மதுரையை அடுத்த கீழடியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில்
3,500 ஆண்டு பழமையான பானைக் குறியீடுகளும், பல நூறு ஆண்டுகளாக இயங்கிவந்த இரும்பு உருக்காலை குறித்த தடயங்களும் கிடைத்துள்ளன.
எழுத்துக்கு முந்தைய வடிவம் கண்டுபிடிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்துள்ள வில்லுனி ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள ராமசாமிபுரம் மங்கலநாடு – அம்பலத்திடல் உள்ளிட்ட ஏரியாவில் சுமார் 173
ஏக்கரில் பண்டைக்கால பரப்பின் வாழ்விடம் அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் வன்னிமரம், தமிழர்களின் வீரத்தைக் குறிக்கிறது. பண்டைய தமிழர்கள், போருக்குப் போனால், போர் முடிந்தால்தான் வீட்டுக்குப் போவார்கள். அப்படி போர் முடியாத தருணங்களில், போர்க் கருவிகளை வன்னி மரத்தின் கீழ் வைத்துவிட்டு இளைப்பாறினார்கள் என புறநானூற்று பாடல்கள் கூறுகின்றன.
அதுமட்டுமல்லாமல், வன்னி மரத்தின் அருகில்தான் முதுமக்களின் தாழிக்கள் புதைக்கப்பட்டிருக்கும் என்பது வரலாறு. அந்த வகையில் இந்தப் பகுதியில் சுண்ணாம்பு கூட்டுக்கலவை பொருளால் ஆன சிறப்பு வாய்ந்த மேட்டுப்பகுதிகளில் நிறைய தாழிக்கள் புதைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கிடக்கின்றன. இந்த பானைக் குறியீடுகள், தமிழின் எழுத்து வகைகளை நமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்துள்ளதையும், இந்தக் குறியீடுகளில் இடம்பெற்றுள்ள தலைகீழ் சூலம் போன்ற அமைப்புகளால் போர்த் திறமிக்கவர் புதைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணர முடிகிறது.
இங்கு காணப்படும் இக்கீறல்களை எழுத்தின் முன்னோடி அடியாளமாகக் கருதலாம். இதுமட்டுமல்லாமல், தஞ்சாவூர் செம்பியன் கண்டியூரில் கிடைத்த பானைக் குறியீடுகளும், இந்தக் குறியீடுகளும் ஒரே மாதிரி இருப்பதால் இந்தக் குறியீடு, எழுத்து வடிவம் தோன்றுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்தவை என்று தெரியவருகிறது.
3,500 ஆண்டுகளுக்கு முந்தைய குறியீடாக இவை இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இரும்பு உருக்காலைகள்!
இந்நிலையில், புதுக்கோட்டையை அடுத்த பொற்பனைக்கோட்டை முதல் திருவரங்குளம் வரை பல இடங்களில் பண்டைக்கால இரும்பு உருக்காலை இயங்கியதற்கான தடயங்கள், உலோக உருக்கு சுடுமண் குழாய்கள், மண்ணாலான உருக்கு உலைகள், உருக்குக் கலன்கள் ஆகியவை இருப்பதாகச் சொல்கிறார் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன். இவரது தலைமையிலான குழுவினர் இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அவர் நம்மிடம், “திருவரங்குளம் பகுதியிலிருந்து பொற்பனைக்கோட்டை வரை உள்ள கோயிற்காடுகள் மற்றும் இரும்புக்கழிவுகளுடன் கூடிய மேடான சில பகுதிகளில் இரும்பு உருக்கு ஆலைகளின் மண்ணாலான உலைகள் பகுதியளவு சிதைந்த நிலையிலும் , இரும்புக் கழிவுகளை பிரித்தெடுக்க பயன்படுத்தப்பட்ட கலன்களும் பல இடங்களில் காணப்படுகின்றன.
செம்புராங்கற்பாறை படுகையில் அமைந்துள்ள உலோக உருக்காலை, கி.மு 483
–ஐ சார்ந்த கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் அருகே கண்டறியப்பட்ட வெள்ளித் தாதுவை பிரிக்கும் பழங்கால தொழிற்சாலையும், ஆர்மேனியாவிலுள்ள கி.மு
300-ஐ சேர்ந்த உலோகத்தாது பிரிக்கும் அமைப்புகளோடும் இது ஒத்துப்போகிறது. இரும்புத்தாது மூலப்பொருட்கள் அதிகம் கிடைக்கும் இடங்களிலேயே தொழிற்சாலைகள் அமைவது இயற்கை. அதன்படி இரும்புத்தாது உருக்கு உலைக்கு அருகிலேயே தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. இதன் அருகில் உள்ள பகுதிகளில் உருக்குக் கழிவுகள் நிறைய உள்ளன. உருக்கு குழிகளின் மேல் வரம்புகளில் அதிகவெப்பத்தைத் தாங்கும் செராமிக் மண்பாண்டங்களையோ அல்லது கலப்பு மண் உலோகக் கலன்களையோ அமர வைக்கும் வகையில், குழியின் மேற்புறத்தில் சிறுவரப்புகள் அமைக்கப்பட்டுள்ளதையும் இந்த அமைப்புகளில் காணலாம்.
அதுமட்டுமின்றி காற்றடிக்கும் துருத்தியை இணைக்கும் காற்று செலுத்து குழாயை பகுதியளவு பாறையிலும் அதன்மேல் மண் பூச்சு அமையும் வகையிலும் அமைக்கப் பட்டிருப்பதையும் காணலாம். இவ்வாறு பெறப்பட்ட கார்பன் இரும்பு கூட்டுக்கலவை சுடுமண் இரும்புக் கலன்களில் உருக்கப்பட்டு அவை சுடுமண் வார்ப்பு குழாய்களில் ஊற்றப்பட்டு நீண்ட கம்பி போன்ற இரும்பின் அடிப்படை அமைப்பாக பெறப் பட்டிருப்பதை இங்கு விரவிக் கிடக்கும் சுடுமண் வார்ப்புகள் மூலம் அறிய முடிகிறது. மேலும் இந்த சுடுமண் குழாய்களின் கீழ்ப்பகுதி மண்படுகையில் புதைக்கப்பட்டு அதனுள் உருகிய உலோகம் ஊற்றப்பட்டிருப்பதை நம்மால் அடையாளம் காணப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது"
என்றார்.
இவை அனைத்தும், புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட கே.ஆர் வெங்கட்ராம அய்யர் அவர்களால் தொகுக்கப்பட்டு
1938-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதுக்கோட்டை ஸ்டேட் மேனுவல் புத்தகத்தில் 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த வீரபாண்டியனின் நான்காவது ஆட்சியில் திருவரங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருக்குத்தொழிற்சாலைகள் இயங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1813 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் புள்ளிவிவரக் குறிப்பேட்டில் இரும்புத் தொழிற்சாலைகள் இயங்கிய இடங்களுக்கு பல வழித்தடங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகப் சமஸ்தானத்தால் 1811-ம் ஆண்டு பெறப்பட்ட பெய்லி அறிக்கையின்படி ஒரு ஆண்டுக்கு ரூபாய் 1300 மதிப்புள்ள இரும்பு உருக்கு தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1813 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் புள்ளிவிவரக் குறிப்பேட்டில் இரும்புத் தொழிற்சாலைகள் இயங்கிய இடங்களுக்கு பல வழித்தடங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகப் சமஸ்தானத்தால் 1811-ம் ஆண்டு பெறப்பட்ட பெய்லி அறிக்கையின்படி ஒரு ஆண்டுக்கு ரூபாய் 1300 மதிப்புள்ள இரும்பு உருக்கு தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இத்தகைய பல அரிய பொக்கிஷங்கள் உள்ள இந்த இடங்களை அகழ்வாராய்ச்சி செய்தால் இன்னும் ஏராளமான வரலாற்றுச் சிறப்பு மிக்க சான்றுகள் கிடைக்கும். அதனை அரசு மேற்கொள்ள முன்வர வேண்டும்” என்றார் மணிகண்டன்.
No comments:
Post a Comment