திர மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. 
வருடத்தில் ஒருநாள் ஶ்ரீரங்கத்தில் இருந்து ரங்கநாதர் புறப்பட்டு இத்தலம் வந்து தங்கியிருந்து, அன்றிரவு விசேஷ அலங்காரத்துடன் ஶ்ரீரங்கம் திரும்பும் உற்சவம் நடைபெறுகிறது.
அதிசயம் 1; மூலவர் சிவலிங்கத்தின் அடியில் வற்றாத ஊற்று நீர்
நீர் ஸ்தலமான ஜம்புகேஸ்வரர் ஆலய மூலவர் சுயம்பு லிங்கத்தின் அடியில் எப்போதும் நீர் ஊற்றெடுக்கிறது, இதை தீர்த்தமாக அருந்தலாம்.
அதிசயம் 2: ஆயிரம் கால் மண்டபம்
1000 தூண்கள் கொண்ட மண்டபம், பிரம்மாண்டமான கட்டிடக்கலைக்கு சான்று.
அதிசயம் 3: கட்டிட கலை நுணுக்கம்
நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மி்க வைப்பதாக உள்ளது. 
அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்திரூபமாக செதுக்கப்பட்டுள்ளாள்.
ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர் குறிப்பிடத்தக்கவர்
முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில், ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். 
முருகனும், காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில், ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்
இங்குள்ள சனிபகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். எனவே இவர் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். 
மேலும் சனியின் மனைவிகளான ஜேஷ்டாதேவி, நீலாதேவியும் குழந்தை வடிவில் அருள்பாலிக்கின்றனர்.
1800 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த 
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும். 
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய… 
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்


 

Friday, December 19, 2025

தினம் ஒரு ஆலயம் அதிசயம் 19. காளத்தீஸ்வர நாதர் திருக்கோயில் காளாஸ்திரி

தினம் ஒரு ஆலயம் அதிசயம்
19. காளத்தீஸ்வர நாதர் திருக்கோயில் காளாஸ்திரி
இது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. காளகத்தீசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
முந்தைய தமிழகத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பிறகு திருக்காளத்தி என்னும் தமிழ் பெயரை மருவி ஸ்ரீகாளஹஸ்தி என்று பெயர் மாற்றப்பட்டது.
தற்போதைய ஸ்ரீகாளஹஸ்தி நகரம் ஆந்திரா மாநிலத்தில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டது.
கி.பி.6ம் நூற்றாண்டில் அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்னர்) பல்லவ மன்னர் முதலில் இங்கு கோயில் கட்ட ஆரம்பித்தார்.
பின்னர் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவில் கட்டிய இராசராச சோழன் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் விரிவு படுத்தி கட்டிய கோவிலாகும்.
மூலவர், சுயம்புலிங்கம் - தீண்டாத் திருமேனி (யாரும் தொடாதது). சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது
சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது; இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன.
சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. கருவறை அகழி அமைப்புடையது.
இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளகத்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.
கண்ணப்பர் நாயனார் சிவபெருமானுக்கு கண் காணிக்கை செய்த தலமாகும்.;
கண்ணப்பர் என்ற பக்தர் சிவபெருமானுக்கு தன் கண்களைப் பிடுங்கி காணிக்கையாகச் சமர்ப்பித்த வரலாறு இந்த தலத்துடன் தொடர்புடையது.
பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இது இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளகத்தி கோயில் .
இக்கோவிலின் மூலவர் ஞானபிரசுனாம்பிகை தாயார் செங்குந்த கைக்கோளர் மரபு வெள்ளாத்தூரார் கோத்திரத்தில் தோன்றியவர்.
இதனால் இங்கு நடைபெறும் சிவன் பார்வதி திருக்கல்யாணத்தில் இம்மரபினர் சார்பில், பெண் வீட்டு சீதனம் கொண்டுவந்து சமர்ப்பிப்பது வழக்கம்
சம்பந்தரால் பாடப் பெற்ற இத்தலம், கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனக் கருதப்படுகிறது.
கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நிதியில் திருநீறு தரும் மரபில்லையாம்;
பச்சைக்கற்பூரத்தைப் பன்னீர்விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்து தரிசிப்போருக்கு தருகின்றனர்.
அம்பாள் - ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம்; திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு ' உள்ளது.
அதிசயம் 1: இரண்டு கால் மண்டபம்
2 கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாகவுள்ளது;
கவனித்தால்தான் தெரியும். பலபேர், 'காளத்தி சென்று வந்தேன்' என்று சொன்னால், 'இரண்டு கால் மண்டபம் ' பார்த்தாயா? என்று கேட்கும் வழக்கம் உள்ளது.
அதிசயம் 2: முப்பத்தைந்து அடி பாதாள விநாயகர்
அகத்தியர் பிரதிஷ்டை செய்து வணங்கிய பாதாள விநாயகர் சந்நிதி - விநாயகர் 35 அடி ஆழத்தில் உள்ளார்.
விநாயகர் அமர்ந்துள்ள இடம், பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது
.
அதிசயம் 3: ஒரே கல்லாலான 60 அடி உயர கொடிமரம்
இரு கொடி மரங்களில் ஒன்று கவசமிட்டது; மற்றொன்று ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுள்ள கொடி மரமாகும்.
அதிசயம் 4: காற்றில்லாமல் ஆடும் தீபம்
மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு; இஃது வாயுத்தலம் என்பதை நிதர்சனமாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.
அதிசயம்:5 சிவலிங்கத்தின் மீது படும் சூரிய ஒளி
சூரியனின் கதிர்கள் லிங்கத்தின் மீது படும் வகையில் கூரையில் அமைப்பு இருப்பது, மற்றும் கிரகணங்களின் போதும் கோவில் திறந்திருப்பது போன்ற அரிய அம்சங்கள் உள்ளன
1500 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்
எல்லா உணர்ச்சிகளும்:
2