தினம் ஒரு ஆலயம் - அதிசயம்
இச்சிவாலயத்தின் மூலவர் வட ஆரண்யேஸ்வரர், தாயார் வண்டார்குழலி.
சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
நடராஜ பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபை ஆகும்.
வடஆரண்யம் என்றால் ஆலமரக்காடு என்று பொருள்படும். பண்டையக் காலத்தில் இத்தலம்
ஆலமரங்கள் நிறைந்திருந்த காடாக காட்சியளித்ததால் இப்பெயர் பெற்றது.
கி.பி. 5ம் நூற்றாண்டு அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன் எழுத்தப்பட்ட சோழர் கால கல்வெட்டு இங்கு கிடைக்கப்பட்டதால் அதற்கு முன்னர் இருந்து இந்த கோயில் இருந்திருக்கவேண்டும் என்று உணர முடிகிறது.. கோயிலை முதன் முதலில் கட்டியவர் பற்றிய குறிப்புகள் இல்லை.
இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது.
சிவபெருமான் காரைக்கால் அம்மையாருக்கு காட்சி தந்த தலமும் இதுவே.
அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம்.
நடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டம் என்பது சிவபெருமான் தனது ஒரு காலை வானை நோக்கி செங்குத்தாக உயர்த்தி ஆடி காளியின் கர்வத்தை அடக்கிய, மிகவும் கடினமான தாண்டவ நடனம்;
இந்த நடனத்தின்போது, கீழே விழுந்த காதணியை சிவபெருமான் தன் காலால் எடுத்து மீண்டும் அணிந்துகொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.
சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும்; திருமுறைபேழையும் உள்ளன.
திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
அதிசயம் 1: சிலையில் ஆச்சரிய பாவனை
இங்குள்ள அம்பாளை, “சமிசீனாம்பிகை’ என்பர். “சமிசீனம்’ என்றால், “ஆச்சரிய பாவனை!’ இவளது விக்ரகம், நடராஜரின் நடனத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் நிற்பது போல செதுக்கப்பட்டுள்ள தால், இப்படி ஒரு பெயரை சூட்டினர்.
அற்புதமான சோழர் காலச் சிற்பங்கள், தூண்களில் உள்ள சிலைகள், யாழி சிற்பங்கள் ஆகியவை சிறப்பு.
அதிசயம் :2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செப்பேடுகள்:
தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன.
ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள், சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன.
இவை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.
அதிசயம் 3:
இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் உள்ள மாந்தீஸ்வரர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சனி பகவானின் இரண்டு மைந்தர்களில் ஒருவர் மாந்தி. ஒருமுறை, மாந்தி தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க திருவாலங்காடு திருத்தலம் வந்து ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றார்.
மாந்தி வழிபட்ட சிவலிங்கம் மாந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்




