Wednesday, September 23, 2015

எண்ணெய் தேய்ச்சு குளிங்க :-

‘‘வாரத்துக்கு ரெண்டு தடவத் தலைக்கு நல்லெண்ணெய் தேய்ச்சுக் குளிங்க, பெரும்பாலான நோய்கள் அண்டாது" என்று சொன்னால், பெரும்பாலானவர்கள்,
"தீபாவளிக்குத் தேய்ச்சு குளிக்கிறோமே, அதைத்தானே சொல்றீங்க" என்று கேட்பார்கள். எண்ணெய் குளியல் என்றாலே, "அது தீபத் திருநாளன்று மட்டும்" என்று மக்களின் மனதில் வலுவாகப் பதிந்துவிட்டது.
ஆத்திச்சூடியில் ஔவையார் சொல்லும் ‘சனி நீராடு' என்றாலும் சரி, நமது பெரியவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளி என்றாலும் சரி, இரண்டும் தரும் பலன் ஒன்றுதான். உடல்நலனை உடல் வெப்பத்தைச் சீர்ப்படுத்தவே அப்படிச் செய்யச் சொல்கிறார்கள்.
சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் வலியுறுத்தப்பட்டு, நம் முன்னோர்கள் அதைத் தொடர்ந்து பின்பற்றி வந்தார்கள்.
ஆனால், குளிப்பதே பிரச்சினையாக உள்ள இன்றைக்கு எண்ணெய்க் குளியல் எல்லாம் எப்படி முடியும் என்று கேள்வி கேட்கிறோம். வேறு வழியில்லை, நவீன வாழ்க்கை உருவாக்கும் நெருக்கடி களையும், அதனால் உடல்நலனில் ஏற்படும் பிரச்சினைகளைக் களையவும் எண்ணெய்க் குளியல் அவசியம்.
குளியல் முறை
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும், புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுக வேண்டும் என்கிறது சித்த மருத்துவம். அத்துடன், ‘எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்' எனும் பிணியணுகா விதி பாடல், எண்ணெய் தேய்த்த நாளன்று குளிக்க, வெந்நீரையே பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ‘சதுர் நாட்கொருகால் நெய்முழுக்கைத் தவிரோம்' என்ற சித்தர் தேரையரின் வரிகள், நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெயிட்டுத் தலை முழுக வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறது.
தீரும் நோய்கள்
சீரகம் சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெயைத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு, அதிக உடல் சூடு, தூக்கமின்மை, மன அமைதியின்மை போன்ற பித்த நோய்களைத் தடுக்கலாம், குறைக்கலாம். செம்பருத்தி, நெல்லிக்காய், கரிசாலை சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெய், முடி வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இளநரையைத் தடுக்க உதவும், மனதை அமைதிப்படுத்தும்.
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அரக்குத் தைலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உடல் நாற்றம், தொண்டை கம்மல், ரத்தக் குறைவு போன்ற நோய்கள் ஓட்டம் எடுக்கும். சளி, இருமல், பீனிசம் (சைனஸ்) போன்ற கப நோய்களைப் போக்கச் சுக்குத் தைலத்தால் தலை முழுகலாம்.
அத்துடன் வாரம் இரு முறை தலை முதல் கால்வரை எண்ணெய் தேய்த்துக் குளித்துவருவதால், சரும ஆரோக்கியம் மேம்படும். உடலின் வெப்பம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தோல் நோய்கள் தொலைந்து போகும், பசி அதிகரிக்கும். உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால், குருதி ஓட்டம் சீரடையும், உடலின் வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, பல வாத நோய்கள் குணமடையும். நவீன மனிதர்கள் அதிகம் அவதிப்படும் மன அழுத்தம் குறையும்.
தவிர்க்க வேண்டியவை
எண்ணெய்க் குளியல் நாளன்று அசைவ உணவு வகைகள், காரம் அதிகமுள்ள பொருட்கள், மசாலாப் பொருட்கள், எளிதில் செரிக்காத பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்து முழுகிய நாளன்று, உடல் சற்றுப் பலமிழந்து காணப்படுவது இயற்கையே. எனவே, கடினமான வேலைகளைச் செய்யாமல் ஓய்வெடுப்பது நல்லது. அன்றைக்குப் பகலில் உறங்குவதையும் உடலுறவையும் தவிர்க்க வேண்டும்.
‘தலை உரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டாள்' என்கிறது ஆசாரக்கோவை. அதாவது தலைக்குத் தேய்த்த எண்ணெயை உடலின் மற்றப் பகுதிகளில் தடவுவதால், தலையிலிருக்கும் அழுக்கு, உடலோடு ஒட்டி பல சரும நோய்களை உண்டாக்கும் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறது. அதனால் தலை, உடலுக்குத் தனித்தனியே எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாத திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டுமென்றால், எண்ணெயோடு நீர் அல்லது பசு நெய் சேர்த்துக் குளிக்கலாம்.
அதேபோலத் தினமும் நீராடும்போது, தலையையும் சேர்த்து முழுகாமல், கழுத்துக்குக் கீழ் மட்டும் குளிப்பது நிச்சயம் நல்லதல்ல!
முழுமையாகக் குளிப்பதே குளியல்..
-தமிழன் வருவான்

அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்....

"அரைஞாண்" நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி பட கூடாதுன்னு தான் பா கட்டிவிடுறோம் னு சொல்லுவாங்க ....
உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?? நிச்சயமாக இல்லை ....
அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது
முதலாவது பலன்
-------------------------------------
அரைஞாண் என்பது கிராமத்தில் வசிக்கும் அன்பர்களுக்கு அவசர கால் உதவி..கழனியிலும் காடுகளிலும் தற்பலம் மறந்து பிறர் நலம் பேணும் ஏழைகளுக்கு கரம் கொடுக்கும் ராஜ தந்திரி அது..
விஷம் கொண்ட பூச்சிகள், பாம்பு தடம் பதித்து ஊடாடும் போது அவர்களுடன் வசிப்பவை அவை. எதிர்பாராமல் தீண்டப்பட்ட போது கதிர் முற்றிய கழனியில் கயிறு கிடைப்பது அரிது. விஷத்தின் கடிவாய்க்கும்
இதயத்துக்கும் இடையே மருத்துவத்திற்குச் செல்லுமுன் தடைபோடும் உத்திக்கு அரைஞாண் கயிறு உற்ற தோழன்.
கையினால், விஷம் உற்ற நேரம் அரைஞாண் கயிறு அறுத்தெடுக்கப்பட்டு அவசர உதவியாய் இறுக்கிக் கட்டப்படுவது வருமுன் காக்கும் உதவி. எப்போதும் எதிர்பார்த்து தப்பாமல் உதவும் அந்தக் கயிறு ஒரு பாட்டிவைத்திய முன்னோடி.
மருத்துவ பலன்
-----------------------------------
ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாகமாறியது.
இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள்.
இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
இப்போது வெள்ளி , தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விடயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத் தான் செய்கிறார்கள்.
இந்த அரைஞாண் கொடியின் மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட கண்ட தாயத்துகளை கட்டி தொங்க விடுவதும், அது திருஷ்டி காக என்று புறம்பு கூறுவதும் தவறு....
நம் முன்னோர்கள் நம் பெருமைகளை நமக்கு சொல்ல மறந்ததை போல அல்லாமல் இனி நாமாவது நம் பிள்ளைகளுக்கு இது போன்ற நம் பாரம்பரியத்தை விட்டுகொடுகாமல்சிறு சிறு விடயங்கலளையும் அவர்களுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....
வாழ்க தமிழ்! வளர்க தமிழர் பாரம்பரியம்!
-தமிழன் வருவான்

Tuesday, September 22, 2015

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் ஏன் குளிக்க வேண்டும்

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்
ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.
சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.
இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.
இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.
இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். 
நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

உலக விஞ்ஞானிகள் வியக்கும் தமிழனின் பஞ்சாங்கம்!

ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்
பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை?
இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்!
உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை!
இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!
தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்! தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்!
சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை!
1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை
காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!
அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்:
“இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.
அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.
நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது.
பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கிரகணத்தைப் பற்றி மட்டும் அவர்கள் கூறுவது சரியாய் இருக்குமானால் சாஸ்திரம் செய்யக் கூடாது என்று கூறுவது பொய்யாகவா இருக்கும்?சாஸ்திரம் என்பது ஒரு கடினமான கணக்கு.அதுவும் ஒரு வகை விஞ்ஞானம்.வயிற்றுப் பிழைப்புக்காக அதைத் தவறாகப் பயன்படுத்தும் கூட்டத்தால் அதன் மதிப்பு குறைந்து விட்டது.
ஆனால் நமது முன்னோர்கள் கிரகணம் பற்றி முன்பே கூறும் அளவில் வானவியல் கணித மேதைகளாக இருந்துள்ளார்கள்.இதை உலகம் இந்த கிரகணம் பற்றிய அவர்களது மதிப்பீட்டில் இருந்து தெரிந்துகொண்டு வாழ்த்துகிறது.
இப்படிப்பட்ட கணித இயல் நமக்கு இருந்தும் இதை மேலும் மேலும் ஆராய்ந்து வளர்த்துக் கொள்ள முன்வரவில்லை.அதனால் உலகில் நாம் இன்று பின் தங்கி உள்ளோம்.
இனியாவது நமது வான இயல் கணிதங்களை ஆராய்ந்து தெளிவாக்கி முன்னேறுவோமா என்பது தான் கேள்வி.”

Monday, September 21, 2015

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்:


ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார்.
அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும்
பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.
ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

விரதத்தின் [Fasting] மகிமை!


விரதம். அது நம் உடலுக்குள் இயங்கும் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பதற்கும் உருவான ஒரு அறிவியல் முறை. எப்படி என்கிறீர்களா?
மிருகங்கள் முதற்கொண்டு மனிதர்கள் வரை உடல் நோய்வாய்ப்ப்படும்போது சாபிடாமல் அல்லது குறைந்த உணவு உட்கொள்வது பழக்கம். அதை நாம் ஒரு ஒழுங்கு முறையாக செய்தோமானால் நமது உடல் மீண்டும் நல்ல நிலைக்கு வந்துவிடும். இதுவே உடலின் இயங்கும் முறையாகும். இதற்கு என்ன ஆதாரம் என்கிறீர்களா?
அறிவியலாளர்கள் ஒரு உண்மையை தற்சமயம் கண்டு பிடித்திருக்கிறார்கள். அது என்னவென்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டால் அது எலி உடம்பில் இருக்கும் புற்று நோயின் அளவை குறைக்கிறது. நம்ப முடிய வில்லையா? இந்த வலைத்தளத்தை படியுங்கள் http://www.sciencenews.org/…/Possible_anticancer_power_in_f…. ஏன்? இந்த முறையால் நமது புற்றுநோய்க்கு கூட விடை கிடைக்கலாம்.
எனவே வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் உடலுக்கு உணவிடம் இருந்து விடுதலை கொடுங்கள்.
பிறகு பாருங்கள் வித்தியாசத்தை. ஆனால் சர்க்கரை நோயாளிகள் அவரவர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இதை கடைபிடியுங்கள்.

Sunday, September 20, 2015

வெளிநாட்டுப் பொருட்களின் மீதான மோகமும், ஆர்வமும் நமக்கு ரொம்பவே அதிகம்.

வெளிநாட்டுப் பொருட்களின் மீதான மோகமும், ஆர்வமும் நமக்கு ரொம்பவே அதிகம். டி.வி., லேப்டாப், ஏ.சி. என்று ஃபாரீன் பொருட்களின் மேல் இருந்த நம்பிக்கை இப்போது நாம் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள் மீதும் திரும்பி இருக்கிறது. 'பார் கோட் ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு பளபளக்கும் பழங்களை, ஸ்டைலாக டிராலியைத் தள்ளிக்கொண்டு போய் வாங்க, பழக்கபட்டு விட்டோம்.


வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு இறக்குமதி செய்யப்படும் பழம் ஆப்பிள். 'வாஷிங்டன் ஆப்பிள்’, 'ராயல் காலா ஆப்பிள்’, 'பியூஜி ஆப்பிள்’ என்று விதவிதமான ஆப்பிள்கள் கடைகளை அலங்கரிக்கின்றன. இந்த ஆப்பிள்களின் 'பளிச்’ தோற்றத்தைப் பார்த்தாலே வாங்கத் தூண்டும்.


ஆப்பிளின் பளபளப்புக்கு என்ன காரணம்? விவசாயியும் இயற்கை ஆர்வலருமான அரச்சலூர் செல்வம் விலாவரியாகப் பேசுகிறார்...


''வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருக்க 'வேக்ஸ்’ எனப்படும் கோட்டிங், அதாவது நம் வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பது போல, ஒரு லேயர் அந்த ஆப்பிள் மீது பூசப்படுகிறது. சில நாடுகளில் வேக்ஸ் இடத்தை 'கெமிக்கல் கோட்டிங்’ பிடித்துக் கொள்கிறது! இது எந்த வகையான கெமிக்கல் என்பது ஆப்பிளை வாங்கும் யாருக்கும் சொல்வது இல்லை; வாங்குபவரும் இதுபற்றிக் கேட்பது இல்லை! இப்படி முலாம் பூசப்பட்ட ஆப்பிளை 'கோல்டு ஸ்டோரேஜ்’ (Cold storage) செய்து அனுப்பிவைக்கிறார்கள். இந்த ஆப்பிளை என்னதான் கழுவினாலும் அதன் மீது பூசப்பட்ட 'வேக்ஸ்’ அல்லது 'ரசாயன முலாம்’ போக வாய்ப்புக் குறைவு.

அன்னாசி, மாதுளை, திராட்சை போன்ற பழ வகைகளும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அன்னாசிப் பழத்துக்கு 'வேக்ஸ் கோட்டிங்’ கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதில் பாதிப்பு இருக்காது. காரணம் அந்தப் பழத்தை தோல் சீவிதான் சாப்பிடுகிறோம். மாதுளையும் அதே போலத்தான். ஆனாலும் இந்தப் பழங்களில் 'கெமிக்கல் முலாம்’ பூசப்பட்டு இருந்தால், அந்த கெமிக்கலின் தாக்கம் பழத்துக்குள் ஊடுருவிப் பாய்ந்து இருக்கவே செய்யும்.


இந்தியாவுடன் ஒப்பிடும்போது மற்ற நாடுகளில் பூச்சிக் கொல்லி மருந்துகளை குறைந்த அளவிலேயே பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளில் 'களைக் கொல்லி’ மருந்துகளைத்தான் அதிக அளவில் பயன்படுத்துவார்கள். இதனால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. ஆனாலும் வெளியில் பூசப்பட்டு இருக்கும் வேக்ஸ் மற்றும் கெமிக்கல் கோட்டிங் எப்படி இருந்தாலும் உடலுக்குக் கேடானதுதான்!


தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், மாதுளை, அன்னாசி போன்ற பழங்களை அரசு தடைசெய்ய வேண்டும். நம் ஊரில் கிடைக்காத பழங்களாக இருந்தால் வெளிநாட்டில் இருந்து வாங்கலாம். இது எல்லாமே இங்கேயே கிடைக்கும்போது எதற்காக வெளிநாட்டில் இருந்து பழங்களை இறக்குமதி செய்ய வேண்டும்?'' என்று கேட்கிறார்.


உருளைக் கிழங்கு, காலி ஃபிளவர், கேப்சிகம், கேரட், ஃப்ருகோலி போன்ற காய்கறிகளும் வெளிநாடுகளில் இருந்து இங்கே இறக்குமதியாகின்றன. இவை அனைத்தும் வெளிநாடுகளில் பதப்படுத்தி இந்தியாவுக்கு வருகின்றன. இந்தக் காய்கறிகள் இந்தியாவிலும் விளைகின்றனவே!


உணவு ஆலோசகர் ஷைனி சந்திரனிடம் பேசினோம். 'வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பழங்கள் எந்த வெப்பநிலையில் குளிர்விக்கப்படுகிறது? எவ்வளவு நாட்கள் ஸ்டோரேஜ் செய்திருப்பார்கள் போன்ற விவரங்கள் எதுவும் நமக்குத் தெரியாது. பதப்படுத்தப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்களுக்குப் பிறகுதான் இந்தப் பழங்கள் மார்கெட்டுக்கு வந்து சேரும். இப்படி வருவதால் அவற்றில் இயல்பாக இருக்கும் சத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.


பழங்கள் பறிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குள் சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். வெளிநாட்டுப் பழங்களின் மீது தடவப்பட்டு இருக்கும் வேக்ஸ் கத்தியை வைத்துச் சுரண்டினால்தான் போகும். அப்படியே சாப்பிடுவது உடல்நலத்துக்கு ஆரோக்கியம் இல்லை. பார்ப்பதற்கு 'பளிச்’சென இருப்பதால், 'வெளிநாட்டுப் பழம் எவ்வளவு ஃபிரஷ்ஷா இருக்கு.,.’ என்ற நினைப்பில் பலர் வாங்குகின்றனர். இந்தப் பழங்களில் பூச்சியோ புழுவோ பார்க்க முடியாது.


நம் ஊர் பழங்களில் பூச்சி, புழு இருப்பது இயல்பு. பறவைகளோ, பூச்சிகளோ கடித்த பழங்கள் என்றால் அதை நம்பி தைரியமாக வாங்கலாம். காலி ஃபிளவரில் புழு இருப்பதைப் பார்த்து முகம் சுளிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். உண்மையில் அதுதான் பூச்சிக்கொல்லி, ரசாயனம் ஏதும் இல்லாத நல்ல காலி ஃபிளவர்.


நல்ல உணவுப் பொருட்கள் எதுவாக இருந்தாலுமே அது இரண்டு நாட்களில் அழுகிவிடும். அண்மையில் எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வெளிநாட்டு ஆப்பிளை வாங்கி காரில் வைத்திருந்தார். அதை அவர் 12 நாட்களாக எடுக்க மறந்துவிட்டார். அதன் பிறகு எடுத்துப் பார்த்தபோதும் அந்த ஆப்பிள் கெட்டுப்போகாமல் அப்படியே புத்தம்புதியதாக இருந்தது. அப்படியானால் அந்த ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருக்க எந்த அளவுக்கு அதில் ரசாயனம் சேர்த்திருக்க வேண்டும்? நினைத்தாலே பகீரென இருந்தது.


இயற்கையில் பிரஷ்ஷாக நம் ஊரில் எவ்வளவோ பழங்கள் சீசனுக்குத் தகுந்தாற்போல கிடைக்கிறன. அந்தப் பழங்களை வாங்கிப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. கொய்யாப் பழம், சீத்தாபழத்தில் இல்லாத சத்துக்களா வெளிநாட்டு பழங்களில் இருக்கின்றன? கிராமத்துப் பக்கம் சந்தைகளிலும், தள்ளு வண்டிகளிலும் பழங்களை பேரம் பேசி வாங்கிய காலமெல்லாம் போய், நாகரிகத்தின் உச்சத்தில் நாம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை வாங்குவதை கௌரவமாக நினைக்கிறோம். அது உடல்நலத்துக்கு நல்லதில்லை என்பதை எப்போது உணரப் போகிறோம்?'' - வேதனையோடு சொன்னார் ஷைனி சந்திரன்.


நலம் காக்கும் நம்ம ஊர் பழங்கள்
நம் ஊரில் கிடைக்கும் பழங்களையே மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர் சித்த மருத்துவர்கள்.


மாம்பழம் - உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
கொய்யா - எலும்பின் தன்மையை உறுதியாக்கும்.


மாதுளை - வறட்டு இருமலையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தும். 
விளாம்பழம் - பித்தத்தை சரிப்படுத்தும்.