Saturday, January 29, 2022

மனிதர்கள் மூன்று வகை.


மனிதர்கள் மூன்று வகை.


சுயமாக முன்னுக்கு வருவதை விடப் பிறரைக் காப்பி அடித்து முன்னுக்கு வருவது சுலபம். பலர் இந்தப் பாதையைத்தான் விரும்புகிறார்கள். நான் இதை வெறுக்கிறேன். வித்தியாசமாக விளங்குவதுடன் வேறுபட்டு அரசியல் தனித் தன்மை காட்டுவதும் அவசியம். அவர்கள் பெறுகின்ற வெற்றி அசைக்க முடியாதது. இதுதான் கெüரவம். 

தெருவோரத்தில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து மசால் வடைக் கடை போட்டு ஒருவர் காசு சம்பாதித்தால் இன்னொரு தமிழனுக்கு (இந்தியனுக்கு) பொறுக்காது. உடனடியாக அதே மாதிரி மசால் வடைக் கடையை எதிரிலேயே தொடங்கப் பார்ப்பான். உளுந்துவடை என்று கூட ஐட்டத்தை மாற்றமாட்டான். எதிர்க்கடை மசால் வடையை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி வடை போட்டு அடுத்தவன் வியாபாரத்தில் மண் அள்ளிப்போடுவார்கள். இந்த ஈனப்புத்தி தேவையில்லை.

"பெரிதே உலகம்; பேணுநர் பலரே' என்ற சங்கத் தமிழன் சொல்லை விளங்கிக் கொண்டு ஒன்றையே சாராமல் புதிது புதிதாகப் பலப்பல செய்து பணம் சம்பாதிக்கப் பழகுவது அவசியம்.

மனிதர்கள் மூன்று வகை.

1. எல்லோரும் செய்வதையே தானும் செய்து செத்துப் போகிறவர்.

2. எவரும் செய்யாததைத் தான் செய்து வாழ்ந்து காட்டுகிறவர்கள்.

3. எவரும் செய்யமுடியாததைச் செய்து மரணத்தைக் கொல்கிறவர்கள்.

இதில் நாம் எந்த வகை என்று பிரித்துப் பார்க்க வேண்டும்.

ஊரோடு ஒத்துவாழ், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்ற அறிவுரையைத் தவறுதலாக அர்த்தம் செய்து கொண்டு பிறரைக் காப்பியடித்து வாழும் வாழ்க்கையை நான் வெறுக்கிறேன். எல்லோரும் செய்யாததைச் செய்பவராக இருப்பவர்களை மதிக்கிறேன். எவரும் செய்யாததைச் செய்பவர்களைத் துதிக்கிறேன்.

வயலினை வெறும் பக்கவாத்தியமாக வைத்திருந்த இசை உலகில் வயலினுக்குப் பக்கவாத்தியமாக முரட்டு மேளத்தை வைத்துக் கொண்டு அமர்க்களப் படுத்தியவர்கலைமாமணி குன்னக்குடி வைத்தியநாதன். தங்கள் அபூர்வ சாதனையில் வலையப்பட்டி சுப்பிரமணியன் அவர்களும் குன்னக்குடியும் ஈட்டிய புகழும் செல்வமும் ஏராளம். வித்யாசத்திற்கு உலகம் கொடுத்த வெகுமதி அது.

"லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்' என்று அமெரிக்காவில் அத்தனை பேரும் அரைத்த மாவையே அரைத்த போது "பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' என்று வித்யாசமாக விளித்ததால்தான் விவேகானந்தர் கவனிக்கப்பட்டார். மதிக்கப்பட்டார். பின் துதிக்கப்பட்டார்.

எங்கும் எப்போது தனித் தன்மையுடன் வித்யாசமாக இருங்கள். நீங்கள் கவனிக்கப் படுவீர்கள்.

வித்யாசம் வேறு; விபரீதம் வேறு. வேறுபாட்டை விளங்கிக் கொள்ள வில்லை என்றால் வித்யாசமான விபரீதங்கள் உங்களுக்கு விளையும். அதையும் விளக்கிச் சொல்லி விடுகிறேன்.

புது மணத் தம்பதிகள் தேனிலவுக்கு எங்கே போவது என்று பேச்சு வந்தது. ""இதுவரை தேனிலவுக்கு வித்யாசமா எந்த ஜோடியும் போகாத இடத்துக்கு என்னைக் கூட்டிப் போகவேண்டும்'' என்றாள் மனைவி. ""ஸ்கூட்டரில் ஏறு'' என்று மனைவியைக் கூட்டிக் கொண்டு சுடுகாட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தினான் கணவன். ""சீச்சீ...சுடுகாட்டு ஹனிமூனா?'' சீறினாள் மனைவி. கணவன் ""அ...இந்த இடத்தை என்ன அவ்வளவு மட்டமா நினைக்கிறே? இங்கே வர்றதுக்கு அவனவன் சாவுறான்'' என்று சுடுகாட்டின் மேன்மையைச் சொன்னான். இது வித்யாசம் அல்ல. விபரீதம்.

உலக நாடுகளில் விடுதலைப் போர் நடத்திய எல்லாத் தலைவர்களும் கத்தி, துப்பாகிக்கி, பீரங்கி, கப்பல், விமானம் என்பதை நம்பிப் போராடினார்கள். குஜராத்திலிருந்து புறப்பட்ட அந்த ஒற்றை மனிதன் எந்த ஆயுதமும் எடுக்காமல் போர்க் களத்தில் புகுந்தான். ""இந்த நாடு என்னுடையது. உன்னுடையது அல்ல...'' என்ற ஒற்றை உண்மையை பிரிட்டிஷார் முன் வைத்துப் போராடினான். அந்த சத்தியத்தின் முன் எல்லா ஆயுதங்களும் கூர் மழுங்கிப் போயின. யார் அவர்? மகாத்மா காந்தி.

நிராயுதபாணியாய் நின்று போராடும் ஒற்றை மனிதனின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்கள் வைத்திருக்கும் பிரிட்டிஷ் சர்க்காரால் நசுக்க முடியவில்லையா?'' என்று எதிர்க்கட்சிகள் பாய்ந்த போது சர்ச்சில் சொன்ன பதில் ஆழமானது. ""அந்த மனிதன் கத்தியை எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன். துப்பாக்கியைத் தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன். பீரங்கி எடுத்துப் போராடினால் நான் குண்டுமழை பொழிந்து அழித்திருப்பேன். அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார். சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நண்பருக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார் சர்ச்சில்.

வித்யாசமான ஆயுதத்தைக் கையில் எடுத்தார். காந்தி கவனிக்கப்பட்டார். உலகம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உலகத்தைப் பாதித்த 100 பேர் என்ற பட்டியல் எழுதினால் அதில் மகாத்மா காந்தியும் ஒருவர். உலக வரலாறு அவரை ஒருபோதும் ஒதுக்காது.
வித்யாசமாக விளங்குபவர்கள் கவனிக்கப்படுவார்கள். விபரீதமாக இருப்பவர்கள் விலக்கப்படுவார்கள்.

பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையுடன் பல பேர் பவனி வரும் திருமண வீட்டில் பளிச்சென்று கைத்தறிப் புடவையைக் கஞ்சி போட்டு கட்டிக் கொண்டு ஒற்றை ரோஜாவைத் தலையில் வைத்திருக்கும் பெண்ணாக இருங்கள். சகோதரிகளே.... நீங்கள் கண்டிப்பாகக் கவனிக்கப்படுவீர்கள்.

வித்தியாசமாக இருங்கள். வெற்றி நிச்சயம்!வணக்கம்
#சுந்தா்
#அருணகிாி

No comments:

Post a Comment