#குங்கிலியக்கலய_நாயனார்
இது என்ன கொடுமை? இப்படிக் கூட செய்வார்களா??
தெருவில் எல்லோரும் இதைப்பற்றி பெருமையாகப் பேசிக் கொள்கிறார்களே ஒருவருக்கு கூட உறுத்தவில்லையா...
நடந்து சென்றால் 10 மணி நேரத்தில் #திருக்கடையூரில் இருந்து திருப்பனந்தாள் சென்றுவிடலாம் . ஓடிவிடலாம் ஓட ஓட எப்படியும் 6 மணி நேரத்தில் அடைந்து விடலாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கிருக்க வேண்டும். மனது பதைபதைத்தது குங்கிலயக்கலயருக்கு.
தாடகை என்ற #பெண்ணின் பக்தியைப் பெரிதாகக் கருதிய இறைவன் அவளுக்காக சாய்ந்த நிலையில் இன்று வரை விளங்குகிறார். மன்னருக்கு இது தெரியாதா இல்லை இதை மற்றவர்கள் தான் சொல்லவில்லையா. சாய்ந்து உள்ள #லிங்கத்தை நிமிர்த்த யானைகள் குதிரைகள் கட்டி இழுக்கிறாராமே ...
#ஐயோ, எம்பெருமானே நான் கேள்விப்பட்டது வெறும் பொய்யாகத்தான் இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் இருந்தால் நினைத்ததை செய்யலாமா? குங்கிலயரின் மனது நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாலும் கால்கள் ஓடிக்கொண்டே இருந்தது.
#செம்பொன்னார் #கோவில் மணியோசை மற்ற நேரங்களில் நின்று கேட்கத் தோன்றும். இன்றோ அதையும் தாண்டி #ஓட்டம். வேள்விக்குடியே வேடிக்கை பார்த்தது. ஏதோ உச்சி வெயிலில் பைத்தியம் ஒடுகிறது என்று. இலக்கு தெரிந்தபடியால் வழி விசாரிக்கக் கூட அவசியம் இல்லை அதற்கு நேரமும் இல்லை.
இதோ திருப்பனந்தாள் எல்லையிலேயே கூட்டம் கூடி #வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டது. கேட்டது பொய்யில்லை. இந்த சம்பவம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. குங்கிலியர் மூச்சிரைக்க கோவில் வாசல் வந்து சேர்ந்தார். ஏற்கனவே #யானை #குதிரை எல்லாம் களைத்திருக்க சற்று கூட நிமிர்ந்து கொடுக்காமல் இருந்தபடியே இருந்தான் இறைவன். கைகளைப் பிசைந்தபடி மன்னர் கன்னிமூலை கணநாயகன் சந்நிதி முன் அமர்ந்துள்ளார்.
யாரைக் கேட்க நியாயம்? நியாயம் வழங்கும் மன்னவன் செய்யும் செயலா இது. நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்திய விதம் தவறு. போகட்டும்... இப்போது இது எதுவும் முக்கியமில்லை ... கடந்தது கடந்ததாகட்டும். இனி இந்த தவறு நடக்கக்கூடாது.
வேகமாக யானையைப் பிணைத்திருந்த பெருஞ்சங்கிலியை அவிழ்த்து தன்னுடைய கழுத்தில் கட்டிக்கொண்டார். கண்களில் இருந்து நீர் பெருகியது. இறைவா என் அருமை சிவமே அன்பினாலன்றி வெறும் கயிறால் வளைக்கமுடியுமா உன்னை அன்று அந்தப் பெண்மணியின் உயர்ந்த பக்திக்காக தாழ்ந்த உன் சிரம் நிமிரட்டும் இந்த மன்னனின் மனம் மாறட்டும் மக்களும் உன்னை ஒரு கல்லாகக் காணாமல் கருணைவடிவாய்க் காணட்டும். இது உனக்கு விருப்பமில்லாவிடில் எனது கழுத்து அறுபடட்டும் என மனம் விண்ணப்பித்தது. கூப்பிய கைகளும் மூடிய கண்களுமாக சங்கிலியை இழுக்க இதோ முற்றிலும் வளைந்திருந்த லிங்கம் மெதுவாக தலையை நிமிர்த்தியது.
யானைகள் குதிரைகளால் கட்டி இழுத்து முடியாததை சாதாரண மனிதனின் அன்பு சாதித்தது. கொற்றவன் குறுகினான். ஊர் குதூகலித்தது. அந்த இறையன்பர் எதுவும் நடவாதது போல திருக்கடையூர் திரும்பினார்
அவரது மெய்யன்பினை உலகம் உணர்ந்தது. இறைவன் மகிழ்ந்தார். தன்னைக் காட்டிலும் தன் அடியவர்கள் புகழப்படுவதை இறை விரும்புகிறது.
வாழ்க குங்கிலியக்கலயர்
அன்று நடந்து முடிந்ததை இன்றும் மறவாமல் இருக்க விரலளவில் மொத்தத்தையும் கொண்டு நிறுத்தியிருக்கிறார்கள். சிற்பத்தைக் கண்டதும் நம் நெஞ்சு பதைக்கிறது. எவ்வளவு ஆழ்ந்த அன்பு.
இடம்: தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோவில்
No comments:
Post a Comment