-சிறுவயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்த இவையெல்லாம் காரணம் அலெர்ட்
`ஒரு பெண் குழந்தை
பூப்பெய்துவதற்கான சராசரி வயது 12.4 ஆக இருந்தது. அது தற்போது 11.9 ஆகக் குறைந்துள்ளது. சராசரியாக 5 அல்லது 6 மாதங்கள் குறைந்துள்ளன. உலகமயமாக்கலுக்குப் பிறகு அதிகரித்துள்ள துரித உணவு கலாசாரம், ரசாயனங்களின் பயன்பாடு, விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு இவை அனைத்தும் பெண் குழந்தை முன்னதாகவே பூப்பெய்துவதற்கான காரணங்கள். மற்றொரு முக்கியக் காரணி, குறைவான உடல் உழைப்பு.
முன்னர், குழந்தைகள் பள்ளிவிட்டு வந்ததும் வெளியில் சென்று வியர்க்க, விறுவிறுக்க விளையாடுவார்கள். ஆனால் இன்று வெளியில் விளையாடுவதே குறைந்துவிட்டது. பள்ளி முடிந்ததும் டியூஷன், நடன வகுப்பு, பாட்டு வகுப்பு என்ற பல பொறுப்புகள் அவர்கள் மேல் சுமத்தப்படுகின்றன. அதனால் குழந்தைகள் விளையாட்டு என்பதையே மறந்துவிட்டனர். மற்றொருபுறம் செல்போன், ப்ளே ஸ்டேஷன் என கேட்ஜெட்களுக்கு அடிமையாகி, உடல் உழைப்பைச் செலவழித்து விளையாடுவதைக் குழந்தைகள் புறக்கணிக்கின்றனர். இதன் மூலம் உடல் பருமன் ஏற்பட்டு, சிறிய வயதிலேயே பருவமடைந்துவிடுகின்றனர்.
துரித உணவுகள், ரசாயனங்கள் ஆகியவற்றின் மூலம் பூப்பெய்தலுக்குக் காரணமான ஹார்மோன்கள் குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே தூண்டப்படுகிறது. இதனால் குழந்தைகள் சிறிய வயதிலேயே பூப்பெய்துகின்றனர். பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வதாலும், குழந்தைப் பெற்றுக்கொள்வதாலும் அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளும் ஆரோக்கியமான வளர்ச்சி இல்லாமல் முன்னதாகவே பூப்பெய்துவதற்கு வாய்ப்புள்ளது.வாழ்க்கை முறை மாற்றத்தால் முன்னதாகவே பூப்பெய்தல் மட்டுமன்றி, மாதவிடாய் சுழற்சி நிறைவடைவதும் (மெனோபாஸ்) முன்னதாகவே நடைபெறுகிறது. முன்பெல்லாம் சராசரியாக பெண்களுக்கு 52 வயதில் மெனோபாஸ் ஏற்பட்டது. தற்போது 40, 45 வயதிலேயே மெனோபாஸ் ஏற்பட்டுவிடுகிறது.
பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, பூப்பெய்துவதற்கு முன்னால் உயரம் அதிகரிக்கும். மார்பகங்கள் வளர்ச்சியடைந்து, அக்குள், இனப்பெருக்க உறுப்பு ஆகியவற்றில் முடி வளரத் தொடங்கும். அதன் பின்னர் பூப்பெய்துவார்கள். இதுதான் படிநிலை. ஆனால், ஹார்மோன்கள் தூண்டப்படுவதால் சில குழந்தைகள் வளருவதற்கு முன்னதாகவே அடுத்தடுத்த நிலைகளை எட்டிவிடுவர்.
முன்னதாகவே பூப்பெய்தும் குழந்தைகளுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி அல்லது மாதவிடாயின்போது அதிக அளவில் ரத்தம் வெளியேறுதல், ரத்தசோகை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் அந்தப் பெண் வளர்ந்து கருத்தரிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். ஆண் குழந்தைகளிலும் முன்னதாகவே பருவமடையும் பிரச்னை இருக்கிறது. ஆனால், ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளையே இந்தப் பிரச்னை அதிகம் பாதிக்கிறது. பெண் குழந்தைகளுக்குப் பருவம் அடைவதற்கு முன்னதாக உடலில் மாற்றங்கள் ஏற்படும். ஆண் குழந்தைகளுக்குப் பருவமடைந்த பின்னர் குரல் மாற்றம், மீசை முளைத்தல், இனப்பெருக்க உறுப்பில் முடி வளர்தல் ஆகிய மாற்றங்கள் நிகழும். முன்னதாக பருவமடையும் ஆண் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது. துரித உணவுகள், பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்து விட்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் கலக்காத காய்கறிகள், பழங்கள், பழச்சாறு அடங்கிய உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம், உடல் உழைப்பை அதிகரிப்பதன் மூலமும் இயற்கையாகவே இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணமுடியும்.பெண் குழந்தைக்கு 7,8 வயதிலேயே மார்பகங்கள் வளர்ச்சியடைவது போன்று பெற்றோர் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அங்கு ஹார்மோன் தெரபி என்ற சிகிச்சையின் மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்"
பெண் குழந்தைகள் முன்னதாகவே பூப்படைவதும், ஆரோக்கிய வாழ்க்கை முறையின் மூலம் அதைத் தடுப்பதும் பெற்றோரின் கைகளில் தான் இருக்கிறது.
No comments:
Post a Comment